கஸ்தூரி பட்டு 2013 முதல் பினாங்கில் உள்ள பத்து கவான் நாடாளுமன்றத் தொகுதியின் நடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர், இந்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
மறைந்த மூத்த டிஏபி தலைவர் பி பட்டுவின் மகளான அவர், தான் புதிய தலைவர்களுக்கு இடம் கொடுக்க விரும்புவதாகவும், தான் வேட்பாளராக நிறுத்தப்படவில்லை என்பதை மறுப்பதாகவும் கூறினார்.
இது தனது வாழ்க்கையின் கடினமான முடிவு என்று, 43 வயதான கஸ்தூரி கூறினார்: “டிஏபி மற்றும் மலேசியாவிற்கு வருங்கால தலைவர்களுக்கு வழி வகுக்கும் வகையில், வரும் தேர்தலில் நான் பதவி விலகுகிறேன் என்றும், வரும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றும் அறிவிக்க விரும்புகிறேன்” என்றார்.
பத்து கவண் எம்.பி.யாக இரண்டு முறை மக்களுக்கும் நாட்டிற்கும் சேவை செய்ய எனக்கு ஒரு தளத்தை வழங்கிய கட்சிக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டிருப்பேன் என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறினார்.
அவர் மனித உரிமைகள் பிரச்சினைகளுக்கு ஆதரவாக தனது நேரத்தை செலவிட விரும்புவதாக கூறினார்.
மரண தண்டனையை ஒழித்தல், குழந்தைத் திருமணங்களை குற்றமாக்குதல், பாலின உள்ளடக்கம், சிவில் உரிமைகள் மற்றும் அனைவருக்கும் சமூக நீதி ஆகியவற்றை வேறு ஒரு தளத்தில் என் இதயத்திற்கு நெருக்கமாகவும், தார்மீக திசைகாட்டியாகவும் கொண்டுள்ளதாக கூறினார்.
“(டிஏபி மூத்த) லிம் கிட் சியாங்கின் புத்திசாலித்தனமான வார்த்தைகள் என்னை இன்னொரு உலகிற்கு அழைத்துச் செல்கிறது, இதைத் தொடர கட்சி தரும் ஆதரவை நான் பாராட்டுகிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.
இரண்டு முறை டேவான் ராக்யாட்டில் பிரதிநிதித்துவப்படுத்த வாய்ப்பளித்த பத்து கவானில் உள்ள தனது ஆதரவாளர்களுக்கும் வாக்காளர்களுக்கும் கஸ்தூரி நன்றி தெரிவித்தார்.
அவர் முதலில் 2013 பொதுத் தேர்தலில் பத்து கவான் தொகுதியில் 25,962 வாக்குகள் பெரும்பான்மையுடன் வென்றார். அவர் 2018 தேர்தலில் 33,553 வாக்குகள் அதிக பெரும்பான்மையுடன் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.