ஆயேர் கூனிங் தொகுதியின் பி.எஸ்.எம். வேட்பாளர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்

ஜிஇ15 | N48 ஆயேர் கூனிங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மலேசிய சோசலிசக் கட்சியின் வேட்பாளர் கே எஸ் பவாணி இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

உள்ளூர் மக்களுக்காக 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, தேர்தல் களத்தில் இறங்கியிருக்கும் பவாணி, அங்குள்ள மக்களைச் சந்தித்து, அவர்களின் பிரச்சனைகளைக் கண்டறிந்த பின்னரே இந்தத் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது என்று கூறினார்.

ஆயேர் கூனிங்கில் பிறந்து வளர்ந்த கே எஸ் பவாணி ஒரு வழக்கறிஞருமாவார். பிறந்தது முதல் அங்கேயே வாழ்ந்து வருவதால், அப்பகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தனக்கு நன்றாகப் புரியும் என அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

உள்ளூர் மக்களின் நலன்களைப் பாதுகாக்க அவர் முன்வைத்துள்ள தேர்தல் உறுதிமொழிகள் :-

 1. ஜாலான் கம்பாரில் இருந்து தெலுக் இந்தான் வரையில் புதிய சாலை அமைத்தல்.
 2. முழுநேர மருத்துவரை நியமித்து, கிராமப்புற மருத்துவமனைகளை மேம்படுத்துதல்.
 3. பணப்பொறி (ஏடிஎம் இயந்திரம்) & அஞ்சலகச் சேவைகளை மீண்டும் கொண்டுவருதல்.
 4. மின்சாரத் தடங்கல் சிக்கலுக்குத் தீர்வு காண்பதோடு, தொலைத்தொடர்பு வசதிகளையும் மேம்படுத்துதல்.
 5. பொதுப் பேருந்து சேவைக்குப் `பேராக் திராண்சிட்` நிறுவனத்தைப் பொறுப்பேற்க செய்தல்.

இவற்றோடு, ஆயேர் கூனிங்கில் தான் வெற்றிபெற்றால், அரசாங்கத்திடம் 6 அம்ச கோரிக்கைகளை முன்வைக்கவும் அவர் தயாராக உள்ளார். அவை :-

 1. வேலை உத்திரவாதத் திட்டம்
 • வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும்
 • பராமரிப்பு மற்றும் சமூகப் பணிகளில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்
 1. உணவு உத்தரவாதம்
 • உணவு உற்பத்தியாளர்களை (விவசாயிகள், கால்நடை வளர்ப்பாளர்கள் & மீனவர்கள்) அவர்கள் இடத்திலிருந்து வெளியேற்ற வேண்டாம்.
 • உணவு விலையைக் கட்டுபடுத்த வேண்டும் & உணவு உற்பத்தியாளர்களுக்கு மானியங்கள் வழங்க வேண்டும்.
 1. சமூகப் பாதுகாப்பிற்கு அதிகாரமளித்தல்
 • அனைத்து மூத்தக் குடிமக்களுக்கும் மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
 • அனைத்து முறைசாரா துறை (குத்தகை / பகுதி நேரம் / நிரந்தரம் அற்ற) தொழிலாளர்களுக்கும் சொக்சோ பாதுகாப்பை வழங்க வேண்டும்
 1. மக்களுக்கான வீடுகள்
 • பி40 & எம்40 மக்களுக்கு மலிவு விலையில் வீடுகளைக் கட்டும் இலாப நோக்கமற்ற சிறப்பு வீட்டுவசதி வாரியம்.
 1. காலநிலை நெருக்கடியைக் கையாளுதல்
 • கடல் நீர்மட்ட உயர்வு, வெள்ளம், வறட்சி & வெப்பம் போன்று, இன்னும் பிற காலநிலை நெருக்கடி விளைவுகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, மக்கள், குறிப்பாக விளிம்புநிலை சமூகங்கள் தயார் நிலையில் இருப்பதற்கான வசதிகள் மற்றும் திறனை அதிகரிக்க வேண்டும்.
 1. தேசிய நிர்வாக நிறுவனங்களின் சீர்திருத்தம்
 • உள்ளூர் ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், உள்ளூர் மக்கள் மீதான பொறுப்புக்கு உத்தரவாதம் அளிக்கவும் உள்ளூராட்சி தேர்தலை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும்.

இன்று மதியம் 2 மணியளவில், கிளினிக் டேசா ஆயேர் கூனிங் அருகே, பவாணி தனது ஆதரவாளர்களுடன் இந்தத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அவருடன் பி.எஸ்.எம். துணைத் தலைவர் எஸ் அருட்செல்வன், பொருளாளர் சோ சொக் ஹுவா, முன்னாள் துணைத் தலைவர் சரஸ்வதி போன்றோரும் இருந்தனர்.

முன்னதாக அவர், தாப்பா ரோடு, பெக்கான் கெத்தா, கம்போங் தெர்சூசுன் பத்து தீகா போன்ற இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள மக்களோடு அளவளாவினார். பல காலமாக தொடர்ந்துவரும் அவர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண, தனக்கு வாக்களித்து ஒரு வாய்ப்பு வழங்குமாறு வாக்காளர்களை அவர் கேட்டுக்கொண்டார்.