வெளிநாடுகளில் வாழும் மலேசியர்களின் தகுதி குறித்து தீர்மானிக்க வேண்டிய தேவை ஏதும் இல்லாததால் அவர்கள் அஞ்சல் மூலம் வாக்களிப்பதை உடனடியாக தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்று பெர்சே 2.0 கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
அரசமைப்புச் சட்டத்தில் அதற்கு வகை செய்யப்பட்டுள்ளது. ஆகவே இது ஆணையத்தின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது.
வெளிநாட்டு வாக்காளர்களின் தகுதியை நிர்ணயிப்பது தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல.
“தேர்தல் வாக்காளர் பட்டியலில் தன்னை வாக்களிக்க வர இயலாத வாக்காளர் என்று பதிவு செய்து கொண்டு தனது தொகுதிக்கு வெளியில் வாழும் ஒருவர் வாக்களிக்க வர இயலாதவர் என்று அரசமைப்புச் சட்டம் வரையறுத்துள்ளது”, என்று அக்கூட்டணியின் வழிகாட்டி குழு நேற்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
தங்களுடைய தொகுதியிலிருந்து குறைந்தது 250 கிலோ மீட்டருக்கு அப்பால் வசிக்கும் மலேசியர்களுக்கு அஞ்சல் வாக்களிப்பை விரிவுபடுத்த வேண்டும் என்ற அதன் கோரிக்கையை பெர்சே மீண்டும் வலியுறுத்தியது.
மேலும், தனது எட்டு கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றை தேர்தல் ஆணையம் அலட்சியப்படுத்தியுள்ளது என்றும் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட திருத்தங்கள் சுயேட்சையான, நேர்மையான தேர்தல் நடத்தப்படுவதற்கு போதுமானதல்ல என்று பெர்சே குறைகூறியது.
அழியா மை உபயோகித்தல் கோரிக்கையை முழுமையாகவும் அஞ்சல் வாக்களிப்பு குறித்த கோரிக்கையில் ஒரு பகுதியை மட்டும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது என்று பெர்சே மேலும் கூறியது.
இதர ஆறு கோரிக்கைகள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
“ஆகக் குறைந்த அளவில் ஒரு தூய்மையான, நேர்மையான தேர்தல் நடப்பதை உறுதி செய்வதற்கு இந்த எட்டு கோரிக்கைகளும் மிக அவசியமானதாகும் என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்”, என்று அது கூறியது.