கி. சீலதாஸ் – முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகம்மதின் நம்பிக்கைக்கு உட்பட்டவர். அவரின் துணையால் நாட்டின் பிரதமர் பதவியைப் பெற்றவர் டத்தோ ஶ்ரீ நஜீப் ரசாக்.
பல ஊழல்கள், நம்பிக்கை மோசடி, அதிகாரத்தைத் தவறான காரணத்துக்காகப் பயன்படுத்தினார். தமது சொந்த நலனுக்காகப் பயன்படுத்தினார் என்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார் நஜீப்.
அந்தக் குற்றச்சாட்டு மகாதீர் 2018ஆம் ஆண்டு மீண்டும் பிரதமராகப் பதவி ஏற்றபோது சுமத்தப்பட்டது. நஜீப் குற்றவாளி என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து ஈராயிரத்து பத்து ரிங்கிட் மில்லியன் அபராதமும் பன்னிரண்டு ஆண்டு சிறைத்தண்டனையும் விதித்தது. இந்தத் தண்டனைகளை எதிர்த்து நஜீப் மேற்கொண்ட மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்தது மேல்முறையீட்டு நீதிமன்றம்.
இந்தத் தீர்ப்பானது உயர் நீதிமன்ற நீதிபதி முகம்மது நஸ்லான் முகம்மது கசாலியின் தீர்ப்பு மறு உறுதி செய்யப்பட்டது. இதற்கு மேலே முறையீடு செய்ய வேண்டுமானால் கூட்டரசு நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும். கூட்டரசு நீதிமன்றம் நஜீப் மேல் முறையீடு செய்ய அனுமதி வழங்கியது. மேல் முறையீடு வாதங்களைச் செவிமடுக்க தேதியும் நிர்ணயிக்கப்பட்டது.
கூட்டரசு நீதிமன்ற விசாரணை நெருங்கிக் கொண்டிருக்கும்போது இந்த நாட்டில் தமது வழக்கை நிபுணத்துவத்துடன் விவாதிக்க தகுந்த வழக்குரைஞர் கிடையாது. எனவே, இங்கிலாந்தில் உள்ள அரசியார் வழக்குரைஞரைத் தமது வழக்கை விவாதிக்க அனுமதிக்க வேண்டுமென மனு செய்தார் நஜீப்.
இந்த நாட்டில் சிறந்த வழக்குரைஞர்கள் இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல அவருடைய அப்போதைய வழக்குரைஞர் டான் ஶ்ரீ ஷஃபி நல்ல திறமையும் அனுபவமிக்கவர் என்பது நாடறிந்த உண்மையாயிற்றே. இந்த நாட்டில் திறமையான வழக்குரைஞர் இல்லை என்பதை ஏற்க மறுத்தது கூட்டரசு நீதிமன்றம். அது நியாயமான முடிவே.
ஒரு வழக்கை நடத்த வழக்குரைஞருக்குச் சட்டமும், வழக்கை நடத்தும் முறையும் தான் தெரியும். குற்றம் சம்பந்தமான நெளிவு சுளிவுகள் எல்லாம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குத்தான் தெரியும். வழக்குரைஞர் தெரிந்திருக்க வழியில்லை. எனவே, தமது நூதனமான வழக்கைப் புரிந்துகொண்டு வாதாட மோசடி, ஊழல் போன்ற வழக்குகளில் நிபுணத்துவம் கொண்டவர்கள் இங்கிலாந்தில் தான் இருக்கிறார்கள் என்பது ஏற்கத்தக்க கருத்தல்ல. நியாயமான கருத்தும் அல்ல.
அதோடு நின்றுவிடவில்லை நஜீப். உயர் நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி நஸ்லான் வங்கி கணக்கில் பத்து லட்சம் ரிங்கிட் எப்படி வந்தது? அது 1MDB வாடை வீசுகிறது என்று இங்கிலாந்தில் அடைக்கலம் கண்டுள்ள இந்த நாட்டு சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி ஓடியவர் வெளியிட்ட ஒரு செய்தியைப் பெரிதுபடுத்தி, வழக்கை விசாரித்த நீதிபதி நஸ்லான் தமது வழக்கை விசாரித்திருக்கக்கூடாது என்று புகார் செய்தார் நஜீப்.
அந்தக் குற்றச் சாட்டோடு 1MDB தொடர்பான விஷயங்களில் நீதிபதி நஸ்லானுக்குத் தொடர்பு உண்டு. அவர் “மே பாங்க்” வங்கியின் பிரதான சட்ட ஆலோசகராக இருந்தார் என்ற காரணத்தை முன்வைத்து நஸ்லான் வழக்கை விசாரித்திருக்கக்கூடாது என்றார் நஜீப்.
இந்த மனுவின் மீதான விசாரணை நெருங்கிக் கொண்டிருக்கும்போது தமது வழக்குரைஞரை நீக்கி புது வழக்குரைஞர் நிறுவனத்தைத் தமது வழக்கை விவாதிக்க நியமித்தார். இந்தப் புது வழக்குரைஞர்களில் குழுமத்தில் முன்னாள் சட்ட அமைச்சரும், முன்னாள் அம்னோ தலைவர்களில் ஒருவருமான சாயிட் இபுராஹிம் அடங்குவார்.
இவர் 1MDB குறித்து நஜீப்பின் நடத்தையைக் கடுமையாக விமர்சித்தவர். இப்பொழுது தமது கருத்தை மாற்றிக்கொண்டு நஜீப் பிறரை நம்பி மோசம் போனதாகக் கூறுகிறார். வழக்குரைஞர் தம் கட்சிக்காரர் சொன்னதைத் தானே நம்புவார். நம்பாவிட்டால் ஊதியம் கிடைக்காதே!
