ஆவாங் அடெக்: பணம் பெற்றது உண்மை, ஆனால்……

ஒரு வலைப்பதிவர் கூறியிருப்பதுபோல்  தம் வங்கிக் கணக்கில் பலமுறை பணம் வந்து சேர்ந்திருப்பது உண்மைதான் என்பதை ஒப்புக்கொண்டுள்ள துணை நிதி அமைச்சர் ஆவாங் அடெக் உசேன், அது சமூகத் திட்டங்களுக்காக வழங்கப்பட்ட நன்கொடை என்றார்.

தாம் அம்னோ தொகுதித் தலைவராகவுள்ள கிளந்தான், பாச்சோக்கில் சமூகத் திட்டங்களுக்கு நிதி திரட்ட  மூன்று தனிப்பட்ட வங்கிக் கணக்குகள் உருவாக்கப்பட்டதாகவும் அவற்றில் ஒன்றுக்கு வந்துசேர்ந்த நன்கொடைதான் அது என்றும் அவர் சொன்னார்.

“பல நிறுவனங்கள், பாச்சோக் மக்களுக்கான சமூகத் திட்டங்களுக்கு உதவியாக நன்கொடைகள் அளிக்கின்றன. பணம் கொடுத்தது யார், அது எதற்குப் பயன்படுத்தப்பட்டது என்பதற்கெல்லாம் கணக்கு வைத்திருக்கிறேன்”, என்றாரவர்.

“ஒரு தனி அதிகாரி அதையெல்லாம் கவனித்துக் கொள்கிறார்.அவை பற்றிய ஆவணங்களை மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்திடம் வழங்கத் தயார்.”

காசோலைகளாகவும் ரொக்கமாகவும் வரும் நன்கொடைகள், ஹரி ராயாவின்போது 4,000 குடும்பங்களுக்கு தலா ரிம100 உதவித் தொகை வழங்கவும் 33 தொடக்கநிலை பள்ளிக்கூடங்களின் மாணவர்களுக்கு ஆங்கில டியூசன் வகுப்புகள் நடத்தவும் பயன்படுத்திக்கொள்ளப்படுகின்றன என்று ஆவாங் கூறினார்.

“எல்லாவகை நன்கொடைகளையும் ஏற்கிறேன்.ஆனால் சுயநல நோக்கில்- எடுத்துக்காட்டுக்கு குத்தகையை எதிர்பார்த்துக்- கொடுக்கப்படும் நன்கொடைகள் போன்றவற்றை ஏற்பதில்லை. மேலும், குத்தகை கொடுப்பதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை. ஒரு குழுதான் அதை முடிவு செய்கிறது. நான் துணை அமைச்சர்தான்”, என்றார்.

அரசாங்கக் குத்தகை ஒன்றைப் பெறுவதற்காக அவரது கணக்கில் பணம் போட்டார் என்று கூறப்பட்டுள்ள ஜோகூர் அம்னோ தொகுதித் தலைவர் ஒருவர் ஒரு “நீண்டகால கொடையாளர்” என்றாரவர்.

“நன்கொடை அளிப்பவர்களுக்கு நான் பதிலுக்கு எதையும் கொடுப்பதில்லை”, என்று கூறிய ஆவாங், அவர்களில் பலர் “நண்பர்கள்” என்றும் பாச்சோக் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அவர்கள் தமக்கு உதவி செய்கிறார்கள் என்றும் கூறினார்.

“அந்தப் பணத்தைத் தனிப்பட்ட முறையில் நான் பயன்படுத்திக்கொள்வதில்லை.என்னிடம் ஒளிவுமறைவு இல்லை.

“இப்போதுகூட நானே முன்வந்துதான் இந்தத் தகவலைத் தெரிவிக்கிறேன்”, என்றார்.

பெயர் தெரியாத பதிவர் ஒருவர் ‘Thewhistleblower711’, என்ற வலைப்பதிவில்  பொதுப்பணித் துறையின் குத்தகை ஒன்றைப் பெற்ற ஜோகூர் தலைவர் ஒருவர், ஆவாங்குக்குக் கட்டம் கட்டமாக ரிம100,000-க்குமேல் வழங்கியிருப்பதாகக் குற்றஞ்சாட்டி இருந்தார்.

அப்பதிவில் பிரதமர், துணைப்பிரதமரின் உதவியாளர்கள் இருவரது பெயர்களும் குறிப்பிடப்பட்டிருந்தன.

அவர்களின் பெயர்கள் ஏன் குறிக்கப்பட்டது என்பது தமக்குத் தெரியாது என்றும் அவர்களுக்கும் தமக்கும் தொடர்பில்லை என்றும்  ஆவாங் கூறினார்.

ரொக்கப் பணம் போடப்பட்டதற்கான ரசீதுகள் மற்றும் காசோலைகளின் நகல்கள் போன்றவையும் அப்பதிவில் வெளியிடப்பட்டிருந்தன.

இவ்விவகாரத்தை விசாரித்து வருவதை எம்ஏசிசியும் உறுதிப்படுத்தியுள்ளது.