ரஃபிஸியின் பொய்யா, அறியாமையா அல்லது ஆணவமா? – அருட்செல்வன் பதிலடி

“ரஃபிஸி பொய் சொல்கிறார் என்பதை விட, அவருக்கு உண்மை தெரியாது என்றுதான் நான் கூற விரும்புகிறேன். இந்த இருக்கை பேச்சுவார்த்தையின் போது உடனிருந்த முன்னாள் தலைவர் வான் அசிசா, தற்போதைய தலைவர் அன்வார் இப்ராஹிம் மற்றும் தியான் சுவா ஆகியோரிடம் ரஃபிஸி கேட்டு தெளிவடைய வேண்டும்”.

கடந்த மூன்று தேர்தல்களில், தொழில்நுட்ப ரீதியாக, பிகேஆர் சின்னத்தின் கீழ் வெற்றி பெற்றதால், சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் பிஎஸ்எம்-உடன் தேர்தல் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது என்று, இன்று ஒரு செய்தியாளர் சந்திப்பில் பி.கே.ஆர். துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி கூறியதை அடுத்து, பி.எஸ்.எம். துணைத் தலைவர் எஸ் அருட்செல்வன் இவ்வாறு பதிலளித்திருக்கிறார்.

“இந்தத் தேர்தல் நேரத்தில், அவருக்கு எதிரிகளைவிட அதிகமான நண்பர்கள் தேவைப்படலாம். அதனால், அவர் கூறியத் தகவலும் அதற்கேற்றார் போல அமைந்திருக்கலாம்,” என்றும் சற்று முன்னர் வெளியிட்ட ஓர் அறிக்கையில் அருட்செல்வன் தெரிவித்துள்ளார்.

ரஃபிஸி, “இது ஒரு வாய்ப்பு கொடுப்பது பற்றியது அல்ல, எந்தக் கட்சிக்கு வெற்றிபெறும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்பது பற்றியது. கடந்த பொதுத் தேர்தலில் (ஜி.இ.), பி.எஸ்.எம். தனது சொந்தச் சின்னத்தில் போட்டியிட்டு வைப்புத் தொகையை இழந்தது. நான் டாக்டர் ஜெயக்குமாரின் சேவைகளுக்குத் தலை வணங்குகிறேன். அவர் ஒரு சிறந்த சமூகச் சேவகர். ஆனால், அதற்காக சுங்கை சிப்புட் நாற்காலியைக் கொடுக்க முடியாது,” என்று இன்று பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பி.கே.ஆர். தலைமையகத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது கூறியிருந்தார்.

ரஃபிஸியின் கூற்றுக்குப் பதிலளித்த அருட்செல்வன், 1999-இல், சுங்கை சிப்புட்டில் முதல் முதலாக நின்றபோது, பி.எஸ்.எம். கட்சிக்குப் பதிவு இல்லை; 2008 தேர்தலுக்குப் பிறகுதான் கட்சிக்குப் பதிவு கிடைத்தது. பதிவு இல்லாததால், வேறொரு கட்சியின் சின்னத்தை ‘பிஞ்சாம்’ (இரவல்) செய்திருந்தோம் என்று கூறினார்.

“முதல் ஜி.இ.யில், லிம் கிட் சியாங் பி.எஸ்.எம்.-க்குச் சுங்கை சிப்புட்டை வழங்கினார், நாங்கள் டிஏபி சின்னத்தின் கீழ் போட்டியிட்டு, தோல்வி கண்டோம். அதன்பிறகு, டிஏபி கட்சியில் இணைந்தால் மட்டுமே வேட்பாளர்களுக்குச் சின்னத்தைப் பிஞ்சாம் செய்வோம் என்ற கொள்கை வந்தது. டாக்டர் ஜெயக்குமார், பி.எஸ்.எம். கட்சியின் மத்தியச் செயலவை உறுப்பினராக இருந்ததால் டிஏபியில் சேர மறுத்துவிட்டார்.

“எனவே, 2004-ல், பிகேஆருடன் பேச்சுவார்த்தை நடத்தி, 4 இடங்களில் சின்னத்தைப் பிஞ்சாம் கேட்டோம். சுங்கை சிப்புட் மற்றும் ஜாலோங்கில், நாங்கள் பிகேஆர் சின்னத்தில் நின்றோம், டிஏபியும் அங்குப் போட்டியிட்டது. அந்தேர்தலில், பிகேஆர் சின்னத்தில் நின்ற பி.எஸ்.எம். தோல்வி கண்டது, ஆனால், இரண்டாவது இடத்தைப் பிடித்தது. டிஏபி சுங்கை சிப்புட் நாடாளுமன்றத்தில் வைப்புத் தொகையை இழந்தது. சுங்கை சிபுட்டில் உள்ள ஜாலோங் சட்டமன்றத் தொகுதியிலும் டிஏபி மூன்றாவது இடத்தைப் பிடித்தது; பிகேஆர் சின்னத்தைப் பயன்படுத்தியப் பிஎஸ்எம் வேட்பாளர் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்,” எனக் கட்சியின் தேர்தல் இயக்குநருமான அருட்செல்வன் விளக்கமளித்தார்.

