பினாங்கு துணை முதலைமச்சர் II பதிவியிலிருந்து டாக்டர் பி. இராமசாமி விலகிக்கொள்ள வேண்டும் என்று டிஎபியின் தேசியத் தலைவர் கர்பால் சிங் இன்று விடுத்த கோரிக்கை அவர்கள் இருவருக்குமிடையிலான மோதலை மேலும் வலுவடையச் செய்துள்ளது.
கட்சி மற்றும் கட்சியின் தலைவர்களை பகிரங்கமாக குறைகூறுதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என்று டிஎபியின் மத்திய நிருவாகக்குழு விடுத்திருந்த கட்டளையை மீறியதற்காக இராமசாமி தானாகவே பதவியிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்று கர்பால் சிங் கூறினார்.
“மாநில அரசில் டாக்டர் இராமசாமியின் பதவியை இனிமேலும் தொடர்ந்து தக்கவைக்க இயலாது ஏனென்றால் கட்சியின் உள்விவகாரங்களை ஊடகங்களுக்கு வெளியிடக்கூடாது என்று கட்சியின் மூவர் குழுவின் முடிவை அவர் மீறியுள்ளார்”, என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
தம்மைக் குறை கூறுபவர்கள் தமக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டியுள்ளனர் ஏனென்றால் அவர்கள் தங்களுடைய செயல்திட்டங்கள் மற்றும் சலுகைகளுக்காக விடுத்த கோரிக்கைகளை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று இராமசாமி கூறியதாக த ஸ்டார் நாளிதழ் அதன் வியாழக்கிழமை பதிப்பில் கூறியிருந்ததை கர்பால் சுட்டிக் காட்டினார்.
இவ்வறிக்கையின் வழி தம்மை (கர்பால்), செரி டெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயர் மற்றும் பகான் டாலம் சட்டமன்ற உறுப்பினர் தனசேகரன் ஆகியோரைத்தான் அவர் குறிப்பிடுகிறார் என்ற தோற்றத்தை மக்களிடம் தெளிவாக அளித்துள்ளார்.
“இந்த விவகாரம் மிகக் கடுமையான விளைவுகளைக் கொண்டுள்ளதால், துணை முதலமைச்சர் என்ற அவரது தகுதி இப்போது நிலைநிறுத்த இயலாததாகியுள்ளது. இது ஒரு கடும் குற்றச்சாட்டாகும். இதுவரையில், டாக்டர் இராமசாமி அந்த அறிக்கை வெளியிட்டத்தை மறுக்கவில்லை”, என்று கர்பால் கூறினார்.
“இராமசாமி கடமையில் தவறிவிட்டார்”
இதில் சம்பந்தப்பட்டுள்ளவர்களின் பெயரை வெளியிடுமாறும், அவர்கள் மீது போலீசாரிடமும் மலேசிய ஊழல்-தடுப்பு ஆணையத்திடமும் (எம்எசிசி) புகார் செய்யுமாறும் கர்பால், இராமசாமிக்கு சவால் விடுத்தார்.
“அவர் அச்செய்தி அறிக்கையை மறுக்காமலும், அதற்கு திருத்தம் கோராமலும் இருந்து வருவதால், சம்பந்தப்படுத்தியுள்ளவர்களின் பெயரை வெளியிடுமாறும், அக்குற்றச்சாட்டுகள் ஊழல் முயற்சி நடந்தது என்பதற்கு ஈடானதால் போலீஸ் மற்றும் எம்எசிசியிடம் புகார் செய்யுமாறு நான் அவருக்கு சவால் விடுகிறேன்”, என்றார் கர்பால்.
துணை முதலமைச்சர் என்ற முறையில் இராமசாமி தமது கடமையிலிருந்து தவறிவிட்டதோடு சம்பந்தப்பட்ட துறைகளிடம் தெரிவிக்காமல் இருந்ததன் மூலம் அவர் குற்றம் புரிந்துள்ளார் என்று கர்பால் மேலும் கூறினார்.
இதற்கு உடனடியாக எதிர்வினை அளித்த டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் மோதலில் ஈடுபட்டிருக்கும் தலைவர்கள் தங்களுடைய வேற்றுமைகளை கட்சிக்குள்ளே தீர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
“அனைத்து டிஎபி தலைவர்களையும் பாரிசான் ஊடகங்களின் வலையில் வீழ்ந்துவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அனைத்து வேற்றுமைகளையும் கட்சிக்குள்ளே கையாண்டு தீர்வு காணுங்கள், வெளியில் அல்ல”, என்று அவர் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
இராமசாமி விவகாரத்தை பயன்படுத்தி ஊடகங்கள் பிஎன் அரசியல் திட்டத்திற்கு உதவுகின்றன என்றார் லிம்.