பிகேஆர் துணைத் தலைவர் ரஃபிசி ரம்லியால் நிறுவப்பட்ட Invoke Solutions Sdn Bhd நிறுவனத்தில் MACC இன்று காலை இரண்டாவது சோதனையை நடத்தியது, அதே நேரத்தில் சுங்கத் துறையும் சோதனை செய்வதாக அறிவிப்பை அனுப்பியுள்ளது.
பெட்டாலிங் ஜெயாவில் உள்ள PKR தலைமையகத்தில் இன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், நிறுவனம் விசாரணைகளுக்கு முழுமையாக இணங்கி வருவதாகக் கூறினார்.
எவ்வாறெனினும், நவம்பர் 19ம் திகதி வாக்களிப்பு தினத்திற்கு முன்னர் பக்காத்தான் ஹராப்பானுக்கு எதிரான உணர்வுகளைத் திருப்புவதற்கான ஒரு அரசியல் வழக்கு இது என அவர் வலியுறுத்தினார்.
இன்வோக்கில் உள்ள எனது அலுவலகத்தில் MACC இரண்டாவது சோதனையை நடத்தியது, என்ன நடந்தது என்பது எனக்குப் புரிகிறது.
“பொதுத் தேர்தலில் தாங்கள் தோல்வியடைவார்கள் என்பதை BN புரிந்துகொண்டிருப்பதாக நான் நினைக்கிறேன், அதனால், பிரச்சாரத்தின் கடைசி இரண்டு அல்லது மூன்று நாட்களில், அவர்கள் அரசியல் ஆயுதங்களைக் கண்டுபிடிக்கத் தீவிரமடைந்துள்ளனர்”.
“அம்னோ, BN மற்றும் PN-க்கு எதிரான ஹராப்பான் தேர்தல் பிரச்சாரத்தின் முன்னணியில் நான் இருப்பதால், இந்த விசாரணையின் நோக்கம் என்னவென்றால், என்னைத் தாக்கவும், பொதுமக்களின் ஆதரவைத் திசைதிருப்பவும் வாக்குப்பதிவு நாளுக்கு முன்பு ஏதாவது ஒன்றைக் கண்டுபிடிப்பார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன்,” என்று பாண்டனின் வேட்பாளரான ரஃபிஸி கூறினார்.
பேரேடுகள் கைப்பற்றப்பட்டன
MACC, நிறுவனத்தின் ஆவணங்கள் மற்றும் பேரேடுகளை கைப்பற்றியதாக அவர் கூறினார்.
“நிறுவன மதிப்பீடுகளைப் பற்றி அறிய MACCக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும்,” என்று அவர் கூறினார்.
“உதாரணமாக நிறுவனத்தின் இயக்குநரின் நடப்புக் கணக்குகளை அவர்கள் கேட்கிறார்கள், நான் பொதுமக்களிடமும் MACC தலைவர் அசாம் பாக்கியிடமும் குறிப்பிட முடியும், நிறுவனம் நிறுவப்பட்ட முதல் நாளிலிருந்து நான் நிறுவனத்திடமிருந்து ஒரு பைசா கூட வாங்கவில்லை என்பதைக் கண்டு அவர்கள் ஆச்சரியப்படுவார்கள்”.
“நிறுவனம் கூட எனக்கு இன்னும் கடன்பட்டிருக்கிறது,” என்று அவர் விளக்கினார்.
MACC, இன்வோக் அலுவலகத்திலிருந்து சில ஆவணங்களை நேற்று கைப்பற்றியதுடன், ஊழியர்களை அலுவலகத்தில் ஏழு மணி நேரம்வரை விசாரணைக்காகக் காவலில் வைத்தது.
MACC மூத்த புலனாய்வு இயக்குனர் ஹிஷாமுதீன் ஹாஷிம், உத்துசான் மலேசியாவில் காலை 11.30 மணியளவில் நடந்த சோதனையை உறுதிப்படுத்தினார், இது “வழக்கமான நடைமுறை” என்று கூறினார்.
அவர் கூறுகையில், சோதனையின்போது எந்த ஒரு நபரிடமும் வாக்குமூலம் பெறப்படவில்லை. மாறாக, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான விளக்கம் மட்டுமே பெறப்பட்டது என்று அவர் நாளிதழுக்குத் தெரிவித்தார்.
அவரது சொத்து விவரம் தொடர்பாக ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் அளித்த போலீஸ் புகாரின் பேரில் இந்தச் சோதனை நடந்ததாக அவர் மேலும் உறுதிப்படுத்தினார், அதில் அவர் RM18.85 மில்லியன் நிகர சொத்துக்களை அறிவித்தார்.
இளைஞர்களின் விரும்பங்கள் மீதான தாக்குதல்
இதற்கிடையில், இந்தச் சோதனைகள் BNனுக்கு எதிராகப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும், ஏனெனில் அது இளம் வாக்காளர்களுடன் பொருந்தாது என்று ரஃபிஸி கூறினார்.
இது இளைஞர்களின் விருப்பங்களைக் குறிக்கும் ஒரு நிறுவனமாகும் என்று அவர் கூறினார்.
“அம்னோவுக்கு இது புரியவில்லை. இது இளைஞர்களுடன் எதிரொலிக்கிறது, அங்கு ஒரு 23 வயதானவர் ஒரு நிறுவனத்தை நடத்த முடியும்”.
“இது ஏராளமான வாய்ப்புகளை விரும்பும் இளைஞர்களின் விருப்பங்கள்மீதான தாக்குதலாகும், அங்கு அவர்கள் சம்பளம் பெறும் ஊழியர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் தங்கள் சொந்த நிறுவனங்களை இயக்கலாம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து முதலீடுகளைப் பெறலாம்”.
“அவர்கள் எந்தளவுக்கு அச்சுறுத்த விரும்புகிறார்களோ, அந்தளவுக்கு பிரச்சாரம் இளம் வாக்காளர்களிடையே எதிரொலிக்கும்,” என்று அவர் கூறினார்.
இந்தப் பிரச்சினை இளம் வாக்காளர்களை ஹராப்பான் நோக்கி ஈர்க்கக்கூடும் என்றும், “100 இடங்களைத் தாண்டுவது மட்டுமல்லாமல், நாடாளுமன்றத்தில் எளிதில் தனிப்பெரும்பான்மையைப் பெறுவோம் என்று நம்புகிறேன்,” என்றும் அவர் கூறினார்.