இந்தப் புது வழக்குரைஞர்களின் போக்கு விசித்திரமாக இருந்தது என்றால் மிகையாகாது. வழக்கு கூட்டரசு நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 16ஆம் நாள் முதல் பத்து நாட்கள் வரை விவாதத்திற்குத் தயாராக இருக்க வேண்டுமென எல்லோருக்கும் தெரியும்.
வழக்கை விவாதிக்க சம்மதித்த வழக்குரைஞர்கள் கூட்டரசு நீதிமன்றம் மேல்முறையீட்டு விசாரணையை ஒத்திவைக்கை அனுமதிக்காது என்பது தெரிந்திருந்தும் வழக்கை நடத்த ஒப்புக்கொண்டு ஏற்றுக்கொண்டால் வழக்கை நடத்தும் பொறுப்பைத் தட்டிக் கழிக்கக்கூடாது. அதே சமயத்தில், வழக்குரைஞர்களின் விதிகளின்படி வழக்கை நடத்த ஒப்புக்கொள்ளும் வழக்குரைஞர் குறிப்பிட்ட தேதியில் வழக்கை நடத்த தயாராக இருக்க வேண்டும் என்கிறது. இதன் பொருள் என்ன? விசாரணையை ஒத்திவைக்கும் பொருட்டு வழக்கை ஏற்கக்கூடாது. அது தவறாகும். நீதிமன்றம் அப்படிப்பட்ட வழக்குரைஞரின் நடவடிக்கையை ஏற்காது என்பது மட்டுமல்ல கடுமையாக விமர்சித்தாலும் ஆச்சரியப்பட்ட ஒன்றுமில்லை.
நஸ்லான் மீதான குறைகள் கொண்ட மறு விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது அவரின் வங்கி கணக்கில் பத்து லட்சம் ரிங்கிட் பற்றிய குற்றச்சாட்டைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக நஜீப் அறிவித்தார்.
நஜீப்பும் இங்கிலாந்தில் ஒளிந்து கொண்டிருக்கும் ஒருவரின் பொய்யான தகவலை வைத்து நீதிபதி நஸ்லான் மீது களங்கம் கற்பிக்க முயன்றது வழக்கில் இருந்து தப்பிக்க எல்லாவிதமான தவறான அணுகுமுறைகளை மேற்கொள்ளலாம் என்ற தரத்தை ஏற்றுக்கொள்ளலாம்.
காற்றில் வரும் வதந்தியை உண்மையெனப் பிரகடனப்படுத்தி ஒரு நீதிபதியின் மன அமைதியைக் கெடுக்கலாமா? குலைக்கலாமா?
இத்தகைய செயல்கள், அணுகுமுறைகள் நியாயமானவையாகக் கருத இயலாது. சட்ட கருத்துகளில் தாமதப்படுத்தப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி என்ற ஒன்று உண்டு. பதிமூன்றாம் நூற்றாண்டில் இங்கிலாந்தின் மன்னன் ஜான் பிரபுகளுக்கு வழங்கிய பேருரிமை பத்திரத்தின் படி நீதித்துறையைக் குறித்து பொருள் நிறைந்த கருத்தானது, “நாங்கள் நீதியை விற்க மாட்டோம். நீதியைத் தாமதப்படுத்த மாட்டோம். நீதியை மறுக்க மாட்டோம் என்பதாகும். காலப்போக்கில் அது தாமதப்படுத்தப்பட நீதி, மறுக்கப்பட்ட நீதி என்று வளம் வருகிறது.
நீதியைத் தாமதப்படுத்துவது யார்? ஒருவர் மீது குற்றத்தைச் சாற்றிவிட்டு வழக்கை நடத்தாமல் இழுத்தடித்தால் அதுவும் தவறுதான். அதே சமயத்தில், குற்றம் சாட்டப்பட்டவர் பலவிதமான மனுக்களைத் தாக்கல் செய்து வழக்கு நடைபெறாமல் தடுத்தால் அதுவும் நீதியைத் தாமதப்படுத்தும் செயல் என்றுதான் சொல்ல வேண்டும்.
தமிழ்நாட்டில் காலஞ்சென்ற ஜெயலலிதா மீது சுமத்தப்பட்ட வருமானத்துக்கு மீறிய சொத்து குவிப்பு வழக்கு சுமார் பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. அவர் இறந்த பிறகுதான் அவர் நிரபராதி என இந்தியாவின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஜெயலலிதா இறந்த பின் விடுதலையானார். வழக்கைத் துரிதமாக நடத்தியிருந்தால் அவரின் வாழ்நாளிலேயே தாம் நிரபராதி என்பதை அறிந்து மகிழ்ந்திருப்பார். எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்ட நுணுக்கத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தால் நீதியைப் பெறுவது கடினமாகலாம். ஏமாறலாம்.
நஜீப்பின் மனுக்கள் தள்ளுபடியானதும் அவரும், அவர் வழக்குரைஞர்களும் நீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது. வேதனை தருகிறது எனப் புலம்புவது ஆச்சரியமாக இருக்கிறது. தவறு அவர்கள் பக்கம் இருக்கும்போது நீதிமன்றத்தைக் குறை கூறுவதில் யாதொரு நியாயமும் இல்லை. அவர்களின் செயல், அணுகுமுறை நீதியின் துரிதமான பயணத்தை முடக்குவது போல் இருக்கிறது என்று நீதிமன்றம் மட்டுமல்ல மக்களும் நினைத்தால் அதில் தவறில்லையே !