பிரதம மந்திரி இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறுவது போல் பத்திரிகை சுதந்திரத்தை உண்மையாக நிலைநிறுத்தினால், தி எட்ஜ்(The Edge) செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள்மீதான கிரிமினல் அவதூறு குற்றச்சாட்டுகளைக் கைவிட வேண்டும் என்று கூறப்பட்டது.
பக்காத்தான் ஹராப்பான் தலைமை குழு நேற்று வெளியிட்ட அறிக்கையில், இஸ்மாயில் சப்ரியின் உறுதிமொழி ஊடகவியலாளர்கள்மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் ஊடகங்களில் அரசியல் தலையீடு குற்றச்சாட்டுகளுக்கு முரணானது என்று சுட்டிக்காட்டியுள்ளது.
“சில நாட்களுக்கு முன்பு, New Straits Times (NST)பத்திரிகை குழுவின் ஆசிரியர் நியமனம் பற்றி நாங்கள் படித்தோம், இது அரசியல் தலையீடு காரணமாகச் செய்யப்பட்டதாகப் பத்திரிகையாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் கூறினர்”.
“இது வருந்தத்தக்கது. அரசியல் கட்சிகள் ஊடக அமைப்புகளின் விவகாரங்களில், குறிப்பாக நாம் பார்த்துக் கொண்டிருக்கும் விவகாரங்களில் தலையிடக் கூடாது என்ற நிலைப்பாட்டை ஹராப்பான் எடுக்கிறது”.
அரசாங்கம், துணை அரசு வழக்கறிஞர்மூலம், The Edge சேர்ந்த இரண்டு பத்திரிகையாளர்களை நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு குற்றச்சாட்டுகளுடன் உள்ளதற்காக நாங்கள் வருத்தப்படுகிறோம், “என்று அவர்கள் கூறினர்.
கிரிமினல் குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெறுமாறு அரசாங்கத்திடம் தலைமை குழு கோரியது. அதற்குப் பதிலாகச் சம்பந்தப்பட்ட தரப்பினர் சிவில் அவதூறு வழக்குகளைத் தொடரலாம் என்று அவர்கள் கூறினர்.
குறிப்பாக அரசாங்கம் தனது நடத்தையை மீழ்பார்வை செய்யவும் சமத்துவத்தை வழங்குவதிலும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதிலும் ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் அவர்கள் கூறினர்.
“எனவே, இஸ்மாயில் சப்ரியின் உறுதிமொழியை உதடுகளில் மட்டும் வெளிப்படுத்தாமல், அவர் பேச்சின்படி நடக்க வேண்டும்,” என்று அவர்கள் கூறினர்.
இந்த அறிக்கையை பிகேஆர் தகவல் தொடர்பு இயக்குனர் ஃபஹ்மி ஃபட்சில், அமானா தகவல் தொடர்பு இயக்குனர் காலித் சமட், டிஏபி விளம்பர செயலாளர் தியோ நீ சிங் மற்றும் உப்கோ தகவல் தலைவர் ஜோய்சின் ரோமுட் ஆகியோர் வெளியிட்டனர்.
நேற்று முன் தினம், இஸ்மாயில் சப்ரி, செய்தி துறை செயல்பாடுகளில் அரசாங்கம் ஒருபோதும் தலையிடவில்லை, ஒருபோதும் அவ்வாறு செய்யாது என்று கூறினார்.
NSTயில் அரசியல் தலையீடு குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, செவ்வாயன்று அஹ்மத் லோக்மான் மன்சோருக்குப் பதிலாக மூத்த பத்திரிகையாளர் ஃபர்ரா நாஸ் கரீம் புதிய குழு ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.
இஸ்மாயில் சப்ரி, தி எட்ஜ் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் அஹ்மத் ஆசம் முகமட் ஆரிஸ் மீதான குற்றவியல் அவதூறு குற்றச்சாட்டுகள்குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார், இரண்டு விஷயங்கள்குறித்து தனக்கு எந்தத் தகவலும் இல்லை என்று கூறினார்.