கீர், எதிர்காலம் குறித்து ஜனவரி 9-இல் அறிவிப்பார்

ஊழல் குற்றத்துக்காக 12 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் டாக்டர் முகம்மட் கீர் தோயோ ஜனவரி 9-இல் ஒரு முக்கிய அறிவிப்புச் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.

கீர், 49, ஷா அலாம் உயர் நீதிமன்றம் அவரைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்ததை அடுத்து இதனைத் தெரிவித்தார்.

“என் அரசியல் எதிர்காலம் குறித்து ஜனவரி 9-இல் முக்கிய அறிவிப்பு ஒன்றைச் செய்வேன்”, என்றாரவர்.

ஏன் அந்தத் தேதியைத் தேர்ந்தெடுத்தார் என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை.

தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் கீர் கூறினார்.

ஷா அலாம் 10, ஜாலான் சுவசாவில் எண் 8 மற்றும் 10 ஆகிய இரண்டு துண்டு நிலங்களையும் ஒரு வீட்டையும் டிதமாஸ் செண்ட். பெர்ஹாட்டின் இயக்குனர் ஸம்சுடினிடமிருந்து- 2004ஆம் ஆண்டில் டிதமாஸ் ரிம6.5 மில்லியன் கொடுத்த வாங்கிய வீட்டை- ரிம3.5 மில்லியனுக்கு  கீர் தோயோ, தமக்கும் தமது மனைவிக்கும் வாங்கியதில் ஊழல் நிகழ்ந்திருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் கீர்  குற்றவாளிதான் என்று நீதிபதி மொஹ்தாருடின் பாகி தீர்ப்பளித்தார்.

இத்தீர்ப்பால் கீர், சுங்கை பாஞ்சாங் தொகுதியில் திரும்பவும் போட்டியிட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏனென்றால், ஆறு மாதத்துக்கு மேற்பட்ட சிறைத்தண்டனை அல்லது ரிம2,000-த்துக்கு மேற்பட்ட அபராதம் விதிக்கப்படும் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் தம் தொகுதியை இழப்பதுடன் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாது.

“இத்தீர்ப்பு என் பணி ஓய்வுச் சம்பளத்தையும் பாதிக்கும்.தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வேன்”, என்று தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கீர் தெரிவித்தார்.

அவரது வீட்டைப் பறிமுதல் செய்ய அரசுத் தரப்பு விண்ணப்பம் செய்திருப்பது கண்டு தாமும் தம் வழக்குரைஞர்களும் அதிர்ந்து போனதாகவும் அவர் கூறினார்.

ரிம2மில்லியன் கடன் வாங்கியிருப்பதாகவும் சொத்தைப் பறிமுதல் செய்தால் யார் கடனை அடைப்பது என்றவர் வினவினார்.

“நான் அரசியல் சூழ்ச்சிக்குப் பலிகடா ஆக்கப்பட்டுள்ளேன்”, என்றவர் கூறியதை அவரின் மனைவி ஸஹாரா கிச்சிக்கும் ஆமோதித்தார்.