போலீசார், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் உருவப்படம் பொறிக்கப்பட்ட கொடியைக் கம்பத்திலிருந்து இறக்கி அதனிடத்தில் கல்விச் சுதந்திரத்துக்குக் கோரிக்கை விடுக்கும் கொடி ஒன்றை ஏற்றிய பல்கலைக்கழக மாணவரான ஆடம் அட்லி அப்துல் ஹாலிமிடம் இன்று 90 நிமிடங்கள் விசாரணை நடத்தினர்.
கடந்த வார இறுதியில் புத்ரா உலக வாணிக மையத்தில் நடைபெற்ற அச்சம்பவம் தொடர்பில் கட்சித் தலைவர்கள் ஆடமைக் கடுமையாகக் கண்டித்திருப்பதுடன் அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
அச்சம்பவம் தொடர்பில் அம்னோ தொடர்புள்ள பல என்ஜிஓ-கள் புகார் செய்திருப்பதை அடுத்து போலீசார் ஆடமை விசாரணைக்கு அழைத்ததாக அவரின் வழக்குரைஞர் ஃபாட்யா நட்வா பிக்ரி கூறினார்.
ஆடம், தம் செய்கைக்காக மன்னிப்புக் கேட்க முடியாது என்று கூறியுள்ளார். மன்னிப்புக் கேட்பதால் தம் கண்டனச் செயலின் நோக்கமே தோல்வியுறும் என்கிறார் அவர்.
போலீஸ் விசாரணை முடிந்து வெளிவந்த ஆடமிடம் ,யுனிவர்சிடி பெண்டிடேகான் சுல்தான் இட்ரிஸ்(யுபிஎஸ்ஐ)-இன் பிரதிநிதி ஒருவர் கட்டொழுங்கு வாரிய விசாரணைக்கு வர வேண்டும் என்று கோரும் அறிவிக்கை ஒன்றை வழங்கினார்.