முன்னதாக, கடந்த கோடை காலத்தில் கட்சிக்குழுவுக்கு தலைமை தாங்கும் போட்டியில் சூனக் தோல்வியுற்ற பிறகு, லிஸ் டிரஸ் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரானார். ஆனால், பதவிக்கு வந்த 45 நாட்களிலேயே அவர் தமது பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமைப் பதவிக்கான போட்டியில் இருந்தபோதும் அவர் அதில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பின்னர், ரிஷி சூனக், பென்னி மோர்டான்ட் களத்தில் இருந்தனர். இதில் ரிஷி சூனக்கிற்கு ஆதரவாளர்களின் பலம் பெருகி வந்த நிலையில், அவருக்கு எதிரான களத்தில் இருந்து விலகுவதாக பென்னி மோர்டான்ட் அறிவித்தார்.
இந்த ரிஷி சூனக் யார், அவரிடமிருந்து நாம் என்ன எதிர்பார்க்கலாம்?
ஆரம்ப கால வாழ்க்கை
ரிஷி சூனக் பிரிட்டனின் முதல் ஆசிய இந்து சமூகத்தைச் சேர்ந்த பிரதமராகிறார்.
1980ஆம் ஆண்டு பிரிட்டனின் செளத்ஹாம்டனில் ரிஷி சூனக் பிறந்தார். இவரது தந்தை பொது மருத்துவர் ஆக இருந்தார். இவரது தாயார் சொந்த மருந்தகத்தை நடத்தி வந்தார். சூனக்கின் பெற்றோர் கிழக்கு ஆஃப்ரிக்காவில் இருந்து பிரிட்டனுக்கு வந்தவர்கள். இருவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.
ரிஷியின் தந்தை தற்போதைய கென்யாவில் பிறந்து வளர்ந்தார், அதே நேரத்தில் தாயார் தங்கனிகாவில் (பின்னர் தான்சானியாவின் ஒரு பகுதியாக மாறியது) பிறந்தார்.இவரது தாத்தாக்கள் இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் பிறந்தவர்கள். கிழக்கு ஆஃப்ரிக்காவில் இருந்து 1960களில் தங்கள் குடும்பங்களுடன் அவர்கள் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தனர்.
2009ஆம் ஆண்டில், சூனக் இந்திய பெரும் கோடீஸ்வரரான என்.ஆர் நாராயணமூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தியை மணந்தார். நாராயண மூர்த்தி, தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸின் நிறுவனர். மேலும் இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களின் முதல் 10 இடங்களில் இருப்பவர்.
ரிஷி – அக்ஷதா தம்பதிக்கு கிருஷ்ணா மற்றும் அனுஷ்கா என்ற இரண்டு மகள்கள் பிறந்தனர்.
2001 முதல் 2004 வரை, சூனக் கோல்ட்மேன் சாச்ஸ் என்ற நிதி முதலீட்டு நிறுவனத்தின் நிதி ஆய்வாளராக இருந்தார். பின்னர் இரண்டு தனியார் முதலீட்டாளர்கள் நிறுவனத்தில் பங்குதாரராக இருந்தார். பிரிட்டன் எம்பிக்களில் பெரும் பணக்காரர் எம்பிக்களில் ஒருவராகவும் அவர் கருதப்படுகிறார். ஆனால் தமது சொத்து விவரங்களை அவர் ஒருபோதும் பொதுவெளியில் தெரிவித்தது இல்லை.
சூனக்கின் மனைவி வரி சேமிப்பு திட்டத்தின் மூலம் ஆதாயம் அடைந்ததாக குற்றச்சாட்டை எதிர்கொண்டார். இதையடுத்து தனது குடும்பத்தின் நிதி விவகாரங்களில் “தவறு செய்யவில்லை” என்பதை ரிஷி சூனக் நிரூபிக்குமாறு குரல்கள் ஒலித்தன. அதை அவர் எதிர்கொண்டார்.
