மஇகா-வின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான எஸ்.சாமிவேலு தனது 86வது வயதில் காலமானார். இன்று காலைக் கோலாலம்பூரில் உள்ள அவரது வீட்டில் அவர் மரணமடைந்ததாகத் தெரிகிறது.
முன்னாள் மஇகா தலைவரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான டாக்டர் எஸ் சுப்பிரமணியம் தனது முகநூலில் இந்த செய்தியைப் பகிர்ந்துள்ளார்.
மஇகாவின் முன்னாள் தலைவரும், அமைச்சரவையில் பழம்பெரும் அமைச்சருமான சாமிவேலுவின் மறைவுச் செய்தியை அவரது மகன் வேல் பாரியிடமிருந்து பெற்றுக்கொண்டது மிகுந்த வருத்தத்துடனும், கனத்த இதயத்துடனும் உள்ளது என்றார்.
“எங்களில் பலருக்கு, அவர் உறுதியான வழிகாட்டியாக இருந்தார்”
“தேசத்திற்கும் இந்திய சமூகத்திற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பு நம் நினைவுகளில் நிரந்தரமாகப் பொறிக்கப்படும்,” என்று சுப்ரமணியம் கூறினார்.
சாமிவேலு மார்ச் 8, 1936இல் பிற்ந்தார். இவர் 1979-ஆம் ஆண்டில் இருந்து 2010-ஆம் ஆண்டு வரை ம.இ.கா.வின் தலைவர் பதவியில் சேவை ஆற்றியுள்ளார். மலேசிய அமைச்சரவையில் 29 ஆண்டுகள் மூத்த அமைச்சராக இருந்து பதவி வகித்தவர்
மலேசியத் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சு; மலேசியப் பொதுப் பணித் துறை அமைச்சு போன்ற முக்கியமான துறைகளின் அமைச்சராகப் பதவி வகித்தவர். நீண்ட காலம் மலேசிய அமைச்சரவையில் சேவை செய்தவர் எனும் சாதனையும் இவருக்கு உண்டு. இவருடைய அரசியல் வாழ்க்கையில் சாதனைகளும் சோதனைகளும் உள்ளன.
சாமிவேலு 1963-இல் இருந்து மலேசிய வானொலி, மலேசியத் தொலைக்காட்சியில் பல ஆண்டுகள் தமிழ்ச் செய்தி அறிவிப்பாளராகவும், மலேசியத் தகவல் இலாகாவில் நாடகக் கலைஞராகவும் பணியாற்றி இருக்கிறார். இவர் ஒரு தமிழ்மொழி ஆர்வலர்.
1974-ஆம் ஆண்டில் சுங்கை சிப்புட் தொகுதியின் இடைக்காலத் தேர்தலில் போட்டியிட்டு மலேசிய நாடாளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப் பட்டார்.
2008-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில், தன்னுடைய சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் ஜெயக்குமார் தேவராஜ் எனும் மலேசிய சமூகக் கட்சியின் வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். அந்தப் பொதுத் தேர்தல் மலேசிய இந்தியர்களின் வரலாற்றையே மாற்றி அமைத்தது என்றும் அறியப்படுகிறது.