பெர்க்காசா: அழியா மையைப் பயன்படுத்துவது ஒரு படி பின்னடைவு

13வது பொதுத் தேர்தலில் அழியா மையைப் பயன்படுத்துவது என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதை மலாய் நெருக்குதல் அமைப்பான பெர்க்காசா நிராகரித்துள்ளது. அந்த முடிவு ஒரு படி பின்னடைவு என அது வருணித்தது.

அழியா மை பயன்படுத்தப்பட்டால் பல மலாய்க்காரர்கள் வாக்களிக்கச் செல்ல மாட்டார்கள் என பெர்க்காசா நம்புவதாக அதன் தலைமைச் செயலாளர் சையட் ஹசான் சையட் அலி கூறியதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

“மற்ற வளரும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் முன்னேறிய நாடுகள் பொதுத் தேர்தலில் அழியா மையைப் பயன்படுத்துவது வெட்கக் கேடானது,” சையட் ஹசான் நேற்று விடுத்த அறிக்கை கூறியது.

“சோமாலியா, வங்காள தேசம், பாகிஸ்தான், கம்போடியா முதலான மற்ற நாடுகளைப் போன்றதல்ல மலேசியா. அவை பின் தங்கியிருக்கின்றன. அந்த நாடுகளில் தங்கள் குடிமக்களுடைய அடையாளப் பதிவுகள் நவீனமாக இல்லை.”

“இது முழுக்க முழுக்க வெட்கக் கேடானது’ என்றார் அவர்.

மலாய்க்காரர்களையும் முஸ்லிம்களையும் வாக்களிக்க வர விடாமல் தடுப்பதற்கு ஒரு வழியாக இருப்பதால் அழியா மையைப் பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளும் அமைப்புக்களின் நெருக்குதலுக்கு பணிந்து விட்டது என்றும் சையட் ஹசான் சொன்னார்.

“மலாய்க்காரர்கள் வாக்களிக்க செல்லவில்லை என்றால் யார் நன்மை அடைவார்கள் ? அழியா மை பயன்படுத்தப்பட்டால் நானும் கூட வாக்களிக்கச் செல்ல மாட்டேன்.”

“பல பெர்க்காசா உறுப்பினர்களும் வாக்களிக்க செல்லாமல் இருக்கும் சாத்தியமும் உள்ளது,” என அந்த பெர்க்காசா தலைமைச் செயலாளர் விளக்கினார்.

ஆகவே அடுத்த பொதுத் தேர்தலில் அழியா மையைப் பயன்படுத்தும் முடிவை தேர்தல் ஆணையம் மீண்டும் சிந்திக்க வேண்டும் என சையட் ஹசான் கேட்டுக் கொண்டார்.

பொதுத் தேர்தலில் முதன் முறையாக அழியா மை பயன்படுத்தப்படும் என இரண்டு நாட்களுக்கு முன்பு தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் அறிவித்தார்.

அத்துடன் இராணுவ வீரர்களும் போலீஸ்காரர்களும் அவர்களது துணைவியரும் முன்கூட்டியே வாக்களிப்பதற்கும் அனுமதிக்கப்படுவர் என்றும் அவர் கூறினார்.

TAGS: