கார் நிறுத்துமிடம் கட்டப்பட்டது, ஆனால் கார்களை நிறுத்த முடியவில்லை

பினாங்கு கொடிமலை அடிவாரத்தில் ரிம5 மில்லியன் செலவில் கட்டப்பட்ட கார் நிறுத்துமிடம் கிறிஸ்மஸ் பரிசாக திறப்புவிழா காணும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.

120-கார்கள் நிறுத்தும் வசதிகொண்ட அந்த நிறுத்துமிடத்தைக் கட்டிமுடிக்கப்படும் பொறுப்பு சுற்றுலா அமைச்சால் பினாங்கு மேம்பாட்டுக் கழகத்திடம்(பிடிசி) ஒப்படைக்கப்பட்டு அதுவும் கட்டி முடித்து விட்டது. ஆனால் பினாங்கு முனிசிபல் மன்றம் (எம்பிபிபி) அதற்குத் தகுதிச் சான்றிதழ் வழங்க மறுக்கிறது. விதிமுறைகளுக்கு ஏற்ப அது கட்டுப்படவில்லையாம்.

அந்தக் கார் நிறுத்துமிடம் திறக்கப்படாததால் பலர், குறிப்பாக கொடிமலை ரயில் நிலையத்துக்கு அருகில் குடியிருப்பவர்களும் கொடிமலைக்கு விடுமுறையைக் கழிக்கச் செல்வோரும் பெருந் தொல்லைகளை எதிர்நோக்குகிறார்கள்.

அங்குள்ள ஒரு குடியிருப்பாளர், தை லீ கொங்,60, ஒவ்வொரு நாளும் தம் வீட்டு வாசலுக்கு வெளியில் நிறைய வாகனங்கள் கண்டமேனிக்கு நிறுத்தப்பட்டு தம் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிப்பதாகக் கூறினார்.

சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை புரியும் அந்த இடத்தில் வாகனங்கள் நிறுத்த போதுமான வசதி இல்லாததுதான் இதற்குக் காரணம் என்றாரவர்.

“பல-அடுக்கு கார் நிறுத்துமிடும் திறக்கப்பட்டால் கார்நிறுத்த பிரச்னைக்குப் பெரும் தீர்வாக இருக்கும்”, என்றாரவர்.

முறையாகக் கட்டப்படாத அந்தக் கார் நிறுத்துமிடத்துக்குப் பதில் ரிம5.5மில்லியனிலிருந்து ரிம6.5மில்லியனுக்குள் புதிய கார் நிறுத்துமிடம் ஒன்று கட்டப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

கொடிமலையில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்த சுற்றுலா அமைச்சு மொத்தம் ரிம73 மில்லியனைச் செலவிட்டுள்ளது.அந்த மேம்பாட்டுத் திட்டத்தில் அடிவார ரயில் நிலையத்தைக் கட்டுவது, ரயில் தண்டவாளங்களை மாற்றுவது, குளிர்சாதன வசதிகொண்ட இரண்டு ரயில் வண்டிகளை சுவிட்சர்லாந்திலிருந்து வாங்குவது ஆகியவற்றுடன் இந்தக் கார் நிறுத்துமிடத்தை அமைப்பதும் உள்ளிட்டிருந்தது.

40 ஆண்டுகளாக அப்பகுதியில் வசித்துவரும் தை, கட்டப்பட்ட கார் நிறுத்துமிடத்தை உடைத்துவிட்டு புதிய கார் நிறுத்துமிடத்தைக் கட்டுவதால் பண விரயம்தான் ஏற்படும் என்றார். அது,பினாங்கு மாநில அரசு கடைப்பிடிப்பதாகக் கூறிக்கொள்ளும்   ‘திறமை, பொறுப்புடைமை, வெளிப்படைத்தன்மை’  கொள்கையைப் பிரதிபலிக்கவில்லை என்றாரவர்.

டெக்சி ஓட்டுநர்களும் அங்குள்ள நிலவரத்தைக் குறைகூறினார்கள். ஆறு கார்கள் மட்டுமே நிறுத்தப்படுவதற்கான  ஓரிடத்தில், அதுவும் டெக்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் மற்ற கார்களும் நிறுத்தப்படுவதாக ஒரு டெக்சி ஓட்டுனர் கொய் ஆ யோங்,66, கூறினார்.

இதனிடையே, வார இறுதிநாட்களில் கொடிமலை ரயில் நிலையத்துக்கு வரும் மக்கள் வாகனங்களை எங்கே நிறுத்துவது என்று தெரியாமல் தலைமுடியைப் பிய்த்துக்கொண்டிருக்கும் வேளையில் புதிதாகக் கட்டப்பட்ட இந்தக் கார் நிறுத்துமிடம் மட்டும் துடைத்துப்போட்ட மாதிரியாகக் காலியாக நின்று கொண்டிருக்கிறது.