நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன்,என்எப்சி, விவகாரம் தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட ஒரு வணிகர் பல நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர் என்று நம்பப்படுகிறது.
அவற்றுள், விரைவு அஞ்சல்பணி நிறுவனம் ஒன்றும் அடங்கும். அதன் விளம்பரங்கள் தொலைக்காட்சிகளில் எல்லாம் இடம்பெற்றது உண்டு.
அது பயனீட்டு வசதிகளுக்கான கட்டணத்தைக் கட்டுவதற்கான சேவைகளையும் வழங்கி வருவதாகக் கூறிக்கொள்கிறது.
தம்மை ஒரு “டத்தோ” என்று கூறிக்கொள்ளும் அந்த 45-வயது ஆடவருக்கு வாடகைக்கார் நிறுவனம் ஒன்றும் இருப்பதாக தெரிகிறது.
போக்குவரத்துச் சேவைகளை வழங்கிவரும் அந்நிறுவனம் மிக முக்கிய பிரமுகர்களுக்கு ஆடம்பரக் கார்களுடன் மெய்க்காவலர்களையும் ஏற்பாடு செய்துகொடுக்கிறதாம்.
அவர் பெரிய விற்பனைத் திட்டங்களில்-ரிம1.5பில்லியன் பெறுமதியுள்ள திட்டங்களில் எல்லாம் ஈடுபட்ட அனுபவசாலி என்றும் கூறப்படுகிறது.
ஆனால், அவரைப் பற்றிய விவரங்களை மேலும் தேடிப்பார்த்ததில் ‘டத்தோ’ அவர் பட்ட கடன்கள் பலவற்றை இன்னும் தீர்க்கவில்லையாம்.
இன்றைய சின் சியு செய்தித் தாளில், அந்த வணிகர், என்எப்சி விவகாரத்தை விசாரித்து வரும் போலீஸ் அதிகாரிகளுக்குக் கையூட்டு கொடுக்க முனைந்ததாகக் கூறப்பட்டிருந்தது. கையூட்டாகக் கொடுக்கப்பட்ட தொகை ரிம1.7 மில்லியன் என்று நம்பப்படுகிறது.
பெர்னாமா, அந்நபர் விசாரணைக்காக போலீசின் வணிகக் குற்றப் புலன்விசாரணை பிரிவு (சிசிஐடிக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகத் தெரிவித்தது.
இதன் தொடர்பில் சிசிஐடி இயக்குனர் சைட் இஸ்மாயில் சைட் அசிசானை வினவியதற்கு, என்எப்சி விவகாரம் தொடர்பில்தான் அந்நபர் கைது செய்யப்பட்டார் என்பதை அவர் உறுதிப்படுத்தவுமில்லை, மறுக்கவுமில்லை.