விமான நிலையத்தில் தமிழ்; நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்கிறார் அமைச்சர்

கோலாலம்பூர் அனைத்துலக விமான (KLIA) நிலையத்தில் அறிவிப்புக்கள் அனைத்தும் தமிழ் மொழியிலும் அறிவிப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் காங் ஷோ ஹா தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் மற்றும் LCCT விமான நிலைய நிர்வாகங்களில் அறிவிப்புகள் அனைத்தையும் தமிழிலும் அறிவிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேஎல்ஐஏ-இல் மலாய், ஆங்கிலம், மெண்டரின் ஆகிய மொழிகளில் அறிவிப்பு செய்யப்படுகின்றபோது தமிழ் மொழி மட்டும் ஏன் புறக்கணிக்கப்பட்டுள்ளது? என செனட்டர் எஸ். நல்லகருப்பன் அண்மையில் நாடாளுமன்றத்தில்  விவாத நேரத்தின்போது கேள்வியெழுப்பினார்.

அவரது கேள்விக்கு கடந்த 13-ம் தேதி பதிலளித்த துணைப் போக்குவரத்து அமைச்சர் அப்துல் ரஹிம் பக்ரி, கேஎல்ஐஏ-ல் தமிழில் அறிவிப்பு செய்யும் திட்டம் எதனையும் போக்குவரத்து அமைச்சு கொண்டிருக்கவில்லை என அறிவித்தார்.

ஆனால், போக்குவரத்து அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், KLIA மற்றும் LCCT-ல் தமிழில் அறிவிப்புக்கள் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.