2008-ல், பிஎஸ்எம்-க்கு இன்னும் பதிவு கிடைக்காததால், டாக்டர் நசீர் (கோத்தா டாமான்சாரா) மற்றும் டாக்டர் ஜெயக்குமார் (சுங்கை சிப்புட்) இருவரும் பிகேஆர் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றதாகத் தெரிவித்த அருட்செல்வன், இவை அனைத்திற்கும் தெளிவான கடிதப் பரிமாற்றங்கள் இருந்ததாகவும், சிவராசா போன்றவர்களுக்கு இந்தச் செயற்பாடுகள் மற்றும் சின்னம் ‘பிஞ்சாம்’ செய்யப்பட்டது அனைத்தும் தெரியும் என்றும் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

“இறுதியாக, 2008 ஆகஸ்டில் பிஎஸ்எம்-க்குப் பதிவு கிடைத்தபோது, ​​சிலாங்கூர் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றச் சபாநாயகர்களுக்கு நாங்கள் கடிதம் எழுதினோம். இரு அவைகளிலும் உள்ள பட்டியலில், பி.எஸ்.எம். உறுப்பினர்கள் பிகேஆர்-இலிருந்து பிஎஸ்எம்-ஆக மாற்றப்பட்டனர். அப்போது, தெங் சாங் கிம் சிலாங்கூர் சட்டமன்றத்தின் நாயகராக இருந்தார்,” என அவர் தெரிவித்தார்.

2013 தேர்தலின் போது, பிகேஆர் சின்னத்தைப் பயன்படுத்துமாறு அன்வார் இப்ராகிம் பிஎஸ்எம்-மிடம் கோரியதாகவும் அருள் சொன்னார்.

“சிவராசா, சேவியர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. நாங்கள் அதற்கு ஒப்புக்கொண்டு பிகேஆர் சின்னத்தைப் பயன்படுத்தினோம்; ஆனால் பக்காத்தான் ரக்யாட் கூட்டணியின் ஓர் அங்கமாக இருந்த பாஸ், டாக்டர் நசீருக்கு எதிராக போட்டியிட்டது, அத்தேர்தலில் டாக்டர் நசீர் தோல்வியடைந்தார், பாரிசான் நேசனல் வெற்றி பெற்றது.

“அச்சமயம், அன்வார் இப்ராகிமுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஒன்றின்படி நான் பிஎஸ்எம் வேட்பாளராகப் போட்டியிட்டேன். சைஃபுதின் நந்தியோன் அங்கு நடந்தேறிய தர்க்கங்களை நிச்சயமாக அறிந்திருப்பார்,” என்றும் அவர் தெரிவித்தார்.

“கடந்த 2018 தேர்தலில், பேச்சுவார்த்தைத் தோல்வியடைந்ததால் நாங்கள் பிஎஸ்எம் சின்னத்தில் நின்றோம். எனவே, ரஃபிஸி, நீங்கள் உண்மைகளை ஆராய்ந்து அறிய வேண்டுமென நான் விரும்புகிறேன்.

“உண்மையை அறியாமல், ஒவ்வொரு பிரச்சினைக்கும் உங்கள் தனிப்பட்ட கருத்தை தயவுசெய்து தெரிவிக்காதீர்கள், உங்களிடமே எல்லாவற்றிற்குமான பதில்களும் உள்ளன.

அதுமட்டுமின்றி, 2004-இல் சுங்கை சிப்புட்டில் பிஎஸ்எம் போட்டியிட்டபோது, அங்கு பிகேஆர்-க்கு அதிகாரப்பூர்வ அலுவலகம்கூட இல்லை,” என அருட்செல்வன் மேலும் சொன்னார்.

“இவை அனைத்தும் உண்மை. கடந்த 2018 பொதுத் தேர்தலில் நாங்கள் பிகேஆரிடம் தோற்றோம் என்று சொல்வதும் உண்மை, அதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.

“எனவே, நீங்களும் நடந்த வரலாற்று நிகழ்வுகளைத் தயவுசெய்து ஒப்புக்கொள்ளுங்கள்,” என அருட்செல்வன் ரஃபிஸியின் கூற்றுக்குப் பதில் கூறியுள்ளார்.