MySejahtera பொது சுகாதாரத்திற்கான டிஜிட்டல் தளமாக பயன்படுத்தப்படும் – கைரி

கோவிட் -19 தொற்றுநோயிலிருந்து நாடு மாறியதைத் தொடர்ந்து MySejahtera பயன்பாடு பொது சுகாதாரத்திற்கான டிஜிட்டல் தளமாகப் பயன்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் கூறினார்.

சுகாதார சேவைகளுக்கான டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்திற்கு ஏற்ப, பொதுக் கணக்குக் குழுவின் (PAC) பரிந்துரைகளின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கைரி (மேலே) கூறினார்.

சுகாதார அமைச்சகம், நிதி அமைச்சகம் மற்றும் பிரதமர் துறையின் கீழ், MySejahtera விண்ணப்பத்தின் வளர்ச்சி மற்றும் கொள்முதல் குறித்த அறிக்கையை PAC இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

PAC இன் பரிந்துரைகளில், பயன்பாட்டின் முழு உரிமையையும் அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் மற்றும் பயனர்களின் தரவு பாதுகாப்பானது மற்றும் தவறாகப் பயன்படுத்தப்படாது என்பதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

“MySejahtera தேசிய பாதுகாப்பு கவுன்சிலிலிருந்து அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டதும், தரவு உரிமை மற்றும் பாதுகாப்பு பிரச்சினை தீர்க்கப்பட்டு, MySejahtera ஒரு பொது சுகாதார தளமாகப் பயன்படுத்தப்படலாம் என்பதை நாங்கள் உறுதி செய்தோம்,” என்று கைரி அமைச்சகத்தின் மாதாந்திர கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

பயனர்கள் தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் சுகாதார மதிப்பீடுகளைச் செய்ய அனுமதிப்பதன் மூலம் நாட்டில் கோவிட் -19 தொற்றுநோயை நிர்வகிப்பதில் உதவுவதற்காக MySejahtera  ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டது.

இப்போது, ​​ இரத்த தானம் அட்டை உள்ளிட்ட புதிய பயன்பாடு அம்சங்களுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது, மேலும் மக்கள் தங்களை உறுப்புத் தானம் செய்பவர்களாக உறுதியளிக்கலாம்.

MySejahtera விண்ணப்பம் தொடர்பான பிரச்சினைகள் “சுகாதார அமைச்சை விட்டு வெளியேறுவதற்கு முன்பு” தீர்க்கப்படுவதை உறுதி செய்ய விரும்புவதாகக் கைரி கூறினார்.

“அந்த முடிவு (PAC  அறிக்கை) மிக முக்கியமானது… விண்ணப்பத்தின் முழு உரிமை அரசாங்கத்திடம் இருக்க வேண்டும். அதைத்தான் நாங்கள் செய்துள்ளோம், குறிப்பாகக் கையெழுத்திட வேண்டிய ஒப்பந்தத்தில். (அதன் மூலம்), விண்ணப்பத்தின் உரிமை மற்றும் தரவுகள் அனைத்தும் மலேசிய அரசாங்கத்திற்கு சொந்தமானது என்பதில் இனி எந்தச் சந்தேகமும் இல்லை,” என்று அவர் கூறினார்.

புகையிலை பொருட்கள் மற்றும் புகைத்தல் கட்டுப்பாடு மசோதா 2022 இல், கைரி கூறுகையில், இந்த வியாழக்கிழமை இரண்டாவது வாசிப்பு திட்டமிடப்பட்டுள்ளது, மசோதாவில் திருத்தங்கள் அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி பிரதிநிதிகளைக் கொண்ட பாராளுமன்ற சிறப்புத் தேர்வுக் குழுவால் (PSSC) அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

“கூட்டத்தின் உத்தரவைப் பின்பற்றினால் இந்த மசோதா நிறைவேற்றப்படும் என்று நான் நம்புகிறேன், ஆனால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு செனட்டிற்கு கொண்டு வரப்படாவிட்டால், இந்தச் சட்டம் புதிய அரசாங்கத்தால் மீண்டும் தாக்கல் செய்யப்பட வேண்டும். இதுதான் நடைமுறை.

புகையிலைப் பொருட்கள் கட்டுப்பாடு மற்றும் புகைபிடிக்கும் மசோதா 2022 ஜூலை 27 அன்று நாடாளுமன்றத்தில்  முதல் வாசிப்புக்காகத் தாக்கல் செய்யப்பட்டது. எவ்வாறெனினும், ஆகஸ்ட் 2ம் திகதி நாடாளுமன்றம் இந்த மசோதாவை மேலதிக பரிசீலனைக்காக PSSC க்கு அனுப்புவதற்கு உடன்பட்டது.

ஜனவரி 1, 2007 அன்றும் அதற்குப் பின்னரும் பிறந்தவர்கள், சிகரெட்டுகள் அல்லது வாப் பொருட்களை வாங்குவதிலிருந்து அல்லது வைத்திருப்பதைத் தடை செய்ய முற்படும் இந்த மசோதா, நாடாளுமன்றத்தின் சில உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாகக் கருதப்பட்டது.