பிரதமர் வேட்பாளர்களை சந்திக்க மலேசிய மருத்துவ சங்கம் ஆர்வம்

இராகவன் கருப்பையா- மலேசிய சுகாதார கட்டமைப்பில் தேவைப்படும் சீர்திருத்தங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு பிரதமர் வேட்பாளர்களை சந்திக்க மலேசிய மருத்துவச் சங்கம் திட்டமிட்டுள்ளது.

அந்த வேட்பாளர்கள் தங்களுடைய தேர்தல் அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன் இச்சந்திப்பை மேற்கொள்ள சங்கம் எண்ணியுள்ளதாக அதன் தலைவர் டாக்டர் முருக ராஜ் குறிப்பிட்டார்.

பக்காத்தான் கூட்டணியின் அன்வார், பாரிசானின் சப்ரி மற்றும் பெரிக்காத்தான் நேஷனலின் முஹிடின், ஆகிய மூவரிடமும் தங்களுடைய யோசனைகளை முன் வைக்கப் போவதாகக் குறிப்பிட்ட அவர், தேர்தல் அறிக்கைகளில் அந்த ஆலோசனைகள் இடம் பெற வேண்டும் என்றார்.

சங்கத்தின் 16,000 உறுப்பினர்கள், மருத்துவ நிபுணர்கள், சுகாதார அமைச்சின் அதிகாரிகள், முன்னாள் சுகாதார அமைச்சர்கள், முன்னாள் சுகாதாரத்துறை இயக்குனர்கள், கல்விமான்கள் மற்றும் இதர வல்லுனர்களிடம் இருந்து கடந்த சில ஆண்டுகளாக திரட்டப்பட்ட தகவல்களைக் கொண்டு அந்த ஆலோசனைகள் வரையப்பட்டதாக முருக ராஜ் தெரிவித்தார்.

பொது மக்களும் அவர்களுக்கு மருத்துவ சேவை வழங்குபவர்களும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அந்த பிரதமர் வேட்பாளர்கள் நன்கு அறிந்திருப்பது அவசியம் என அறிக்கை ஒன்றின் வழி அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் அறிக்கைகளில் தங்களுடைய யோசனைகள் சேர்க்கப்பட்டு, பிறகு அரசாங்கம் அமைக்கும் கூட்டணி அவற்றை முறையாக அமலாக்கம் செய்தால் அனைத்துத் தரப்பு மக்களும் பயனடைவார்கள் என முருக ராஜ் கூறினார்.