இராகவன் கருப்பையா – எதிர்வரும் பொதுத் தேர்தலில் பேராக்கின் சுங்கை சிப்புட் தொகுதியில் ம.இ.கா.வை பிரதிநிதித்து யார் போட்டியிடுவார் எனும் கேள்வி தற்போது மீண்டும் எழுந்துள்ளது.
ஒரு காலத்தில் ம.இ.கா.வின் இரும்புக் கோட்டையாக விளங்கிய அத்தொகுதியில் அதன் தலைவர் விக்னேஸ்வரன் போட்டியிடுவார் என கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலிருந்து ஆரூடங்கள் வலுத்து வந்தன.
ஆனால் சுங்கை சிப்புட்டில்தான் போட்டியிட வேண்டும் எனும் கட்டாயம் தனக்கு இல்லை என அண்மையில் திடீரென அவர் விடுத்த ஒரு அறிக்கையினால் கட்சி உறுப்பினர்கள் இப்போது குழப்பத்தில் உள்ளனர்.
ம.இ.கா.வின் முன்னாள் தலைவர் சம்பந்தன் காலத்தில் இருந்து அரை நூற்றாண்டுக்கும் மேல் அந்தத் தொகுதி அக்கட்சியின் வசம் இருந்தது.
எனினும் கடந்த 2008ஆம் ஆண்டில் நடைபெற்ற 12ஆவது பொதுத் தேர்தலில் அந்தத் தொகுதி கைமாறியது. பி.எஸ்.எம். கட்சியைச் சேர்ந்த மைக்கல் ஜெயகுமார் ம.இ.கா.வின் மற்றொரு முன்னாள் தலைவர் சாமிவேலுவிடமிருந்து அத்தொகுதியைத் தட்டிப் பறித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து ம.இ.கா. தலைவர்களுக்கு அத்தொகுதி ‘அலர்ஜி’யாகவே இருந்து வருகிறது.
சாமிவேலுவுக்குப் பிறகு கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்ற பழநிவேலு 13ஆவது பொதுத் தேர்தலில் அங்குச் செல்லத் துணிச்சலின்றி, துணைத் தலைவர் தேவமணியை அங்கு போட்டியிட அனுப்பி பலிகடாவாக்கினார்.
அந்த சமயத்தில் கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினராக சிறந்த சேவையாற்றி வந்த தேவமணி பிறகு 14ஆவது பொதுத் தேர்தலில் மீண்டும் ஒரு முறை சுங்கை சிப்புட்டில் போட்டியிட்டு தனது அரசியல் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.
சுலபத்தில் வெற்றிபெறக் கூடியத் தொகுதியான கேமரன் மலையில் தேவமணிக்குப் பதிலாக போட்டியிட்ட பழநிவேலு நினைத்ததைப் போலவே வெற்றியடைந்த போதிலும் 14ஆவது தேர்தல் வருவதற்குள் கட்சியின் தலைவர் பொறுப்பை இழந்தார்.
பழநிவேலுவுக்குப் பிறகு கட்சியின் தலமைப் பொறுப்பை ஏற்ற சுப்ரமணியம் ஏற்கெனவே தான் போட்டியிட்ட செகாமாட் தொகுதியை விட்டு நகரவில்லை. எனினும் கடந்த பொதுத் தேர்தலில் அவரும் பக்காத்தான் அலையில் அடித்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலிருந்து விக்னேஸ்வரன் சுங்கை சிப்புட்டில் உள்ள மக்களுக்கு அதிக அளவில் சேவையாற்றி வந்தார்.
குறிப்பாக கோறனி நச்சிலின் தாக்கம் உச்சத்தில் இருந்த போது அங்குள்ள மக்களின் தேவைகளை மிகச் சிறப்பாக அவர் கவனித்துக் கொண்ட விதம் அளப்பறியது என்றே சொல்ல வேண்டும்.
இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டுதான் சுங்கை சிப்புட்டில் போட்டியிட அவர் தயாராகி வருகிறார் என கட்சி உறுப்பினர்கள் மட்டுமின்றி அத்தொகுதி மக்களும் யூகித்ததாகத் தெரிகிறது.
ஆனால் தனது நிலைப்பாடு குறித்து ஆகக் கடைசியாக அவர் செய்த அறிவிப்பானது யாரும் எதிர்பாராத ஒன்றுதான்.
எதிர்வரும் தேர்தலில் பி.எஸ்.எம். கட்சி பக்காத்தானுடன் தொகுதி இணக்கம் காணும் தருவாயில் இருக்கும் சூழலில் மைக்கல் ஜெயகுமார் மீண்டும் அங்குப் போட்டியிட ஆர்வம் காட்டியுள்ளார்.
விக்னேஸ்வரனின் உறுதியில்லா நிலைப்பாட்டுக்கும் மைக்கல் ஜெயகுமாரின் முடிவுக்கும் தொடர்பு இருக்குமோ என்று கட்சி உறுப்பினர்கள் ஐயப்பாடுக் கொள்வதிலும் நியாயம் உள்ளது.
கடந்த பொதுத் தேர்தலில் அங்கு வெற்றி பெற்ற பக்காத்தானின் கேசவனுக்கு மீண்டும் ‘டிக்கெட்’ கிடைக்க வாய்ப்பே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
எனவே அத்தொகுதியில் இம்முறை பக்காத்தானின் ஆதரவில் மைக்கல் ஜெயகுமார் போட்டியிடும் பட்சத்தில் ம.இ.கா.வைப் பிரதிநிதித்து யார் போட்டியிட்டாலும் வெற்றி வாய்ப்பே கிடையாது எனும் சூழலில் விக்னேஸ்வரன் அங்குச் செல்வாரா அல்லது வேறு யாரையாவது அங்கு அனுப்புவாரா என்று இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.