சபா, சரவாக் ஆகிய மாநிலங்களுக்குக் கூடுதல் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க அமைச்சரவை ஒப்புதல்

அதிக உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதில் சபா மற்றும் சரவாக்கிற்கு முன்னுரிமை அளிக்க அமைச்சரவை இன்று முடிவு செய்துள்ளதாகப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

புத்ராஜெயாவில் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், அங்குள்ள நீதிமன்றங்கள் கையாள வேண்டிய வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இரண்டு போர்னியோ மாநிலங்களுக்கும் அதிக நீதிபதிகள் தேவைப்படுவதாகக் கூறினார்.

சபா மற்றும் சரவாக்கில் உள்ள நீதிமன்ற வளாகங்கள் பல மோசமான நிலையில் இருப்பதாகக் கூறப்படுவதால், அதுகுறித்து புத்ராஜெயா ஆராயும் என்றும் பிரதமர் கூறினார்.

“(இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தின்போது) சபா மற்றும் சரவாக் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முன்மொழியப்பட்டது.

“எனவே, சபா மற்றும் சரவாக்கில் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், முதலில் அதிக பதவிகளை (நீதிபதிகள்) சேர்ப்பதில் நாங்கள் முன்னுரிமை கொடுப்போம்”.

“இரண்டாவதாக, சபா மற்றும் சரவாக்கில் உள்ள நீதிமன்ற கட்டிடங்களின் நிலையை நாங்கள் ஆராய்வோம், ஏனெனில் சில மிகவும் மோசமான நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது,” என்று அவர் கூறினார்.

குழந்தைகள் ஆணையர் நியமனம்

பிரதமரின் கூற்றுப்படி, புத்ராஜெயா, போர்னியோ மாநிலங்களில் அதிக நீதிபதிகளை நியமிப்பதில் கூட்டாட்சி அரசியலமைப்பைப் பின்பற்றுவார், அங்கு இது போன்ற விஷயங்கள் யாங் டி-பெர்டுவான் அகோங்கிற்கு வழங்கப்படுவதற்கு முன்பு அந்தந்த மாநிலங்களின் ஆளுநர்களுக்குப் பரிந்துரைக்கப்பட வேண்டும்.

இதற்கிடையில், செய்தியாளர்களின்போது, ​​சுஹாகாமுக்கு குழந்தைகள் ஆணையாளரை நியமிக்க அமைச்சரவையின் முடிவையும் அன்வார் அறிவித்தார்.

“சுஹாகாமின் கீழ் (இதற்காக) தன்னாட்சி பெற்ற ஒரு சிறப்புப் பிரிவு இருக்கும், ஏனெனில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட பல துஷ்பிரயோக வழக்குகள் மற்றும் சமூகப் பிரச்சினைகள் உள்ளன.

துணைப் பிரதமர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடியை சமூகப் பிரச்சினைகள்குறித்த குழுவின் தலைவராகவும், அது தொடர்பான விஷயங்களைப் பார்க்கவும் நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம், அவை (பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர்) நான்சி ஷுக்ரியின் கீழ் உள்ளன,” என்று அன்வார் கூறினார்.