இராகவன் கருப்பையா – நம் நாட்டின் அரசாங்க ஊழியர்கள் காலங்காலமாக தேசிய முன்னணிக்குதான் விசுவாசமாக இருந்து வந்துள்ளனர்.
ஒவ்வொரு பொதுத் தேர்தலின் போதும் கிட்டதட்ட எல்லா அரசு ஊழியர்களின் வாக்குகளும் தங்கு தடையின்றித் தங்களுக்குக் கிடைக்கும் எனும் மமதையில் இருந்துவந்த அக்கூட்டணிக்கு 14ஆவது பொதுத் தேர்தலில் எதிர்பாராத வகையில் அதிர்ச்சி வைத்தியம்தான் கிடைத்தது.
அப்போது புயல் போல் வீசிய பக்காத்தான அலையில் ஒன்றித்து நிறைய பேர் மாற்றத்திற்காகவும் மறுமலர்ச்சிக்காகவும் வாக்களித்தது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்பு முணை என்றே சொல்ல வேண்டும்.
பெருமளவில் அரசாங்க ஊழியர்களைக் கொண்ட புத்ரா ஜெயா தொகுதியில் கூட பாதிக்கும் மேற்பட்டோர் பாரிசானுக்கு எதிராக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.
அத்தொகுதியில் பாரிசானுக்கு 49 விழுக்காடும் பக்காத்தானுக்கு 36 விழுக்காடும் பாஸ் கட்சிக்கு 15% வாக்குகளும் கிடைத்தன.
எனினும் பக்காத்தான் அரசாங்கம் ஆட்சியமைத்த மறுகணமே ஊழல்வாதிகளுக்கு எதிராகத் தொடுத்த மேகா போரில் முன்னாள் பிரதமர் நஜிப் உள்ளிட்ட முன்னணி அரசியல்வாதிகள் மட்டுமின்றி உயர்நிலை அரசாங்க அதிகாரிகள் பலரும் பிடிபட்டனர்.
அரசுத் துறையில் பல நிலைகளிலும் ஊழல் மலிந்து கிடந்ததால் பக்காத்தானின் பெரும் வலையில் பலரும் சிக்கினார்கள். ஊழலைத் துடைத்தொழிக்க புதிய அரசாங்கம் சட்ட ரீதியில் இந்நடவடிக்கையை மேற்கொண்ட போதிலும் அதனை சற்றும் எதிர்பாராத சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
அரசியல்வாதிகள் மட்டும்தான் சிக்குவார்கள் என்று எண்ணியிருந்த அவர்கள் புதிய அரசாங்கத்திற்கு எதிராக ஓரளவு கீழறுப்பு வேலைகளையும் மேற்கொள்ளத் தொடங்கியது வெளிச்சத்திற்கு வந்தது.
பல இலாகாக்களில் அரசாங்க ஊழியர்களின் ஒத்துழையாமையினால் சுமூகமான ஆட்சி செய்வதில் தாங்கள் சிரமத்தை எதிர்நோக்குவதாக அப்போதையப் பிரதமர் மகாதீர் குறிப்பிட்டார்.
சுமார் 22 மாதங்களுக்குப் பிறகு பக்காத்தான் ஆட்சிக் கவிழ்ந்த போது ‘பழைய குருடி கதவைத் திறடி’ எனும் நிலையில் ஊழல் ஊழியர்கள் தங்களுடைய ஆட்டத்தை மீண்டும் தொடர்ந்திருக்கக் கூடும் என்பதில் ஐயமில்லை.
ஊழலில் ஊறிப்போய் அளவில்லா சுகபோகங்களை அனுபவித்த அத்தகைய ஊழியர்கள் இயல்பாகவே பாரிசான் ஆட்சியைத்தான் மீண்டும் விரும்புவார்கள் என்பதில் மாறுபட்டக் கருத்து இருக்க முடியாது.
ஆக மேல் நிலையில் உள்ளவர்களே பில்லியன் கணக்கில் வாரி சுருட்டும் போது கீழ் நிலையில் உள்ளவர்களும் தங்களுடைய சக்திக்கு ஏற்றவாறு துணிச்சலாகக் கை வரிசையைக் காட்டியதில் வியப்பில்லைதான்.
வேலியே பயிரை மேய்ந்ததால்தான் பல இலாகாக்களில் பல்வேறு நிலைகளில் ஊழல் கலாச்சாரம் தலைவிரித்தாடியது, இன்னமும் துளிர்விட்டுக் கொண்டிருக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள் பக்காத்தானைக் கண்டு நடுங்குவதில் வியப்பில்லை, அதனை வெறுப்பதில் ஆச்சரியமில்லை.
அது மட்டுமின்றி பொய் புரட்டுகளைச் சொல்லி தங்களுடைய சகாக்களையும் பக்காத்தானுக்கு எதிராக அவர்கள் திருப்பிவிடக் கூடிய வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.
பாரிசான் பெருமளவில் வெற்றி பெற்றால்தான் சட்டத்தின் பிடியில் இருந்துத் தப்ப முடியும் என அம்னோ தலைவர் அஹ்மட் ஸாஹிட் தனது கூட்டணியின் இதரத் தலைவர்களை நோக்கி பகிரங்கமாகவே எச்சரித்தது நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அவர் தமாஷாகப் பேசியதைப் போல் தோன்றினாலும், அந்த எச்சரிக்கையில் ஊழல் ஊழியர்களுக்கும் ஒரு தகவலை அனுப்பி பிரச்சாரத்தை அவர் முடுக்கிவிட்டுள்ளார் என்பதை யாராலும் மறுக்க இயலாது.
இவற்றையெல்லாம் கடந்து ஒட்டு மொத்த அரசு ஊழியர்களுக்கும் நம்பிக்கை ஏற்படுத்தி அவர்களை கவர்ந்திழுப்பதற்கு எம்மாதிரியான யுக்திகளை பக்காத்தான் கையாளும் என்று பொறுத்திருந்துதான் நாம் பார்க்க வேண்டும்.
இருப்பினும், அரசாங்க ஊழியர்களுக்கு மலேசியாவை ஒரு செழிப்பான நாடாகவும் கட்டு கோப்பான நாடாகவும் உருவாக்கிய பெருமை உள்ளது. நாட்டின் இயக்க இயந்திரம் அவர்கள்தான். அவ்வகையில் அவர்கலுக்கு ஒரு தார்மீக கடமை உள்ளது.
அது நாட்டை பற்றுடன் பாதுகாப்பதாகும். அதோடு நாட்டை அடுத்த தலை முறைக்கு விட்டு போகும் போது, அதில் ஆக்ககரமான செயலாக்கமும், நேர்மையும், நீதியும் குன்றாமல் நிலையில் நாடு மேலும் வளரும் வகையில் இயங்குவதை உறுதி செய்தலாகும்.