PPSMI ஐ மீண்டும் நிலை நிறுத்துமாறு நஜிப்-புக்கு 12,000 மனுக்கள்

கணித, அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் போதிக்கும் (  PPSMI ) கொள்கையைத் தொடருமாறு அரசாங்கத்துக்கு முறையீடு செய்து கொள்ளும் 12,000க்கும் மேற்பட்ட மனுக்களை பெற்றோர்கள் அமைப்பு ஒன்று சமர்பித்துள்ளது.

சிலாங்கூரில் கவலை அடைந்துள்ள பெற்றோர்கள் அமைப்பை பிரதிநிதித்த 15 பேராளர்கள் இன்று காலை புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு அந்த மனுக்களை 12க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பைகளில் கொண்டு சென்றனர். பிரதரமருடைய பரிசீலினைக்காக அந்த மனுக்கள் சமர்பிக்கப்படுகின்றன.

“PPSMI விவகாரத்தில் முக்கியமானவர்கள் என்ற முறையில் எங்கள் கருத்துக்களுக்கும் குறைகளுக்கும் புகார்களுக்கும் செவி சாய்க்காத கல்வி அமைச்சு குறித்து நாங்கள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளோம்,” என அவர்களுடைய ஒருங்கிணைப்பாளரான சம்சுதின் அகமட் கூறினார்.

அந்த மனுக்களைக் கொடுப்பதற்காக அவரும் இதர நான்கு பெற்றோர்களும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் உதவியாளர் சைபுல் அஸ்ஹாரைச் சந்தித்தனர்.

படிப்படியாக மாற்றம் நிகழும் என்று வாக்குறுதி அளித்ததின் மூலம் கடந்த மாதம் கல்வி அமைச்சருமான துணைப் பிரதமர் அந்தத் தகராற்றைத் தீர்த்து வைக்க முயன்றார்.

தற்போது ஆங்கிலத்தில் அவ்விரு பாடங்களையும் பயிலும் மாணவர்களுக்கு, அந்த மொழியில் தொடருவதா இல்லையா என்பதைத் தேர்வு செய்யும் வாய்ப்பு கொடுக்கப்படும் என அவர் சொன்னார்.

“நாங்கள் அதனை இடைக்கால நடவடிக்கையாகவே கருதுகிறோம். அறிவியல் கணித பாடங்களுக்கான போதனா மொழி ஆங்கிலத்திலிருந்து பாஹாசா மலேசியாவுக்கு மாறுவதில் சிக்கிக் கொண்டுள்ள மாணவர்களுடைய பெற்றோர்களைத் திருப்திபடுத்துவதற்காக அவ்வாறு செய்யப்படுவதாக நாங்கள் கருதுகிறோம். PPSMI இன்னும் நிராகரிக்கப்பட்டுள்ளது என்பதே அதன் அர்த்தமாகும்.”

அந்த முடிவு “உறுதி இல்லாத, தற்காலிகத் தீர்வு” என வருணித்த சம்சுதின், “முழுக் கல்வி முறையையும்” ஆழமாக மறு ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

அரசாங்கம் அந்தக் கொள்கையை கை விட முடிவு செய்த போது அந்த விஷயத்தை விவாதிப்பதற்குக் கூட பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் கூறிக்கொண்டார்.

“பெற்றோர்கள் என்னும் முறையில் எங்கள் பிள்ளைகளுக்குச் சிறந்ததைக் கோருவதற்கு எங்களுக்கு உரிமை உண்டு.  கணித அறிவியல் பாடங்களுக்கான பெரும்பாலான மேற்கோள் புத்தகங்கள் ஆங்கிலத்தில் உள்ளன,” என்றார் அவர்.

“நாங்கள் பாஹாசா மலேசியாவின் முக்கியத்துவம் பற்றி கேள்வி எழுப்பவில்லை. ஆனால் அந்த இரு பாடங்களும் அனைத்துலக ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள மொழியில் அதாவது ஆங்கிலத்தில் போதிக்கப்படுவதின் முக்கியத்துவத்தை நாம் அலட்சியம் செய்ய முடியாது,”

‘முன்னேற்ற சிந்தனையுடைய பிரதமர்’

அந்த பெற்றோர்கள் அமைப்பு ஏற்கனவே அந்த விவகாரம் மீது இரண்டு மனுக்களை சமர்பித்துள்ளது. ஆனால் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் இன்னும் பதில் அளிக்கவே இல்லை.

இந்த முயற்சியும் தோல்வி கண்டால் அவர்களது அடுத்த நடவடிக்கை என்ன என்றும் சம்சுதினிடம் வினவப்பட்டது.

‘நான் எதனையும் ஆரூடமாக கூற விரும்பவில்லை. நாங்கள் மிகவும் நம்பிக்கையோடு இருக்கிறோம். பிரதமர் மிகவும் முற்போக்கு சிந்தனையுடைய தலைவர்.”

“நாங்கள் சாலைகளில் ஊர்வலமாகச் செல்ல விரும்பவில்லை. காரணம் நாங்கள் பொறுப்புள்ள பெற்றோர்கள். அது போன்ற முன்னுதாரணத்தை எங்கள் குழந்தைகளுக்கு வழங்க நாங்கள் விரும்பவில்லை.”

2003ம் ஆண்டு அப்போதைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கணித அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் போதிக்கும் கொள்கையை அமல் செய்தார். அதற்கு தேசிய மொழி என்னும் முறையில் பாஹாசா மலேசியாவின் நிலையைத் தற்காக்கும் பல அமைப்புக்கள் ஆட்சேபம் தெரிவித்தன.

2009ம் ஆண்டு அந்த இரு பாடங்களையும் மீண்டும் பாஹாசா மலேசியாவில் போதிப்பதற்கு மாறுவதாக அரசாங்கம் அறிவித்தது.