நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் உடமைகளை திருடியதாக அரசு ஊழியர் கைது

அண்மையில் பத்தாங்காளி நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடமைகளை திருடியதாக 27 வயது அரசு ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

சந்தேக நபர் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று கைது செய்யப்பட்டதாகச் சிலாங்கூர்  காவல்துறையின் தலைவர் எஸ்.சசிகலா தேவி தெரிவித்தார்.

“கைது செய்யப்பட்டபோது பாதிக்கப்பட்டவர்களுக்குச் சொந்தமானதாக நம்பப்படும் பொருட்களையும் நாங்கள் பறிமுதல் செய்தோம்,” என்று அவர் கூறியதாகத் தி ஸ்டார் இன்று மேற்கோளிட்டுள்ளது.

சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு காவலர் விண்ணப்பிக்கவுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

ஜனவரி 2 ஆம் தேதி, ஹுலு சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் சுஃபியான் அப்துல்லா(Suffian Abdullah), Father’s Organic Farm நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவரின் பொருட்களைப் பொறுப்பற்ற நபர்கள் பயன்படுத்தியதாகப் முகநூலில் எழுந்த குற்றச்சாட்டைப் போலீசார் விசாரித்து வருவதாகக் கூறினார்.

இந்தச் செய்தி பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினரால் பதிவேற்றப்பட்டதாக நம்பப்படுகிறது.

திருட்டு குற்றத்திற்காகக் குற்றவியல் சட்டம் பிரிவு 379ன் கீழ் வழக்கு விசாரணை நடந்து வந்தது.

டிசம்பர் 16 ஆம் தேதி அதிகாலை 2.46 மணிக்கு முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தில் 31 பேர் உயிரிழந்தனர், அவர்களில் 12 பேர் குழந்தைகள் மற்றும் ஒரு வயது ஆண் குழந்தை. இதில் 61 பேர் உயிர் தப்பினர்.