தங்கள் கட்சியின் குறைந்தபட்ச கோரிக்கைகளை முற்றிலுமாக நிராகரித்து, பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) தேர்தல் உடன்படிக்கையை முறித்துகொண்டது என மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) துணைத் தலைவர் எஸ் அருட்செல்வன் சற்று முன்னர் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
30 அக்டோபர் 2022 தேதியிடப்பட்டு, பக்காத்தான் ஹராப்பானிடமிருந்து வந்த ஓர் அதிகாரப்பூர்வக் கடிதத்தில் இத்தகவல் தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது என அவர் சொன்னார்.
“ஓர் இடத்தைக்கூட வழங்க பி.எச். விரும்பவில்லை என்பது, பி.எஸ்.எம்.- உடனான தேர்தல் ஒப்பந்தத்தை அது விரும்பவில்லை என்பதனைக் காட்டுகிறது.
“பி.எஸ்.எம். மற்றும் மூடாவிற்குச் சில இடங்கள் ஒதுக்கப்பட்டதாக ரஃபிசி வெள்ளிக்கிழமையன்று தெரிவித்திருந்தும், இவ்வளவு தாமதமாக இத்தகவல் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதற்கு நாங்கள் வருந்துகிறோம்,” என அவர் சொன்னார்.
பி.எஸ்.எம். பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடாமல், ஒரு கூட்டணியில் இணைய வேண்டும் என்பது கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் சில சமூக உறுப்பினர்களின் விருப்பமாக இருந்ததால், பி.எச். உடன் ஒரு தேர்தல் ஒப்பந்தத்தை ஏற்படுத்த பி.எஸ்.எம். கோரியதாக அருட்செல்வன் தெரிவித்தார்.
“தேசிய முன்னணி, தேசியக் கூட்டணி, பி.எச். ஆகிய அனைத்து கூட்டணிகளையும் மதிப்பாய்வு செய்த பின்னர், பல்லினம் மற்றும் முற்போக்குக் கூட்டணியாகக் கருதப்படும் பிஎச்-உடன் தேர்தல் ஒப்பந்தத்தை வைத்துகொள்ள பி.எஸ்.எம். முடிவு செய்தது,” என அவர் சொன்னார்.
முன்னதாக, பக்காத்தான் ஹராப்பானும் பி.எஸ்.எம். உடனான தேர்தல் ஒப்பந்தம் குறித்த செயல்முறைகள் தொடங்கப்படும் என்று ஊடகங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
அதனைத்தொடர்ந்து, பி.எஸ்.எம். – பி.எச். இடையே நடந்தேறிய 2 சந்திப்புகளில், பி.எஸ்.எம். மிகக் குறைந்த கோரிக்கைகளையே முன்வைத்ததாகத் தெரிகிறது.
“கட்சியின் தேசியத் தலைவர் டாக்டர் ஜெயக்குமார், சுங்கை சிப்புட்டில் சிறந்த, வெற்றிபெறக்கூடிய ஒரு வேட்பாளர் என்பதால் அவர் அந்தத் தொகுதியில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொண்டோம்.
“ஒருவேளை சுங்கை சிப்புட் இருக்கை மறுக்கப்பட்டால், அதற்கு மாற்றாக வழங்க பிஎன் வைத்திருக்கும் வேறு இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளையும் நாங்கள் முன்மொழிந்தோம்.
“ஏதாவதொரு நாடாளுமன்றம் மற்றும் 2 சட்டமன்ற இருக்கைகளை வழங்கினாலும் எங்களுக்குச் சிக்கல் இல்லை என்பதனையும் சுட்டிக்காட்டினோம்.
“நிக் நஸ்மி மற்றும் ஸ்டீவன் சிம்’மின் பி.எச். பேச்சுவார்த்தைக் குழு, எங்கள் கோரிக்கைகளைத் தலைமை மன்றத்தில் பேசி முடிவு செய்வதாகக் கூறியதை அடுத்து, இன்றுதான் எங்களுக்கு இந்த முடிவு தெரிவிக்கப்பட்டது… வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் ஆறே நாட்கள் எஞ்சியிருக்கும் நிலையில் இந்த ஏமாற்றமான முடிவு அறிவிக்கப்பட்டது,” என பி.எஸ்.எம். கட்சியின் தேர்தல் இயக்குநருமான அருட்செல்வன் தெரிவித்தார்.
தங்கள் தரப்பில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டும், இந்தச் செயல்முறையை விரைவுபடுத்த அல்லது ஒரு வழியைக் கண்டறிய பி.எச். தீவிர முயற்சி எடுக்கவில்லை என்பது தங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக அவர் மேலும் சொன்னார்.
“பலர் நாங்கள் பி.எச். உடன் இணைந்து பணியாற்ற வேண்டுமென விரும்பினர், அவர்களுக்கும் இது பெரியதொரு ஏமாற்றம்தான். சிலர் எங்களைக் குறை சொல்வார்கள்; கட்சியின் உறுப்பினர்கள் உட்பட, இவர்கள் அனைவருக்கும் நாங்கள் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால் ‘நாங்கள் பல முயற்சிகளை முன்னெடுத்தோம், ஆனால் அது பலன் இல்லாமல் போனது! தேர்தல் ஒப்பந்தம் முடிந்துவிட்டது, ஆனால் போராட்டம் இன்னும் இல்லை!’
கடந்த மாநிலத் தேர்தல்களின் முடிவுகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலைகளைப் பார்க்கும்போது, 15-வது பொதுத் தேர்தலுக்கு இன்னும் 15 நாட்களே எஞ்சியிருக்கும் வேளையில், பி.எச்.க்கு இது மிக முக்கியமான, அதேசமயம் சவால் மிகுந்ததொரு தேர்தலாகதான் அமையுமென பி.எஸ்.எம். கருதுகிறது என்றார் அருட்செல்வன்.
“எனவே, இந்தத் தேர்தலை எதிர்கொள்ள எங்கள் தேர்தல் இயந்திரங்களையும் அடிமட்ட தொண்டர்களையும் நாங்கள் அணி திரட்டவுள்ளோம்.
“அண்மைய இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பி.எஸ்.எம். இன்று இரவு, மத்திய செயலவையின் அவசரக் கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளது. அதனைத் தொடர்ந்து நாளை (31.10.2022), தேசியச் செயலவைக் கூட்டம் நடைபெறும். அதில், பி.எஸ்.எம். தேர்தலில் போட்டியிடுவது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்,” என அருட்செல்வன் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.