2015 முதல் அவர் யார்க்ஷயரில் உள்ள ரிச்மண்டின் கன்சர்வேடிவ் எம்.பி ஆக இருந்து வருகிறார். மேலும் தெரீசா மே அரசாங்கத்தில் இளநிலை அமைச்சராகவும் இருந்தார். தெரீசாவுக்குப் பிறகு பதவிக்கு வந்த போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தார் ரிஷி சூனக்.
கொரோனா காலத்தில் நிதியமைச்சர்
ரிஷி சூனக் 2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் நிதியமைச்சரானார். அதன் சில வாரங்களுக்குள் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பிரிட்டனில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. அத்தகைய சூழலில் நாட்டின் பொருளாதாரத்தை வழிநடத்தும் பொறுப்பு ரிஷி சூனக்கிற்கு வந்தது.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில் பொருளாதாரத்தின் பெரும்பகுதியை மூட நாடு கட்டாயப்படுத்தப்பட்டது. அத்தகைய நிலையில் 11.6 மில்லியன் தொழிலாளர்களின் ஊதியத்தை வழங்க உதவிய அரசாங்கத் திட்டமான ஃபர்லோ திட்டத்தின் வெற்றிக்காக ரிஷி சூனக் வழங்கிய பங்களிப்புக்காக அவர் பாராட்டப்படுகிறார்.
“ஹெல்ப் அவுட் டு ஈட் அவுட்” திட்டத்தைப் பற்றி பின்வரும் நாளில் தாம் பெருமிதம் கொள்வதாக ரிஷி சூனக் கூறினார் – இது கோவிட் தொற்று விகிதங்களை அதிகரிக்கக்கூடும் என்று அறிக்கைகள் தெரிவித்த போதிலும், பிரிட்டனில் பொதுமுடக்கம் நீக்கப்பட்ட பின்னர் உணவகங்கள் மற்றும் பார்களில் பணத்தைச் செலவிட மக்களை ஊக்குவித்தது.
இரண்டாம் முறையாக வாய்த்த அதிர்ஷ்டம்
கடந்த ஜூலை மாதம்,போரிஸ் ஜான்சன் ராஜிநாமா செய்த பிறகு, ரிஷி சூனக் பிரிட்டன் பிரதமராக தேர்வாவதற்கான போட்டியில் இருந்தார். ஆனால், அவர் தோல்வியுற்றார்.
அந்த நேரத்தில் அவர் முதன்மையாக ஒரு பிரச்னையில் கவனம் செலுத்தினார்: ‘மோசமடைந்து வரும் பிரிட்டன் பொருளாதார நிலை மற்றும் அதை சீர்படுத்துவதற்கான திட்டம்’ என்ற முழக்கத்தை அவர் முன்வைத்தார்.
தமது பழைய முதலாளிக்கு (போரிஸ் ஜான்சன்) பிறகு பிரதமராகும் வாய்ப்பு மிக்கவராக இருந்தாலும் டோரி உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவை பெறுவதில் ரிஷி சூனக் தவறினார். கடைசியில் லிஸ் டிரஸ் கடந்த செப்டம்பர் மாதம் நாட்டின் பிரதமராக டெளனிங் ஸ்ட்ரீட் அலுவலகத்தில் காலடி எடுத்து வைத்தார்.
வெளிநாட்டில் நடக்கும் யுக்ரேன் போர் காரணமாக உள்நாட்டில் தங்களுடைய வாழ்க்கைச் செலவை சமாளிக்க பலர் போராடுகிறார்கள். இத்தகைய சூழலில் அரசாங்கத்தில் நிலவிய குழப்பமான இரண்டு மாதங்களுக்குப் பிறகு, புதிய பிரதமர் ஒரு புதிய தொடக்கத்தை ஏற்படுத்துவார் என்று பலர் நம்புகிறார்கள்.
புதிய பிரதமர்
இந்த முன்னேற்றங்களுக்குப் பிறகு ஏழு வாரங்களில் மூன்றாவது கன்சர்வேடிவ் பிரதமராகிறார் ரிஷி சூனக். அத்துடன் பிரிட்டனின் முதல் பிரதமராகும் பிரிட்டிஷ் ஆசிரியர் ஆகவும் அவர் வரலாறு படைத்திருக்கிறார்.
– நன்றி பிபிசி தமிழ்