இராகவன் கருப்பையா- நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக வாக்களிக்கத் தகுதியுடைய இளம் வாக்காளர்களில் நிறைய பேர் தங்களுடைய வாக்குரிமை குறித்து இன்னமும் தெரிந்து கொள்ளாமல் இருக்கின்றனர்.
குறிப்பாக இந்திய இளைஞர்களில் ஏராளமானோர் தங்களுடையப் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இயல்பாகவே இடம்பெற்றுள்ளதை உணராமல் இருக்கின்றனர் என ஜ.செ.க.வின் தேசிய உதவித் தலைவர் குலசேகரன் கூறினார்.
தலைநகரில் ஜ.செ.க. ஏற்பாடு செய்திருந்த தமிழ் ஊடகவியலாளர்களுடனான தீபாவளி விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாறறிய போது குலசேகரன் இவ்வாறு குறிப்பிட்டார்.
பெற்றோர்கள் மட்டுமின்றி நண்பர்களும் உறவினர்களும் கூட 18 வயதிலிருந்து 21 வயது வரையிலான இளையோருக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என முன்னாள் மனிதவள அமைச்சருமான குலசேகரன் கேட்டுக் கொண்டார்.
மற்ற இனத்தைச் சேர்ந்த இளையோர் இவ்விவகாரத்தில் சற்று வழிப்படைந்துள்ளனர். நம் இளைஞர்கள் இதில் பின் தங்கிவிடக் கூடாது என்றார் அவர்.
மழையோ வெய்யிலோ, ஜனநாயகக் கடமையை அவர்களும் தவறாமல் நிறைவேற்றுவதை பெரியவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
சபாய் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காமாச்சி துரைராஜூ தலைமையில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் ஜ.செ.க.வின் தலைமைச் செயலாளர் அந்தோனி லோக் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
எதிர்வரும் பொதுத் தேர்தல் மழை காலத்தில் நடைபெறுவதால் எல்லாருக்குமே அது மிகவும் சவால் மிக்க ஒன்றாக இருக்கும் என்று தமது உரையில் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக பிரச்சாரக் கூட்டங்களில் அதிக அளவில் மக்கள் கலந்து கொள்வதற்கு மழை ஒரு தடங்களாக விளங்கக் கூடும் என்றார் அவர்.
இத்தகைய சூழலில் மக்களுக்கு சரியானத் தகவல்களைக் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று லோக் கேட்டுக் கொண்டார்.
நாட்டின் மேம்பாட்டை உறுதி செய்வதற்கு ஊடகங்கள் தங்களுடன் அனுக்கமானதொரு ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
கிளேங் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ, பத்து கவான் உறுப்பினர் கஸ்தூரி பட்டு, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் நேத்தாஜி ராயர் மற்றும் கல்வித் துறையின் முன்னாள் துணையமைச்சர் தியோ நீ சிங் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.