ஜியி15 – பாஸ்-அம்னோ இடையே அதிகாரப்பூர்வ விவாதம் இல்லை: முகைடின்

15வது பொதுத் தேர்தலை (GE15) எதிர்கொள்வது குறித்து பாஸ் மற்றும் அம்னோ இடையே அதிகாரப்பூர்வமான விவாதம் எதுவும் நடைபெறவில்லை என்று பெரிகத்தான் நேசனல்(PN) தலைவர் முகைடின் யாசின் கூறினார்.

நேற்று முன் தினம் முகைடின் தலைமையில் நடைபெற்ற PN உச்ச மன்றக் கூட்டத்தில் பாஸ் அளித்த விளக்கத்தின் அடிப்படையில் இது அமைந்துள்ளது என்றார்.

“இது உண்மையில் ஒரு அதிகாரப்பூர்வமற்ற விவாதம் மற்றும் கட்சிகளின் உயர்மட்டத் தலைமை சம்பந்தப்பட்டது இல்லை. GE15 இல் பாஸ் உடன் ஒத்துழைக்கமாட்டோம் என்ற நிலைப்பாட்டை அம்னோ எடுத்தபிறகு இந்த விவாதத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.

PN இல் உள்ள கட்சிகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான தனது நிலைப்பாட்டைப் பாஸ் மீண்டும் வலியுறுத்தியதாக முகைடின் கூறினார்.

பணவீக்கத்தின் விளைவுகளை எதிர்கொள்வதில் மக்களுக்கு, குறிப்பாகக் குறைந்த வருமானம் கொண்ட பிரிவினருக்கு உதவுவதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்துவது குறித்தும் இந்தக் கூட்டம் ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது என்று பெர்சத்து தலைவர் கூறினார்.

“B40 குழு B60 க்கு முன்னேறியுள்ளதாகவும், குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு உதவி வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இந்தக் குழுவின் சுமையைக் குறைக்க, PN அனைத்து நிலைகளிலும் உள்ள அனைத்து கட்சி இயந்திரங்களுக்கும், தேவைப்படுபவர்களுக்கு உதவி வழங்குவதற்காக நாடு முழுவதும் Prihatin Rakyat திட்டத்தை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.

சிலாங்கூர், நெகிரி செம்பிலான், ஜொகூர் மற்றும் பகாங் ஆகிய மாநிலங்களுக்கான தொகுதித் தலைவர்களை நியமிப்பதற்கும் PN உச்ச மன்றக் கூட்டம் ஒப்புதல் அளித்தது.