ஜிஇ15 | அனைத்து மக்களுக்குமான உணவு உத்திரவாதம் பாதிப்படையாமல் இருப்பதை உறுதிசெய்ய, உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகளைப் பேணி காத்திட வேண்டுமென கே எஸ் பவாணி தெரிவித்தார்.
பேராக், N48 ஆயேர் கூனிங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பி.எஸ்.எம். வேட்பாளரான பவாணி, ஆயேர் கூனிங்கில், அக்கட்சியின் தேர்தல் நடவடிக்கை அறையில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு கூறினார்.
அவருடன் பேராக் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த விவசாயிகளும் இருந்தனர். நாட்டில் மக்கள் எதிர்நோக்கிவரும் உணவு பாதுகாப்பு பிரச்சனை மற்றும் உணவு உற்பத்தியில் இருக்கும் தொழிலாளர்கள், குறிப்பாக விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினையை எடுத்துரைக்க இச்செய்தியாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
“ஒரு விவசாயியின் திறன் என்பது உணவைப் பயிரிட்டு உற்பத்தி செய்வதுதான். நாங்கள் வேலை செய்யும் நிலம் அபகரிக்கப்பட்டால், எங்கள் வருமான ஆதாரத்தை நாங்கள் இழக்க நேரிடும்; இதனால் பொருளாதாரமும் வீழ்ச்சியடையும். ஆனால், நாட்டின் பொருளாதாரத்தில் விவசாயிகளின் பங்களிப்பை பேராக் மாநில அரசு பாராட்டவில்லை. அது ஏன் என்று எனக்குப் புரியவில்லை,” என இன்று செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கந்தான் வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயப் பிரதிநிதி தான் தியான் சீ தெரிவித்தார்.
“மலேசியா ஆண்டுக்கு RM60 பில்லியன் மதிப்பிலான உணவை இறக்குமதி செய்கிறது. நமது விவசாயத்தை மேலும் மேம்படுத்துவதற்குத் தயாராக இருக்கும் உள்ளூர் விவசாயிகளுக்கு அரசாங்கம் ஏன் வாய்ப்பு கொடுக்கக்கூடாது? உணவை உற்பத்தி செய்யும் திறன் எங்களிடம் உள்ளது. நாங்கள் கேட்பது எளிமையானது. நமது உணவுப் பாதுகாப்பு பாதிக்கப்படாமல் இருக்க பாடுபடும் விவசாயிகளைப் பாதிகாத்து வைத்துக்கொள்ளுங்கள்!”
புசிங்`கில் இருந்து வந்திருந்த விவசாயி ஃபோங் ஹோக் சோன் கூறுகையில், “நாங்கள் விவசாயிகள் அரசாங்கத்தையோ அல்லது வளர்ச்சியையோ எதிர்க்க விரும்பவில்லை. எங்களைப் போன்ற விவசாயிகள் தொடர்ந்து விவசாயம் செய்ய வேண்டும். நாங்கள் எங்களுக்காக மட்டும் பயிரிடவில்லை, நமது மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் பாடுபடுகிறோம்,” என்றார்.
“துரோனோவில், பல தசாப்தங்களாக விவசாயம் செய்து வந்த நிலம், 2010-ல் விவசாயிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டு, தற்போது மணல் விற்பனைக்குப் பயன்படுத்தப்படுகிறது. நம்மால் மணலைச் சாப்பிட முடியுமா?” என்று ஃபோங் ஹோக் சோன் கேள்வி எழுப்பினார்.
“மணலில் இருந்து வரும் பணம் கூட மக்களைச் சென்றடையாமல், மேலதிகாரிகளுக்குத்தான் செல்கிறது; இது நாட்டை நிர்வகிக்கும் முறையல்ல,” என அவர் மேலும் சொன்னார்.
இன்றையச் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட விவசாயிகள், தங்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலத்திற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பெரிதும் உதவிய பவானிக்கு நன்றி தெரிவித்தனர்.
“மாநிலச் சட்டமன்றத்தில், சிறு விவசாயிகளைப் பாதுகாக்கத் தயாராக இருக்கும் பவானி போன்ற ஒரு சட்டமன்ற உறுப்பினரைதான் நாங்கள் தேர்ந்தெடுக்க விரும்புகிறோம்,” என்று பீடோரைச் சேர்ந்த விவசாயி ஷெர்ரி கூறினார்.
“பேராக் பெரிய நிலப்பரப்பைக் கொண்ட ஒரு மாநிலம். ஆனால், உணவு உற்பத்தி செய்யும் பல விவசாயிகள் இந்த மாநிலத்திலும் கட்டாய வெளியேற்றத்தை எதிர்கொள்கின்றனர்,” என்று பி.எஸ்.எம். வேட்பாளர் பவானி கூறினார்.
“ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், மலேசியாவில் மொத்தமுள்ள 8.2 மில்லியன் ஹெக்டர் விவசாய நிலத்தில் 0.4 மில்லியன் ஹெக்டர் மட்டுமே காய்கறிகள், பழங்கள், மீன் மற்றும் பால் பொருட்கள் உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படுகின்றது.
