அம்னோவுக்குத் தாவுகிறார் என்று கூறப்பட்டு வந்த பாஸ் தலைவர் நஷாருடின் மெளனம் கலைந்து அந்த வதந்திகளைப் பொய்யாக்கியுள்ளார்.
அம்னோ தம்மை “நன்றாக சிக்கவைத்துவிட்டது” என்பதில் “உண்மை இல்லை. அதற்கு ஆதாரம் இல்லை”, என்று அந்த பாச்சோக் எம்பி இன்று ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.
“முஸ்லிம்களின் குரலாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பாஸில் சேர்ந்தவன்; அம்னோவில் சேர மாட்டேன்.
“அம்னோவில் சேரும் எண்ணம் கிஞ்சித்தும் எனக்கில்லை”, என்றாரவர்.
தம்மைப் பற்றி கட்சியின் தலைமைச் செயலாளர் முஸ்தபா அலி (வலம்) கூறியுள்ளது குறித்துக் கருத்துரைத்த நஷாருடின், தம்மைப் பற்றிய ‘சாதாரண’ வதந்திகளை வைத்து எந்த முடிவுக்கும் வந்துவிடக்கூடாது என்றார்.
“நான் அம்னோவில் சேர்கிறேன் என்ற வதந்தியை வைத்து என் செயல்களையும் அரசியல் முடிவுகளையும் எடை போடக்கூடாது”, என்றார் பாஸின் முன்னாள் துணைத் தலைவரான நஷாருடின்.
முஸ்தபா, கட்சியின் செய்தித்தாளான ஹராகா டெய்லியில், நஷாருடினும் சிலாங்கூர் பாஸ் ஆணையர் ஹசன் அலியும் அம்னோவின் வலையில் சிக்கி, அந்த இஸ்லாமியக் கட்சியில் பிளவை உண்டுபண்ணி வருவதாகக் குறைகூறியிருந்தார்.
நஷாருடின் அம்னோவுக்குச் சொந்தமான பெரித்தா மிங்குவுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் பாஸ் அதன் இஸ்லாமிய வேர்களைவிட்டு விலகிச் சென்றுவிட்டதாகக் கூறியதுதான் இதற்குக் காரணமாகும்.