ஜிஇ 2022 : அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக பெண்கள்

பிரேமா தேவராஜ் | இந்தப் பொதுத் தேர்தலிலும், போட்டியிடும் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகம் இல்லாதது மீண்டும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு, நான் பேராக், ஆயேர் கூனிங்`கில் இருந்தேன்.

மழை பெய்து கொண்டிருந்தது, நான் N48 ஆயேர் கூனிங் தொகுதியின் மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) தேர்தல் நடவடிக்கை அறைக்குச் சென்றிருந்தேன்.

அத்தொகுதிக்கான பி.எஸ்.எம். வேட்பாளர், மக்களைச் சந்தித்துவிட்டு அப்போதுதான் திரும்பியிருந்தார். வந்தவர், அவரது பிரச்சார மேலாளர் மற்றும் ஊடக மேலாளருடன் கலந்துரையாடி கொண்டிருந்தார். மூவரும் பெண்கள் என்பதை என்னால் கவனிக்காமல் இருக்க முடியவில்லை.

கொடிகள், சுவரொட்டிகள், உணவு மற்றும் துண்டுப் பிரசுரங்கள் தொடர்பான பணிகள் அந்த அறையில் மும்முரமாக நடந்துகொண்டிருந்தன. அங்கிருந்தத் தொண்டர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் என்பதை நான் கண்டேன்.

அச்சூழல், தேர்தல்களில் பெண்கள் வகிக்கும் பங்கு பற்றி என்னைச் சிந்திக்க வைத்தது. ஆம், பெண் தொண்டர்கள் என்பது அசாதாரணமான ஒன்றல்ல; பல பெண்கள் திரைக்குப் பின்னால், குறிப்பாக தேர்தல் காலங்களில் தாங்கள் சார்ந்த அரசியல் கட்சிகளுக்காக மகத்தான பல பணிகளைச் செய்வதை நாம் அறிவோம்.

ஆனால், அரசியல் அரங்கில் ஒரு பெண் தலைமைப் பொறுப்பில் இருப்பதும், பொதுத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பைப் பெறுவதும் பெரிய முரண்பாடுகளுக்கு எதிரான போராட்டம்.

பாலினச் சமத்துவம், அதன் உள்ளடக்கம் மற்றும் பன்முகத்தன்மைக்கான உறுதிப்பாடுகள் பற்றிய அனைத்து சொல்லாடல்களும் இருந்தபோதிலும், இந்தத் தேர்தலுக்கான நாடாளுமன்ற மற்றும் மாநிலத் தொகுதிகளில் பெண் வேட்பாளர்களின் நியமனம் (மீண்டும்) ஏமாற்றமளிக்கிறது.

222 நாடாளுமன்ற மற்றும் 117 மாநிலத் தொகுதிகளுக்குப் போட்டியிடும் 1,386 வேட்பாளர்களில் 187 (நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு 127 & மாநிலத் தொகுதிகளுக்கு 60) மட்டுமே பெண் வேட்பாளர்கள். இது வெறும் 13.5 விழுக்காடு மட்டுமே.

இந்தப் பொதுத் தேர்தலில், மொத்த வேட்பாளர்களில் 13.5% மட்டுமே பெண்களின் பிரதிநிதித்துவம் (அதாவது நாடாளுமன்றம் & மாநிலங்கள் இரண்டிற்கும்) உள்ளது. 2008 பொதுத் தேர்தலில், 8.8% என்ற புள்ளிவிபரங்களுடன் ஒப்பிடுகையில், 2013-ல் 9.0%, 2018-ல் 10.5% என அதிகரித்துள்ளது என்று சிலர் வாதிடலாம்.

ஆனால், இந்த அதிகரிப்பு விகிதத்தில், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் நாம் 30% பெண்களின் பிரதிநிதித்துவத்தை (30% என்பது குறிப்பிடத்தக்க பங்களிப்பு & செல்வாக்கிற்குக் குறைந்தபட்சமாக மேற்கோள் காட்டப்படும் எண்ணிக்கை) அடைந்தால் நாம் அதிர்ஷ்டசாலிகள்!

