முக்கியமான 5 துறைகளில் வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்துவதை விரைவுபடுத்த மத்திய அரசு முடிவு

ஐந்து முக்கியமான துறைகள் மற்றும் துணைத் துறைகளில் வெளிநாட்டு தொழிலாளர்களைப் பணியமர்த்துவதை எளிதாகவும் விரைவாகவும் மாற்றும் திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது என்று மனிதவள அமைச்சர் வி.சிவக்குமார் கூறினார்.

நேற்று ஒரு அறிக்கையில், புலம்பெயர்ந்த தொழிலாளர் ஆட்சேர்ப்பு மீதான நிபந்தனைகளைத் தளர்த்துவதற்கான திட்டம் உற்பத்தி, கட்டுமானம், தோட்டங்கள், விவசாயம் மற்றும் சேவைகள் (உணவகங்கள் மட்டும்) துறைகள் மற்றும் துணைத் துறைகளை உள்ளடக்கியது என்று அவர் கூறினார்.

இந்த ஐந்து தொழில்களில் உள்ள முதலாளிகள் வெளிநாட்டு தொழிலாளர்களைப் பணியமர்த்துவதற்கான விண்ணப்பங்களை FWe ஒப்புதல் தொகுதியின் கீழ் வெளிநாட்டு தொழிலாளர் மையப்படுத்தப்பட்ட மேலாண்மை அமைப்பு (FWCMS) தளத்தின் மூலம் உடனடியாகச் சமர்ப்பிக்கலாம் என்று அவர் கூறினார்.

“விண்ணப்பங்கள் பெறப்பட்ட தேதியிலிருந்து மூன்று நாட்களுக்குள் வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான விண்ணப்பங்களை மனிதவள அமைச்சகம் பரிசீலித்து ஒப்புதல் அளிக்கும்,” என்று அவர் கூறினார்.

சிவக்குமார் (மேலே) MyFutureJobs போர்ட்டலில் காலியிடங்களின் விளம்பரங்களுக்கு உடனடியாக விலக்கு அளிக்கப்படும் என்று கூறினார்.

ஜனவரி 17 க்கு முன்னர்  FWe ஒப்புதல் தொகுதி மற்றும் eQuota தொகுதியில் விண்ணப்பித்த முதலாளிகள் தங்கள் விண்ணப்பங்களைத் திட்டத்தின் கீழ் பரிசீலிக்க ஏதுவாக FWe ஒப்புதல் தொகுதிமூலம் புதிய விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும் ஏதேனும் விசாரணைகளை 03-8885 2939/2940 என்ற எண்ணில் மனித வள அமைச்சகத்தின் புலம்பெயர்ந்த தொழிலாளர் மேலாண்மைப் பிரிவுக்கு அனுப்பலாம்.

ஜனவரி 10 அன்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற வெளிநாட்டு தொழிலாளர் மேலாண்மை சிறப்புக் கூட்டம், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கையாகத், தொழிலாளர் மறுசீரமைப்புத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதோடு கூடுதலாக, வெளிநாட்டு தொழிலாளர்களின் வேலைவாய்ப்புத் திட்டத்தைத் தளர்த்துவதற்கும் ஒப்புக்கொண்டது.

இந்தத் திட்டத்தின் கீழ், வேலைவாய்ப்பு மற்றும் இடஒதுக்கீடு தகுதியின் முன்நிபந்தனைகள் இல்லாமல் 15 மூல நாடுகளிலிருந்து வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த முதலாளிகள் அனுமதிக்கப்படுவார்கள்.