15-வது பொதுத் தேர்தல் : பிஎன் கோட்டைகளை இலக்கு வைக்கும் பிஎஸ்எம்

பி.ஆர்.யூ. 15 | இந்தப் பொதுத் தேர்தலில் (பி.ஆர்.யூ.), தேசிய முன்னணி (பிஎன்) கோட்டைகளில் மட்டுமே போட்டியிடப்போவதாக மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்), அறிவித்தது.

நேற்றிரவு, செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிஎஸ்எம் துணைத் தலைவர் எஸ் அருட்செல்வன், கட்சியின் மத்தியச் செயற்குழுவின் முழுமையான பரிசீலனைக்குப் பிறகே, இம்முறை தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

“பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) உடனான தேர்தல் உடன்படிக்கையில் பிஎஸ்எம் தோல்வியுற்றாலும், நாங்கள் வேறு எந்தக் கூட்டணியிலும் சேர மாட்டோம் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளோம்,” என்று கூறிய அவர், மற்ற முற்போக்குக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரிக்க பிஎஸ்எம் தயாராக உள்ளது என்றார்.

கடந்த பொதுத் தேர்தலில், பி.எச். வெற்றி பெற்ற எந்த இடத்திலும் பிஎஸ்எம் களமிறங்காது என அவர் மேலும் சொன்னார். அந்த இடங்களில் மீண்டும் வெற்றி பெற பி.எச். கவனம் செலுத்த முடியும் என்பதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என அவர் கூறினார்.

சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில், பி.எஸ்.எம்.-க்கு இடம் கொடுக்காமல், பி.எச். தேர்தல் கூட்டணியில் கையெழுத்திடத் தவறியதை அடுத்து இந்த அறிவிப்பு வந்ததுள்ளது.

சுங்கை சிப்புட்டில் பிஎஸ்எம் போட்டியிடாது என்றும் அருட்செல்வன் தெரிவித்தார்.

நெகிரி செம்பிலான், ரெம்பாவ் நாடாளுமன்றத் தொகுதியிலும், பேராக்,  அயேர் கூனிங் சட்டமன்றத் தொகுதியிலும் பி.எஸ்.எம். தனித்துப் போட்டியிடும் என பி.எஸ்.எம். கட்சியின் தேர்தல் இயக்குநருமான அருட்செல்வன் தெரிவித்தார்.

கட்சியின் நீண்டநாள் உறுப்பினரும் செயற்பாட்டாளருமான செக்கு தீனா என அழைக்கப்படும் எஸ். தினகரன் (45) ரெம்பாவ் நாடாளுமன்றத் தொகுதியிலும், பிஎஸ்எம் துணைப் பொதுச்செயலாளரும் வழக்கறிஞருமான கே.எஸ். பவானி, 36, அயேர் கூனிங் சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிடுவார்கள் எனச் செய்தியாளர் சந்திப்பில் உடனிருந்த கட்சியின் தேசியத் தலைவர் டாக்டர் ஜெயக்குமார் அறிவித்தார்.

“இதுவரை போட்டியிடாத இரண்டு இடங்களில் பிஎஸ்எம் போட்டியிடுகிறது. ஆனால், பல காலமாக தோட்டத் தொழிலாளர்கள், விவசாயிகள், கால்நடை வளர்ப்பாளர்கள் மற்றும் அரசு குத்தகைத் தொழிலாளர்கள் உள்ளிட்ட மக்களின் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்த்து, அப்பகுதி மக்களுக்குத் தீவிரமாக உதவி வருகிறது,” என்றார் அருட்செல்வன்.