பழைய ஒப்பந்தங்களின் கீழ் உள்ள துப்புரவு பணியாளர்கள், பாதுகாவலர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய உயர்வு இல்லை 

அரசு நிறுவனங்களில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர்களின் ஒப்பந்தங்கள் இன்னும் புதுப்பிக்கப்படாததால் அவர்களுக்கு புதிய குறைந்தபட்ச ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை என்று மனிதவளத்துறை அமைச்சர் எம்.சரவணன் கூறியுள்ளார்.

தொழிலாளர்கள் தங்களுடைய தற்போதைய ஒப்பந்தங்களில் உள்ள விதிமுறைகளுக்கு கட்டுப்படவேண்டும், எனவே இந்த ஆண்டு மே 1 முதல் நடைமுறைக்கு வந்த புதிய குறைந்தபட்ச ஊதியமான 1,500 ரிங்கிட்க்கு உட்பட்டதாக இல்லை என்று செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார்.

தற்போதுள்ள ஒப்பந்தங்கள் முந்தைய குறைந்தபட்ச ஊதியமான 1,200 ரிங்கிட் அடிப்படையிலானது என்றும் அவர் கூறினார்.

பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் ஒப்பந்தத்தை புதுப்பிக்கத் திட்டமிடுபவர்களின் ஊதியத்தை நிதி அமைச்சகம் திருத்தியமைக்கும் என்று சரவணன் கூறினார்.

“புதிய கொள்கையில், நிதி அமைச்சகம் ஊதியத்தை திருத்த ஒப்புக் கொண்டுள்ளது”.

மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் பள்ளிகள் மற்றும் பிற அரசு வசதிகளுக்கு துப்புரவு பணியாளர்கள் மற்றும் காவலர்களை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு புதிய குறைந்தபட்ச ஊதியமான 1,500 ரிங்கிட் வழங்க மறுப்பதாக கூறியது.

இந்த தொழிலாளர்களில் சிலருக்கு இன்னும் கூடுதல் நேர ஊதியம் மற்றும் பிற வேலைப் பலன்கள் வழங்கப்படவில்லை என்றும் MTUC கூறியுள்ளது.

அதன் செயலாளர் நாயகம் கமருல் பஹாரின் மன்சோர், இது கட்டாய உழைப்புக்கு ஒப்பானது என்று கூறியதுடன், புதிய குறைந்தபட்ச ஊதியம் மே 1 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டதை சுட்டிக்காட்டினார்.

இந்தப் பிரச்சினை நீடித்தால், சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) ஏற்பாடு செய்துள்ள சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் இந்த விவகாரம் எழுப்பப்படும் என்றும் அவர் கூறினார்.

-FMT