மலேசிய விமான நிறுவனமான மாஸ், ஆதாயம் பெறும் நோக்கில் உலகின் சில இடங்களுக்குச் செல்வதை நிறுத்திக்கொள்ளப்போவதாக அறிவித்து ஒரு வாரம் ஆகும் வேளையில் ஆசியாவில் மேலும் நான்கு இடங்களுக்கான பயணங்களை ரத்துச் செய்யப்போவதாக இன்று கூறியது.
பல ஆண்டுகளாகவே இழப்புகளை எதிர்நோக்கி வரும் மாஸ் 2013-க்குள் ஆதாயம் பெறும் நோக்கத்தில் ஒரு திட்டத்தைக் கடந்த வாரம் அறிவித்திருந்தது. அத்திட்டத்தில் பயணப்பாதைகளை “முறைப்படுத்தலும்” அடங்கியிருந்தது. இதனால் எந்தெந்த பயணப்பாதைகள் பாதிக்கப்படும் என்பதை அது அப்போது தெரியவில்லை.
இப்போது, கோட்டா கினாபாலுவிலிருந்து ஜப்பானில் ஒசாகா, ஹனேடா ஆகியவற்றுக்கும் பெர்த்துக்கும் சோலுக்குமான பயணங்கள் நிறுத்தப்படும் என்று அது கூறியுள்ளது. ஜனவரிக்கும் பிப்ரவரிக்குமிடையில் இது அமலுக்கு வரும்.
“மேல் அறிவிப்புவரை அங்கு செல்லும் பயணங்கள் நிறுத்தி வைக்கப்படும்”, என்று அவ்விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அஹ்மட் ஜவ்ஹாரி யாஹ்யா கூறினார்.
கடந்த வாரம் அந்த விமான நிறுவனம், ரோம், ஜோஹன்னஸ்பெர்க், கேப்டவுன், பியுனஸ் அயர்ஸ், கராச்சி, டூபாய், சவூதி அராபிய நகரான டம்மாம், இந்தோனேசியாவின் சுராபாயா ஆகிய இடங்களுக்கான பயணங்கள் ஜனவரியிலிருந்து நிறுத்தப்படும் என்று கூறியது.
இந்தப் பயணங்களை நிறுத்திவிட்டு ஆசியாவில் நல்ல வாய்ப்புள்ள முக்கிய இடங்களுக்கான பயணங்களை வலுப்படுத்த அது திட்டமிடுகிறது.
எரிபொருள் விலை அதிகரிப்பு, போட்டி அதிகரிப்பு முதலியவற்றின் காரணமாக மூன்றாம் காலாண்டிலும் மாஸ் இழப்பையே எதிர்நோக்கியது.
– AFP

























