மாற்றுத்திறனாளிகளை முன்னதாக வாக்களிக்க அனுமதிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது

மாற்றுத் திறனாளிகள் நவம்பர் 19-ம் தேதிக்குள் வாக்களிக்க அனுமதிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு டமாய் மாற்றுத்திறனாளிகள் சங்கம்  அழைப்பு விடுத்துள்ளது.

சங்கத்தின் தலைவர் முருகேஸ்வரன் வீராசாமி, மாற்றுத் திறனாளிகள்  (Orang Kurang Upaya) சென்று வாக்களிக்க நவம்பர் 15 ஆம் தேதியைச் சாத்தியமான தேதியாகப் பரிந்துரைத்தார்.

வாக்களிக்கும் நாள் மழைக்காலம் என்பதால், மாற்றுத்திறனாளிகள் (PWDs) அவர்கள் நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பதில் அதிக சிரமங்களைச் சந்திக்க நேரிடும் என்று அவர் கூறினார்.

மாற்றுத்திறனாளிகள் எந்தவித இடையூறுமின்றி வாக்களிக்கத் தேவையான நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் மேற்கொள்வது சிறந்தது என முருகேஸ்வரன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 16 அன்று, மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கும் இடங்களை அணுகுவதற்கான வசதியை மேம்படுத்த ECக்கு பல கோரிக்கைகளைச் சங்கம் மற்றும் PWDs சமூகத்தில் உள்ள பிற குழுக்களும் முன்வைத்தன.

காதுகேளாத வாக்காளர்களுக்கான பஹாசா இஸ்யாரத் மலேசியா (மலேசிய சைகை மொழி) சேவைகளைச் செயல்படுத்துதல் மற்றும் வாக்குச் சாவடி மையங்களில் பார்வையற்ற வாக்காளர்களுக்கு வாசகர் அணுகல் ஆகியவை சில பரிந்துரைகளில் அடங்கும்.

“நாட்டின் மக்கள் தொகையில் 15% பேர் மாற்றுத்திறனாளிகள் (PWDs) என்று ஆய்வுகள் காட்டுகின்றன”.

“மலேசியாவில், சுமார் 600,000 மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அந்த எண்ணிக்கையில், சுமார் 193,000 பேர் GE15ல் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்,” என்று முருகேஸ்வரன் மேலும் கூறினார்.