“சீட்” இல்லை என்பதால் பிகேஆரிலிருந்து விலகவில்லை, பூ செங்

பிகேஆர் புக்கிட் குளுகோர் முன்னாள் தலைவர் லிம் பூ சொங், 13-வது பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்காததால் கட்சியை விட்டு விலகியதாகக் கூறப்படுவதை மறுத்தார். 

பினாங்கு முனிசிபல் மன்ற கவுன்சிலருமான லிம்,  தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வேண்டும் என்று கட்சித் தலைமையிடம் என்றும் தாம் கேட்டதில்லை என்றார்.

கடந்த புதன்கிழமை அவர் கட்சியைவிட்டு திடீரென்று விலகியதற்கு, தேர்தல் வேட்பாளராக அவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கட்சித் தலைமை உத்தரவாதமளிக்காததுதான் காரணம் என்று கூறப்படுவதை லிம் வன்மையாக மறுத்தார்.

“தேர்தலில் வாய்ப்பளிக்குமாறு கட்சித் தலைவர் எவரிடமும் வாய்மொழியாகவோ எழுத்துமூலமாகவோ நான் கோரிக்கை விடுத்ததில்லை”, என்று லிம் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

“பிகேஆரிலிருந்து நான் விலகியதற்குக் கொள்கைதான் காரணம். பிகேஆரால் பினாங்கில் டிஏபியையோ தேசிய அளவில் பாஸ் கட்சியையோ கட்டுப்படுத்த முடியவில்லை”, என்றாரவர்.

ஒரு வழக்குரைஞரான லிம், தாம் பிகேஆரிலிருந்து விலகியதை அடுத்து தம் முன்னாள் சகாக்கள் தம் பெயரைக் கெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதை அறிந்தே இருப்பதாகவும் தெரிவித்தார்.

தம் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த முனைந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அவர் சொன்னார்.

“இனியும் பொறுத்துக்கொண்டிருக்க மாட்டேன். நான் பிகேஆரிலிருந்து விலகியது தொடர்பில் வதந்திகளைப் பரப்புவோருக்கு எதிராக முறைப்படி நடவடிக்கை எடுப்பேன்”, என்றவர் எச்சரித்தார்.

தேர்தலில் இடமில்லை என்பதால் லிம் கட்சியிலிருந்து விலகியிருக்கலாம் என்று பிகேஆர் புக்கிட் குளுகோர் தகவல் பிரிவுத் தலைவர் டாக்டர் குர்தயாள் சிங்  கூறியதாக நேற்று மலேசியாகினியில் இடம்பெற்ற செய்தியின் தொடர்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

குருதயாள் பின்னர், கட்சி உறுப்பினர்களும் பொதுமக்களும் பேசிக்கொள்வதை  அடிப்படையாக வைத்தே தாம் அவ்வாறு கூறியதாக விளக்கமளித்தார்.

முன்னாள் டத்தோ கிராமாட் சட்டமன்ற உறுப்பினரான லிம் பூ செங், ஏற்கனவே இரண்டு தடவை கட்சி மாறியவர். 1995-இல் கெராக்கானிலிருந்து மசீச-வுக்கு, 2008-க்குப் பின்னர் அதிலிருந்து பிகேஆருக்கு.

கடந்த வாரம் பூ சாங், கெராக்கானில் சேரப்போவதாகக் கூறினார். ஆனால், அக்கட்சி அதில் ஆர்வம் காட்டுவதாக தெரியவில்லை.

கட்சியைவிட்டு விலகியபோது அவர் டிஏபியின் ஆணவப்போக்கையும் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்கையும் கடுமையாக சாடினார்.

அதனால் ஆத்திரமடைந்த கொம்டார் சட்டமன்ற உறுப்பினரும் லிம்மின் அரசியல் செயலாளருமான இங் வை ஏய்க், அவரை “மனிதப் பண்பற்ற ஒரு தவளை” என்று வருணித்தார்.