கடற்படை கொள்முதலுக்கு ஏன் முகவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும்?

ஆறு கடற்படை ரோந்துக் கப்பல்கள் கொள்முதல் செய்யப்பட்டதற்கான விலைப் பட்டியலிருந்து பல மில்லியன் ரிங்கிட் அளவில் ஊழல் நடந்திருக்கலாம் என்ற தகவல் ஸ்கோர்பியன் கொள்முதல் சம்பவத்தை நினைவுபடுத்துகிறது.

கித்தா கட்சியின் தலைவர் ஜைட் இப்ராகிமுக்கு கிடைத்துள்ள விலைப் பட்டியல்படி மூன்று “முகவர்களுக்கு” பிரான்ஸ் ஆயுத விற்பனையாளர் டிசிஎன் எஸ்சியிடமிருந்து செய்யப்பட்ட கொள்முதலுக்கு “தொழில்நுட்ப உதவி” வழங்கியதற்காக மொத்தம் ரிம11.36 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது.

“இலஞ்சப் பணத்தை ஒதுக்குவதற்கு இது தேவை என்றாலன்றி, இந்த ஆலோசகர்களுக்கு பதிலாக, கடற்படைக்கு என்ன தேவை என்பதை ஏன் கடற்படை நிர்ணயிக்க முடியாது?”, என்று டிரோப்பிக்கானாவில் இன்று சந்தித்தபோது அவர் கூறினார்.

அவருடைய தகவலுக்கான ஆதாரத்தை வெளியிட மறுத்த ஜைட், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அவர்களுக்கான பணத்தை யூரோ நாணயத்தில் அவர்களுடைய சிங்கப்பூர் வெளிநாட்டு கணக்கில் 2010 ஆண்டிலிருந்து ஏப்ரல் 2011 வரையில் பெற்றுள்ளனர் என்றார்.

அக்டோபர் 25, 2010 விலைப் பட்டியல்படி இரண்டாம் தலைமுறை ரோந்துக் கப்பல் செயல்திட்டத்திற்கு வழங்கிய தொழில்நுட்ப பணிகளுக்காக” சூஸ்மாரின் ஆர்மடா (Sousmarin Armada) 935,000 யூரொவைப் பெற்றுள்ளது.

பாரிஸை தளமாகக்கொண்டுள்ளதாக கூறப்படும் ஒரு நிறுவனம் ஆறு கப்பல்களுக்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தைப் பெறுவதில் வெற்றி பெற்ற பவுஸ்டெட் செண்ட். பெர்ஹாட்டிற்கு விலைப் பட்டியலைக் கொடுத்துள்ளது. பணம் இரண்டு பாகங்களாக 2010 ஆண்டில் அக்டோபர் 28 லும் நவம்பர் 1 லும் வழங்கப்பட்டுள்ளன.

கசியப்பட்டுள்ள ஆவணங்களின்படி, அதே நிறுவனம் அதே போன்ற சேவைக்கு இன்னொரு விலைப் பட்டியலை நவம்பர் 2010 இல் 988,000 யூரோவுக்கு வழங்கியுள்ளது. அதே மாதத்தில் பணமும் வழங்கப்பட்டது.

புருசெல்ஸை தளமாகக் கொண்டுள்ளதாகக் கூறப்படும் செதாரியா ஹோல்டிங்ஸ் லிமிடெட் கடந்த பெப்ரவரியில் “இரண்டாம் தலைமுறை ரோந்துக் கப்பல்களுக்கு தொழில்நுட்ப மதிப்பீடுகள் செய்ததற்காக” 850,000 யூரோவுக்கான விலைப் பட்டியலை பவுஸ்டெட் நேவல் ஷிப்யாட்டிற்கு கொடுத்துள்ளது.

செதாரியா முறையே 832,000 யூரோ மற்றும் 725,000 யூரோவுக்கான இன்னும் இரண்டு விலைப் பட்டியலை பவுஸ்டெட் நேவல் ஷிப்யாட்டிற்கு கொடுத்துள்ளது.

இதனை செதாரியா மற்றும் சூஸ்மாரின் ஆர்மடா ஆகியவற்றிடம் சுயேட்சையாக உறுதிப்படுத்த இயலவில்லை.

சிங்கப்பூர் வங்கிக் கணக்கு

சிங்கப்பூரை தளமாகக் கொண்டுள்ளதாகக் கூறப்படும் இன்னொரு நிறுவனம், ஜேஎஸ்டி கார்ப்பரேசன் பிரைவேட் லிமிடெட், இவ்வாண்டு ஏப்ரலில் 312,000 யூரோவுக்கு ஒரு விலைப் பட்டியலை பவுஸ்டெட் நேவல் ஷிப்யாட்டிடம் கொடுத்துள்ளது.

இந்த விலைப்பட்டியலின்படி, இரண்டாம் தலைமுறை ரோந்துக் கப்பல்களுக்கு பல்வேறு “தொழில்நுட்ப மதிப்பீடுகள்” வழங்கப்பட்டன.

இந்நிறுவனம் விமான பராமரிப்பு, பழுது பார்த்தல், போன்றவற்றுக்கு தொழில்நுட்ட சேவைகளை வழங்குவதோடு போயிங் 747 மற்றும் இராணுவ சம்பந்தமற்ற கஸாஆன் ஹெலிகோப்டர்கள் போன்றவற்றில் தனிச்சிறப்பு உடையது என்று அதன் வலைத்தளம் தெரிவிக்கிறது.

1989 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட ஜேஎஸ்டி பொம்மைக் கார்கள், பூம்-பெட்டிகள் மற்றும் பயணப் பெட்டிகளை தொலைவிலிருந்து கண்டுபிடிக்கும் சாவிச்சங்கிலி போன்ற பொருள்களையும் விற்பனை செய்கிறது.

மூன்று நிறுவனங்களும், அவற்றில் இரண்டு ஐரோப்பாவை தளமாகக் கொண்டிருந்த போதிலும், பணத்தை வெளிநாட்டு நாணய கணக்கில் சிங்கப்பூர் கிளைகளான ஸ்டேண்டர்ட் சாட்டெர்ட் பேங்க் மற்றும் ஒசிபிசி மூலமாக பெற்றுக்கொண்டுள்ளன.

“நமது பாதுகாப்பு பலவீனமடைவதற்கு இது காரணமாக இருப்பதால்…இந்த நடமுறை நிறுத்தப்பட வேண்டும். இக்கொள்முதல்கள் மீது இராணுவ மற்றும் கப்பல் படைகளுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. செயல்படாத ஆயுதங்களுக்கு நாம் அதிகமான விலை கொடுக்கிறோம்”, என்று ஜைட் கூறினார்.

டிசிஎன்எஸ்சிடமிருந்து வாங்க வேண்டுமென்றால் பவுஸ்டெட் விநியோகிப்பாளரிடம் நேரடியாக சென்றிருக்கலாம். இந்தத் தகரர்கள் மூலமாக செல்ல வேண்டியதில்லை. இது இறுதியான விலையை உயர்த்துகிறது என்று அவர் மேலும் கூறினார்.

“பவுஸ்டெட் இந்த முகவர்களுக்கு பணம் கொடுக்கிறது. ஆனால், அத்தொகையை அவர்கள் அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்வார்கள்”, என்றாரவர்.

“இன்று வரையில், இந்த ஆறு கப்பல்களின் விலை எப்படி தொடக்க ரிம6 பில்லியனிலிருந்து ரிம9 பில்லியனுக்கு கூடியது என்று நமக்கு இன்னும் தெரியவில்லை.”