பாங்க் நெகாரா எங்களுடன் தொடர்பு கொள்ளவில்லை என்கிறது ஜிஎப்ஐ

ஜிஎப்ஐ என்ற உலக நிதி நேர்மை அமைப்பு பாங்க் நெகாராவுடன் தொடர்பு கொண்டுள்ளதாக நிதித் துணை அமைச்சர் டொனால்ட் லிம் கூறியுள்ளதை வாஷிங்டனைத் தளமாகக் கொண்ட அந்த அமைப்பு மறுத்துள்ளது.

நாட்டிலிருந்து கள்ளத்தனமாக பெரும் பணம் வெளியேறும் பிரச்னை மீது ஜிஎப்ஐ, மலேசியாவின் மத்திய வங்கியுடன் ஒத்துழைத்து வருவதாக துணை அமைச்சர் கூறியதை அந்த அமைப்பின் தொடர்புப் பிரிவு இயக்குநர் கிளார்க் காஸ்கோய்ன் நிராகரித்தார்.

அவர் மலேசியாகினியிடம் மின் அஞ்சல் வழி அந்த விவரங்களை வெளியிட்டார்.

“பாங்க் நெகாராவுடன் நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம் எனக் கூறவே நான் விரும்புகிறேன். ஆனால் அது உண்மையல்ல. அது எங்களுடன் தொடர்பு கொள்ளவில்லை. நாங்களும் அதனுடன் பேசவில்லை,” என்றார் அவர்.

கள்ளத்தனமாக மூலதனம் வெளியேறும் விஷயம் மீது ஜிஎப்ஐ, பாங்க் நெகாராவுடன் தொடர்பு கொண்டுள்ளதாக கடந்த சனிக்கிழமை டொனால்ட் லிம் மலேசியாகினியிடம் கூறியிருந்தார்.

மலேசியாவிலிருந்து 2009ம் ஆண்டு 150 பில்லியன் ரிங்கிட் கள்ளத்தனமா வெளியேறியதாகக் கூறப்படுவது புதிய விஷயமல்ல. அத்தகையக் கசிவுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக நிதித் துணை அமைச்சர் அப்போது தெரிவித்தார்.

வாஷிங்டனை தளமாகக் கொண்ட ஜிஎப்ஐ உலக நிதி நேர்மை அமைப்பு வெளியிட்ட விவரங்களை அரசாங்கம் அறியும் என்றும் அவர் சொன்னார்.

அந்த அமைப்பு வெளியிட்ட புள்ளி விவரம், கள்ளத்தனமாக மூலதனம் வெளியே போகும் நாடுகள் பட்டியலில் மலேசியா முதல் நான்கு இடங்களில் இருப்பதைக் காட்டியது.

கள்ளத்தனமாக பணம் வெளியேறுவதற்கு கள்ளப்பணத்தை வெள்ளையாக்கும் நடவடிக்கைகள் காரணம் என தேசிய போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில் லிம் அறிக்கை அமைந்துள்ளது. அத்தகைய குற்றங்களில் ஈடுபடுகின்றவர்களுடைய சொத்துக்களை முடக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் இஸ்மாயில் ஒமார் அறிவித்தார்.

ஜிஎப்ஐ வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் தகவலின் படி 2009ம் ஆண்டு 150 பில்லியன் ரிங்கிட் கள்ளத்தனமாக நாட்டிலிருந்து வெளியேறியுள்ளது. 2000-2009 கால கட்டத்தில் மொத்தம் 889 பில்லியன் ரிங்கிட் சட்டவிரோதமாக வெளியேறியது.
 
ஆக மொத்தம்  10 ஆண்டுகளில் மட்டும் ஒரு டிரில்லியன் ரிங்கிட் நாட்டிலிருந்து கள்ளத்தனமாக வெளியேறியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் ஜிஎப்ஐ-யின் முதலாவது அறிக்கை வெளியானதும் அது தொடர்பில் பாங்க் நெகாரா விளக்கமளிக்கும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்தார்.

பாங்க் நெகாரா அந்த விஷயம் மீது புலனாய்வை மேற்கொள்ளும் என அதற்குப் பின்னர் லிம்-மும் கூறினார்.

ஆனால் ஜிஎப்ஐ பொருளாதார வல்லுநர்கள் உதவி செய்ய முன் வந்த போதிலும் இது வரை தனது புலனாய்வு முடிவுகளை பாங்க் நெகாரா இன்னும் அறிவிக்கவில்லை. கள்ளத்தனாக பெரிய அளவில் மூலதனம் வெளியேறியதற்கு விளக்கமும் தரவில்லை.

பாங்க்  நெகாரா விரும்பினால் அந்தப் பிரச்னையைச் சமாளிப்பதற்கு அதனுடனும் நிதி அமைச்சுடனும் ஒத்துழைக்க ஜிஎப்ஐ தயாராக இருப்பதாகவும் காஸ்கோய்ன் வலியுறுத்தினார்.

“நாங்கள் கடந்த ஜனவரியிலிருந்து எங்களுடைய தலைமை பொருளாதார வல்லுநர் டாக்டர் தேவ் கார்-ரை அனுப்பத் தயாராக இருக்கிறோம். ஒத்துழைப்புத் தருமாறு எங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் நாங்கள் மலேசிய அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறோம்.’

“ஆனால் இது வரை எங்களுக்கு அழைப்பு தரப்படவில்லை,” என்றார் அவர்.