இத்தேர்தலில் போட்டியிடும் ஆறு கூட்டணிகளில், நான்கு மாநிலம் மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களின் விழுக்காடு பின்வருமாறு :

  • பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) – 19.0% (39/205)
  • பாரிசான் நேசனல் – 12.4% (22/178)
  • பெரிக்காத்தான் நேசனல் – 10.7% (16/149)
  • கெராக்கான் தானா ஆயேர் – 13.8% (16/116)

பி.எச். மற்ற கூட்டணிகளை விட அதிகமான பெண் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது, ஆனால் அதன் எண்ணிக்கை இன்னும் 30% இலக்கை நெருங்கவில்லை.

பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அரசியல் கட்சிகள் எவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொள்கின்றன என்ற கேள்வி இன்னும் எஞ்சியுள்ளது. வாக்காளர்களில் பெண்கள் 50.2% என்பதை மறந்துவிடாதீர்கள். பெண் வேட்பாளர்களை நிறுத்துவது அவ்வளவு கடினமானதா?

தேர்தல் கூட்டணிகளுக்கு வெளியே உள்ள இரண்டு கட்சிகளை இனி (சுமார் 14 கட்சிகளில் இருந்து) பார்ப்போம் : புதிதாக உருவாக்கப்பட்ட பார்ட்டி பங்சா மலேசியா (பிபிஎம்) மற்றும் மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்).

இந்த இரு கட்சிகளின் வேட்பாளர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது; ஆனால், அவர்கள் போட்டியிடும் இடங்களில் பெண் வேட்பாளர்களின் பிரதிநிதித்துவம் அதிகம், அதாவது 30% இலக்கை விட அதிகமாக உள்ளது.

பிபிஎம் கட்சியின் ஒன்பது வேட்பாளர்களில் ஆறு பேர் பெண்கள், அதாவது 66.7%. இது அக்கட்சியின் ஆறு முக்கியக் கூறுகளில் ஒன்றான பெண்களுக்கு அதிகாரமளிக்க வேண்டும் எனும் கொள்கையில் பிபிஎம் உறுதியுடன் இருப்பதைக் காட்டுகிறது.

பி.எஸ்.எம். கட்சியின் இரண்டு வேட்பாளர்களில் ஒருவர் பெண் (50%). இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அக்கட்சியில் தலைவர்களாகவும் முடிவெடுப்பவர்களாகவும் இருப்பவர்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகம். 2022-ல் பி.எஸ்.எம். மத்தியச் செயற்குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 16 உறுப்பினர்களில் 11 பேர் (68.8%) பெண்கள்.

பி.எஸ்.எம். அதன் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பில், மூன்றில் இரண்டு பங்கு பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாட்டின் முதல் அரசியல் கட்சியாகத் தெரிகிறது. ஆம், இது ஒரு சிறிய கட்சி, ஆனால் சொல்வதைச் செயலில் காட்டும் கொள்கை கொண்ட கட்சி.

பேராக், ஆயேர் கூனிங் தொகுதியின் பி.எஸ்.எம். வேட்பாளர் கே எஸ் பவானி, மத்தியச் செயற்குழு உறுப்பினர், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மற்றும் பி.எஸ்.எம். கட்சியின் பேராக் மாநிலத் தலைவர்.

2013-ஆம் ஆண்டு, வட மலேசியப் பல்கலைகழகத்தில் (யு.யு.எம்.) லிசன், லிசன், லிசன் (கேளுங்கள்) என்ற வீடியோ மூலம், பல்கலைக்கழக மாணவர் செயற்பாட்டாளராகப் பிரபலமான பவானி, இப்போது மக்களுக்கான வழக்கறிஞராக உருமாறியுள்ளார்.

விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்களின் நிலத் தகராறுகள், தொழிலாளர்களுக்கான ஈ.பி.ஃப்., சொக்சோ மற்றும் சம்பளம் உட்பட, 30-க்கும் மேற்பட்ட பலவிதமான தொழிலாளர் வழக்குகளை கையாண்டு, அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

மழை தொடர்ந்து பெய்துகொண்டிருந்தது. தேர்தல் நடவடிக்கை அறையில், ஆயேர் கூனிங் தொகுதி வாக்காளர்கள் முன்வைத்தப் பிரச்சனைகளை எவ்வாறு தொடர்ந்து எழுப்புவது என்பது குறித்து, பவானி அவரது குழுவினருடன் கலந்துரையாடி கொண்டிருந்தார்.

அவற்றுள் சில :-

  • ஜாலான் கம்பாரில் இருந்து தெலுக் இந்தான் வரையில் புதிய சாலை அமைக்க வேண்டும்.
  • முழுநேர மருத்துவரை நியமித்து, கிராமப்புற மருத்துவமனைகளை மேம்படுத்த வேண்டும்.
  • பணப்பொறி (ஏடிஎம் இயந்திரம்) & அஞ்சலகச் சேவைகளை மீண்டும் கொண்டுவர வேண்டும்.
  • மின்சாரத் தடங்கல் சிக்கலுக்குத் தீர்வு காண்பதோடு, தொலைத்தொடர்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டும்.
  • பொதுப் பேருந்து சேவைக்குப் `பேராக் திராண்சிட்` பொறுப்பேற்க வேண்டும்.

முரண்பாடுகளுக்கு எதிரான போராட்டம் – பி.எஸ்.எம்.

உள்ளூர் மக்களுக்கான இந்தத் தேர்தல் கோரிக்கைகளுடன், பி.எஸ்.எம். கட்சியின் ஆறு தேசியக் கோரிக்கைகளையும் அவரது குழுவினர் ஊக்குவித்து வருகின்றனர் :-

  1. வேலை உத்தரவாதத் திட்டம்
  2. உணவுப் பாதுகாப்பு
  3. சமூகப் பாதுகாப்பை மேம்படுத்துதல்
  4. மக்களுக்கான வீடுகள்
  5. காலநிலை நெருக்கடியைக் கையாளுதல்
  6. தேசிய நிர்வாக நிறுவனங்களின் சீர்திருத்தம்

விவாதங்கள் தீவிரமாக நடந்தன, பல யோசனைகள் கலந்துரையாடலின் போது பகிரப்பட்டன.

இது முரண்பாடுகளுக்கு எதிரான போராட்டம் என்பதைப் பவானியும் அவரது குழுவினரும் அறிந்திருந்தாலும், அவர்களது ஆர்வமும் அர்ப்பணிப்பும் பார்ப்பதற்கு மிகவும் தெளிவாக இருந்தது.

ஆயேர் கூனிங் சட்டமன்றத் தொகுதிக்கு ஐந்து முனை போட்டி நிலவுகிறது. பணம் மற்றும் தேர்தல் இயந்திரங்களின் வலிமை பி.எஸ்.எம். பக்கத்தில் இல்லை. ஆயேர் கூனிங் மாநில இருக்கை பாரிசான் நேசனலின் கோட்டை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும், இவர்களது அணி தொடர்ந்து போராடும். அவர்களது தைரியம், உறுதிபாடு மற்றும் கொள்கைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு. அதைவிட முக்கியம், பெண்கள் மற்றும் பெண்கள் தலைமைக்கு மற்றவர்கள் ஆதரவாக இருந்தால், நாடு முழுவதும் என்ன நடக்கும் என்பதற்கு இவர்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

மாநில அளவில் மக்கள் குரல்களைப் பிரதிநிதிக்க, மக்களுக்காகப் போராட ஆயேர் கூனிங் தொகுதியில் அவர்கள் ஒன்றிணைந்துள்ளனர். இந்த நேரத்தில், இது எல்லா முரண்பாடுகளுக்கும் எதிரான ஒரு போராட்டமாகத் தோன்றினாலும், முடிவெடுக்கும் அனைத்து நிலைகளிலும், பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய இவர்களிடமிருந்து உத்வேகம் பெறுவோம்.

இது வெற்றி பெற வேண்டியப் போராட்டம்!

நன்றி : Aliran