டத்தோ என்று கூறப்படும் 45 வயதான ஒரு வணிகரை மேற்கொண்டு விசாரிப்பதற்காக போலீசார் நாளை வரையில் தடுப்பு காவல் ஆணை பெற்றுள்ளனர். என்எப்சி விவகாரம் மீதான விசாரணை தொடர்புடையதாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
நேற்று வாணிக குற்ற புலன்விசாரணை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் பிற்பகல் மணி 3 லிருந்து மாலை மணி 6 வரையில் விசாரிக்கப்பட்டார்.
அவர் கைது செய்யப்பட்டதற்கும் என்எப்சியின் முறைகேடான நிருவாகம் பற்றிய விசாரணைக்கும் தொடர்புண்டா என்று வினாவுக்கு சிசிஐடி இயக்குனர் சைட் இஸ்மாயில் சைட் அஸிசான் அதை உறுதிப்படுத்தவும் இல்லை, மறுக்கவும் இல்லை.
“நான் கருத்துரைக்க விரும்பவில்லை” என்று மட்டும் சைட் இஸ்மாயில் கூறினார்.
“நேற்று பிற்பகல் மணி 4 அளவில் நாங்கள் ஒரு மலாய்க்காரரை வலைத்துப் பிடித்தது உண்மை. ஒரு வாணிக குற்றம் குறித்து விசாரணை நடத்தி வரும் எங்களுடைய அதிகாரிகளில் சிலருக்கு அந்த நபர் இலஞ்சம் கொடுக்க முயற்சித்தார்”, என்று அவர் கூறினார்.
சைட் இஸ்மாயிலின் கூற்றுப்படி அச்சந்தேகப் பேர்வழி விசாரணை நடத்திய தமது “மூன்று அல்லது நான்கு” மூத்த அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்க முயற்சித்தார் என்று கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர் அவர் கோலாலம்பூர் சிசிஐடி தலைமையகத்துக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டு அங்கு அவர் கைது செய்யப்பட்டார். மேற்கொண்டு தகவல் பெறுவதற்காக அவர் காவல் ஆணையின் கீழ் தடுத்து வைக்கப்பட்டார்.
அந்த வழக்கு இன்று முன்னேரத்தில் மலேசிய ஊழல்-தடுப்பு ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக சைட் இஸ்மாயில் கூறினார்.
அச்சந்தேகப் பேர்வழி ஒரு வெளிநாட்டு தொழிலாளர் முகவம் மற்றும் ஒரு வாடகை வண்டி நிறுவனம் ஆகியவற்றை நடத்துகிறார் என்று கூறிய இஸ்மாயில், ஒரு ஏமாற்று வழக்கில் அவர் மூன்று வாரங்களுக்கு முன்பு செராஸ்சில் கைது செய்யப்பட்டதாகவும் கூறினார்.
“அவர் ஈப்போ, பெர்சாமில் ஒரு புகாரின் கீழ் இன்னொரு ஏமாற்று வழக்கிலும் தேடப்பட்டு வருகிறார்”, என்றார் இஸ்மாயில்.
அவருக்கு “டத்தோ” பட்டம் உண்டா என்ற கேள்விக்கு, “அவர் டத்தோ என்று கூறிக்கொள்கிறார்”, என்று இஸ்மாயில் கூறினார்.
அச்சந்தேகப் பேர்வழி ஏன் சிசிஐடி அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்க முனைந்தார் மற்றும் அதில் சம்பந்தப்பட்ட தொகை எவ்வளவு என்பதை வெளிப்படுத்த இஸ்மாயில் மறுத்து விட்டார்.
அவர் ஷாரிஸாட்டின் மைத்துனரா?
அச்சந்தேகப் பேர்வழி மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட்டின் மைத்துனரா அல்லது ஓர் உறவினரா என்ற கேள்விக்கு: “அவர் யார் என்று உங்களுக்குத் தெரியும் போல் இருக்கிறது. அவரது கடைசி பெயரை சரி பாருங்கள்”, என்று இஸ்மாயில் கூறினார்.