பொதுத்தேர்தலுக்கு முன் மரண தண்டனையை ஒழிக்க பிரதமர் உறுதியளிக்க வேண்டும்

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர், கட்டாய மரண தண்டனையை ரத்து செய்வதாக பகிரங்கமாக உறுதிமொழி அளிக்குமாறு, பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை, உரிமைக் குழு ஒன்று கோரியுள்ளது.

மரண தண்டனை மற்றும் சித்திரவதைக்கு எதிரான மலேசியர்களின் பிரதிநிதி சார்லஸ் ஹெக்டர், கட்டாய மரண தண்டனை ஒழிக்கப்படும் என்று சமீபத்தில் அமைச்சர் ஒருவர் அறிவித்தது வெறும் பொய்யான வாக்குறுதி என்று பலர் கவலைப்படுவதாக கூறினார்.

“நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு புதிய அரசாங்கம் வருவதற்கு முன்பு இது நடக்கும் என்று மலேசியர்களுக்கு பிரதமர் உறுதியளிக்கும் வகையில் பேசுவது சிறந்தது” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் முன்மொழியப்படவுள்ள மாற்று தண்டனைகளை வெளியிடுமாறும் இந்தக் குழு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கட்டாய மரண தண்டனைக்கு மாற்று தண்டனைகள் குறித்த சிறப்புக் குழுவின் பரிந்துரைகள் தெரியப்படுத்தப்பட வேண்டும் என்று ஹெக்டர் கேட்டுக் கொண்டார்.

மாற்றுத் தண்டனைகள் கடுமையான நிபந்தனைகளுடன் வரக்கூடாது என்பதை புத்ராஜெயா உறுதி செய்ய வேண்டும் என்று எச்சரித்த அவர், அதிகபட்ச சிறைத்தண்டனையை நாடாளுமன்றம் நிர்ணயிக்க வேண்டும் என்றும், நீதிபதிகள் முடிவெடுக்க முழு உரிமையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சாட்டையடியை மனிதாபிமானமற்ற உடல் ரீதியான தண்டனை என்று வர்ணித்து, அதை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்றும் இந்தக் குழு கோரிக்கைவிடுத்துள்ளது.

ஜூன் 10 அன்று, சட்ட மந்திரி வான் ஜுனைடி துவாங்கு ஜாபர், புத்ராஜெயா கட்டாய மரண தண்டனையை ரத்து செய்ய ஒப்புக்கொண்டதாகவும், நீதிபதிகளுக்கு தண்டனை வழங்குவதில் விருப்புரிமை வழங்குவதாகவும் அவர் அறிவித்தார்.

கட்டாய மரண தண்டனைக்கு மாற்றான தண்டனைகளை மறுபரிசீலனை செய்வதற்கான முன்னாள் தலைமை நீதிபதி ரிச்சர்ட் மலஞ்சும் தலைமையிலான சிறப்புக் குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டதாக வான் ஜுனைடி கூறினார்.

-FMT