“இதற்கிடையில், 2021-ல் நமது நாடு 60 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான உணவை இறக்குமதி செய்தது. இது நாட்டில் உணவுப் பாதுகாப்பு இல்லாதப் பிரச்சனையை நம் நாடு எதிர்கொண்டிருப்பதைக் காட்டுகிறது. எனவே, இந்த உணவை உற்பத்தி செய்யும் சிறு விவசாயிகளை விவசாய நிலங்களில் இருந்து வெளியேற்றுவது பிரச்னையை மேலும் மோசமாக்கும்,” என்றார் அவர்.
“நமது நாடு உணவு நெருக்கடியின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் போது, உணவு உற்பத்தி செய்யும் பல விவசாயிகள் துரத்தியடிக்கபப்டுவது ஏன்? இது விசித்திரமாகவுள்ளது,” என்று பவானி கருத்து தெரிவித்தார்.
“சௌதர்ன் மலாயன் தின் டிரஞ்ஜன் (SMTD), சுங்கை குரோ, கம்பார், குவாலா கம்பார், மாலிம் நாவார், தஞ்சோங் துவாலாங், பூசிங், துரோனோ, பத்து காஜா, கந்தான், குவாலா குவாங், சுங்கை, குவாலா பிகாம், பீடோர், மம்பாங் டியாவான் போன்ற பல்வேறு இடங்களில் சிறு விவசாயிகள் எதிர்நோக்கிய சுமார் 30-க்கும் மேற்பட்ட கட்டாய வெளியேற்ற வழக்குகளை பி.எஸ்.எம். கையாண்டுள்ளது.
“விவசாயிகளின் பல வழக்குகள் நீதிமன்றத்தில் வெற்றி பெறுகின்றன, ஆனால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லை,” என்று பவானி கூறினார்.
“இதற்குக் காரணம், நமது நாட்டில் இருக்கும் நிலச் சட்டங்கள் சிறு விவசாயிகளின் அவலத்தைப் பாதுகாக்கவில்லை. எனவே, சட்டமியற்றும் செயல்முறையின் மூலம் சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்,” என்றார் அவர்.
விவசாயிகள் விரும்பும் 4 கோரிக்கைகளை, இன்றையச் செய்தியாளர் சந்திப்பில் பவாணி முன்வைத்தார்.
- காய்கறி சாகுபடி, மீன் மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியவற்றிற்காகப் பயன்படுத்தப்படும் நிலங்கள் உணவு உற்பத்தி பகுதிகளாகப் பராமரிக்கப்பட வேண்டும், “வளர்ச்சி” திட்டங்களுக்காக எந்தவொரு தரப்பினருக்காகவும் அகற்றப்படக்கூடாது;
- அரசுடன் இணைக்கப்பட்ட நிறுவனங்கள் (ஜிஎல்சி) அல்லது தனியார் நிறுவன மேம்பாட்டாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட சிறு விவசாயிகள் மற்றும் கால்நடை / மீன் வளர்ப்பாளர்களின் பயன்பாட்டில் இருக்கும் நிலங்கள், 10 முதல் 20 ஆண்டுகள் குத்தகையில் விவசாயிகள் மற்றும் கால்நடை / மீன் வளர்ப்பாளர்களிடமே திரும்பக் கொடுக்கப்பட வேண்டும்;
- உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகளை, அவர்களது விவசாய நிலங்களில் இருந்து துரத்தியடிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும்;
- அதிகாரத்தில் இருப்பவர்களின் சுயநலத்திற்காக, அரசியல் நிதி வசூலிப்பதற்காக அரசாங்க நிலங்கள் “அழிக்கப்படாமல்” இருப்பதை உறுதிசெய்யும் ஒரு `சரிபார்ப்பு – சமநிலை` பொறிமுறையை உருவாக்க நிலச் சட்டத்தைத் திருத்த வேண்டும்.
“விவசாயிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நிலத்தை, விவசாயிகளிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும்,” என பவானி கூறினார்.
“எங்கள் அனுபவத்தில், அது பாரிசான் நேசனல், பக்காத்தான் ஹராப்பான், பாரிசான் பெரிக்காத்தான் என, பேராக் மாநிலத்தில் உள்ள முக்கிய அரசியல் கூட்டணிகள் எதுவும் இந்த சிறு விவசாயிகளின் அவலநிலையைப் பற்றி உண்மையில் கவலைப்படவில்லை.”
“விவசாயிகளின் குரலை மாநிலங்களவையில் கொண்டு வர, சிறு விவசாயிகளின் பிரச்சினையில் உண்மையான அக்கறை கொண்ட பிரதிநிதிகள் தேவை. பிஎஸ்எம் அவ்வாறு செய்யத் தயாராக உள்ளது!” என்று பவானி மேலும் கூறினார்.
“பிஎஸ்எம் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டாலும், பாமர மக்களின் பிரச்சனைகளான ஒப்பந்தத் தொழிலாளர்கள், விவசாயிகள் பிரச்னைகள் போன்றவற்றை முன்னிறுத்தி குரல்கொடுக்க, இந்த இரண்டு வாரகால தேர்தல் பிரசாரத்தைப் பயன்படுத்தி கொள்கிறோம்,” எனப் பத்திரிக்கையாளர் கூட்டத்தில் உடனிருந்த பிஎஸ்எம் தேசியத் துணைத் தலைவர் அருட்செல்வன் சொன்னார்.
“பிஎஸ்எம் ஒரு சிறிய கட்சியாக இருந்தாலும், பாமர மக்களின் குரலைப் பிரதிநிதித்துவப்படுத்தத் தயாராக உள்ளது,” என அவர் மேலும் சொன்னார்.