எம்ஏசிசி அதிகாரிகள் என்எப்சி அலுவலகத்தில் அதிரடிச் சோதனை

மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய (எம்ஏசிசி) அதிகாரிகள், அமைச்சர் ஷாரிசாட் அப்துல் ஜலில் குடும்பத்தார் சம்பந்தப்பட்ட கால்நடை வளர்ப்புத் திட்ட ஊழல் தொடர்பில் நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன் அலுவலகத்தில் இன்று அதிரடிச் சோதனை ஒன்றை நடத்தினர். 

இன்று பிற்பகல் மணி  2.50க்கு, எம்ஏசிசி அதிகாரிகள் எண்மர் கோலாலம்பூர், சொலாரிஸ் மொண்ட் கியாராவில் உள்ள அந்த அலுவலகம் வந்து சேர்ந்தார்கள்.

அதை எதிர்பார்த்து சுமார் 30 செய்தியாளர்கள் ஒரு மணி நேரமாக அங்குக் காத்திருந்தனர்.

2010 தலைமைக்கணக்காய்வாளர் அறிக்கை, என்எப்சி-இன் கணக்கில் பல குளறுபடிகள் காணப்படுவதாகக் கூறியதிலிருந்து ஷாரிசாட், அவரின் கணவர் முகம்மட் சாலே இஸ்மாயில், அவர்களின் பிள்ளைகள் வான் ஷனினுர் இஸ்ரான், வான் இஸ்ஸானா பாத்திமா ஸபேடா ஆகியோர் கவனிப்புக்கு இலக்காகி வந்துள்ளனர்.

கால்நடை வளர்ப்புக்குத் திட்டத்துக்குக் கொடுக்கப்பட்ட ரிம250 மில்லியன் அரசாங்கக் கடனை, என்எப்சி, பங்சாரில் இரண்டு ஆடம்பர கொண்டோமினியம்கள் வாங்கியது உள்பட, தவறான முறையில் செலவிட்டு வந்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நடவடிக்கை அதிகாரி வான் அப்துல் ரஹ்மான் வான் முகம்மட் சாலே தலைமையில் அதிரடிச் சோதனை நடத்திய எம்ஏசிசி அதிகாரிகள் மாலை ஐந்து மணி அளவில் சோதனையை முடித்துக்கொண்டு புறப்பட்டனர்.

இரண்டு மணி நேரம் நடத்திய சோதனையில் அதிகாரிகள் கணினி மைய செயலகம் ஒன்றையும் பல ஆவணங்களையும் எடுத்துச் செல்வதைக் காண முடிந்தது.

அப்துல் ரஹ்மான் சோதனை பற்றிக் கருத்துரைக்க மறுத்தார். சில என்எப்சி பணியாளர்களைச் சந்தித்துப் பேசியதாக மட்டும் அவர் தெரிவித்தார்.