உட்கட்சி விவாதங்களைப் பகிரங்கப்படுத்துவதை நிறுத்துங்கள்: ரபிஸியிடம் சைபுடின்

15வது பொதுத் தேர்தலுக்கான (GE15) கட்சியின் வேட்பாளர் தேர்வு செயல்முறைகுறித்து பகிரங்க அறிக்கைகளை வெளியிடுவதை நிறுத்துமாறு PKR பொதுச்செயலாளர் சைபுடின் நாசுதியோன் இஸ்மாயில் துணைத் தலைவர் ரபிசி ரம்லியை வலியுறுத்தியுள்ளார்

“கட்சி தனது முடிவை எடுத்துள்ளது. அதை மதித்து இணங்குங்கள். காரணங்கள், வாதங்கள் அல்லது எடுக்கப்பட்ட எந்தவொரு முடிவுக்கும் பின்னால் யார் இருந்தார்கள் என்பது பற்றி அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்கவும்”.

“வேட்பாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர். அது ஒன்றாக எடுக்கப்பட்ட முடிவு, ஒரு கட்சியின் முடிவு. ஒவ்வொரு உட்கட்சி விவாதமும் பகிரங்கப்படுத்தப்பட வேண்டியதில்லை. கட்சி செயல்முறை மதிக்கப்பட வேண்டும், “என்று சைபுடின் நாசுதியோன் மலேசியாகினியிடம் கூறினார்.

வேட்பாளர் தெரிவில் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராகிமுடன் கருத்து வேறுபாடு இருப்பதாக ரபிசி நேற்று தெரிவித்த கருத்துகுறித்து அவர் இவ்வாறு கூறினார்.

வரவிருக்கும் தேர்தல்களில் சுங்கை பூலோ தொகுதியைப் பாதுகாக்க அவரும் வேட்பாளர் தேர்வுக் குழுவும் ஆரம்பத்தில் பதவியில் இருக்கும் ஆர் சிவராசாவை முன்மொழிந்ததாக ரஃபிஸி கூறியிருந்தார், ஆனால் அன்வாருக்கு “மாறுபட்ட கருத்து” இருந்தது.

PKR முன்னதாகத் தனது துணை தகவல் தலைவர் ஆர்.ரமணனை சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் நிறுத்துவதாக அறிவித்தது

இந்த அறிவிப்பு உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தியது, அவர்கள் சிவராசாவை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் அல்லது மற்றொரு வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர், குறிப்பாக BN அந்த இடத்திற்கான தங்கள் வேட்பாளராகக் கைரி ஜமாலுதீனை அறிவித்தபின்னர் நிகழ்ந்தது.

பிகேஆர் அவர்கள் பெற்ற கருத்துக்களை கருத்தில் கொண்டு சுங்கை பூலோவில் ரமணனை வேட்பாளராக நிறுத்த முடிவு செய்ததாக ரஃபிஸி கூறினார்

இதற்கிடையில், சைபுடின் நாசுதியோன் அவர்கள் இப்போது செய்யக்கூடிய சிறந்த விஷயம், GE15 ஐ வெல்வதற்கான மூலோபாயத்தில் கவனம் செலுத்துவதாகும்.

முன்னோக்கி நகர்ந்து பணிபுரிவதில் கவனம் செலுத்துங்கள். சரியான செய்தியுடன் முடிந்தவரை அதிகமான வாக்காளர்களைத் திரட்டி அவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

“இன்னும் அதிக நேரம் இல்லை,” என்று சைபுடின் நாசுதியோன் கூறினார்.

வேட்புமனு தாக்கல் நாளை நவம்பர் 5 நடைபெறும் என்றும், வாக்குப்பதிவு நவம்பர் 19ஆம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.