கீர் தோயோ குற்றவாளி, நீதிமன்றம் தீர்ப்பு

சிலாங்கூர் மாநில முன்னாள் மந்திரி புசார் முகமட் கீர் தோயோவுக்கு எதிராக கடந்த ஓர் ஆண்டுகளுக்கு மேலாக நடந்த ஊழல் குற்றச்சாட்டு வழக்கில், அவர் குற்றவாளி என்று ஷா அலாம் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது.

அரசு தரப்பு அந்த 46 வயதான சுங்கை பாஞ்ஜாங் சட்டமன்ற உறுப்பினர் கீர் தோயோவுக்கு எதிராகச் சாட்டப்பற்ற ஊழல் குற்றச்சாட்டை சந்தேகத்திற்கு இடமின்றி நிருபித்துள்ளது என்று நீதிபதி மொக்தாருடின் பாக்கி கூறினார்.

இப்போது, தமது கட்சிக்காரருக்கு கருணை காட்டும்படி கீர் தோயோவின் வழக்குரைஞர்களின் வேண்டுகோளை மொக்தாருடின் செவிமடுத்துக் கொண்டிருக்கிறார்.

குற்றவியல் சட்டம் பிரிவு 165 இன் கீழ் கீர் தோயோ மீது ஊழல் குற்றம் சாட்டப்பட்டது.

கீர் தோயோவுக்கு ஈராண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

அவருக்கு விதிக்கப்படும் அபராதம் ரிம2,000 க்கு மேற்போனால் அவர் தமது சட்டமன்ற உறுப்பினர் தகுதியை இழப்பதோடு அவர் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தடை செய்யப்படுவார்.

இன்றைய தீர்ப்பை செவிமடுக்க நீதிமன்ற அறையில் கீர் தோயோவின் மனைவி ஸ்காரா கெசிக் மற்றும் சுமார் 40 ஆதரவாளர்கள் கூடியிருந்தனர்.

ஊழலுக்காக குற்றம் சாட்டப்பட்ட இரண்டாவது மந்திரி புசார்

ஷா அலாம் 10, ஜாலான் சுவசாவில் எண் 8 மற்றும் 10 ஆகிய இரண்டு துண்டு நிலங்களையும் ஒரு வீட்டையும் டிதமாஸ் செண்ட். பெர்ஹாட்டின் இயக்குனர் ஸம்சுடினிடமிருந்து 2004 ஆண்டில் டிதமாஸ் ரிம6.5 மில்லியன் கொடுத்த வாங்கிய வீட்டை ரிம3.5 மில்லியனுக்கு  கீர் தோயோ தமக்கும் தமது மனைவிக்கும் வாங்கியதாக அவர் மீது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டார்.

சிலாங்கூர் மாநிலத்தை மீண்டும் கைப்பற்றுவதற்கு அவர் (கீர்) மீது குற்றம் சாட்டப்பட வேண்டும் என்று ஓர் அமைச்சர் இன்னும் இரு அமைச்சர்களிடம் கூறப்பட்டதாக கீர் கூறிக்கொண்டார். ஆனால், அவர் அந்த மூன்று அமைச்சர்களின் பெயரைக் குறிப்பிடவில்லை.

“அவர்கள் நீதிபதியை அடக்கி ஆளும் அளவிற்குச் சக்தி வாய்ந்தவர்களா? அவர்கள் நீதிபதிக்கு உத்தரவிட முடியும் என்பதை என்னால் நம்ப முடியாது. நீதியும் அக்கூட்டத்தினருக்கு பணிய மாட்டார்”, என்று கீர் அவரது வலைதளத்தில் எழுதியிருந்தது அந்த மூன்று அமைச்சர்கள் யார் என்ற ஊகத்தை கிளப்பிவிட்டது.

அரசு தரப்பில் 25 சாட்சிகளும் எதிர்தரப்பில் கீர் தோயோவையும் சேர்த்து ஐவர் சாட்சியமளித்தனர்.