இப்போது பேராக் டிஎபியில் புகைச்சல்

பினாங்கில் டிஎபி தலைவர்களான கர்பாலுக்கும் இராமசாமிக்கும் இடையிலான மோதல் இன்னும் தீராத வேளையில், பேராக் டிஎபியில் புகைச்சல் கிளம்பியுள்ளது.

பேராக் மாநில டிஎபியின் இங்கா கோர் மிங்கின் மனைவி சம்பந்தப்பட்டுள்ள ஒரு தையல் ஒப்பந்த விவகாரத்தில் அவர் உண்மையைக் கூற வேண்டும் என்று டிஎபியின் தேசிய உதவித் தலைவரான எம். குலசேகரன் நேற்று நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கோரியுள்ளார்.

“வணிகமும் அரசியலும் ஒன்றோடொன்று கலக்கக்கூடாது. அரசியலிருந்து பணம் தேடக்கூடாது… கட்சியின் சிறந்த நலன் கருதி, இங்கா அவ்விவகாரத்தைத் தெளிவு படுத்த வேண்டும்” என்று குலசேகரன் கூறியதாக இன்றைய த ஸ்டார் நாளிதழ் கூறுகிறது.

குலசேகரன்தான் இவ்விவகாரம் குறித்து இங்காவிடம் கேள்வி எழுப்பிய முதல் டிஎபி தேசியத் தலைவராவார். முடிந்துபோன மாநில டிஎபி தேர்தலில் அவ்விருவரும் எதிரும்புதிருமாக இருந்தனர்.

இன்று தொடர்பு கொண்டபோது, இங்கா தமக்கு எதிராக குலசேகரன் கூறியுள்ள குற்றச்சாடு குறித்து கருத்து கூற மறுத்து விட்டார். ஆனால், தானும் தனது மனைவியும் அவ்விவகாரத்தில் குற்றமற்றவர்கள் என்று கூறியதோடு தம்மீது குற்றம் சுமத்தியவர் மீது அவதூறு வழக்கு தொடரப் போவதாக உறுதியளித்தார்.

செகுபாங் டுவா புளோக் என்ற வலைதளத்தைச் சேர்ந்த வலைப்பதிவாளர் அஹமட் சோபியான் யாஹயா ஈதன் & எல்டன் செண்ட் பெர்ஹாட் தையல்காரர் ஈப்போ நகர மன்றத்திலிருந்து 24 பகலுடைகளுக்கான (lounge suits) ஒப்பந்தத்தை சந்தேகத்திற்குரிய சூழ்நிலையில் பெற்றுள்ளதாக கூறிக்கொண்டார்.

எம்எசிசியிடம் புகார்

2008 ஆம் ஆண்டில், பக்கத்தான் பேராக் மாநிலத்தைக் கைப்பற்றிய 42 நாள்களுக்குப் பிறகு தோற்றுவிக்கப்பட்ட அந்நிறுவனம் இங்காவின் மனைவிக்குச் சொந்தமானது என்றும் உடைகளுக்காக கூறப்பட விலை அதிகமானதாக இருந்தும் அவருக்கு குத்தகை கிடைத்துள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இவ்விவகாரத்தில் இங்கா தமது செல்வாக்கை பயன்படுத்தியுள்ளார் என்று அந்த வலைப்பதிவர் கூறிக்கொண்டார்.

ஆனால், ஈதன் & எல்டன் அக்குற்றச்சாட்டை மறுத்துள்ளது. அந்நிறுவனத்தின் முக்கிய பங்காளி ஓர் அனுபவமிக்க தையல்காரர். உயர்ந்த ரக துணி பயன்படுத்தியது அந்த ஒப்பந்தம் கிடைத்ததற்கான காரணம் என்று அது மேலும் கூறியது.

தமக்கும் அந்த ஒப்பந்தத்திற்கும் எவ்விதச் சம்பந்தமும் கிடையாது என்பதோடு தமது மனைவி அந்நிறுவனத்தில் ஒரு வெறும் உழைக்காத பங்காளிதான் என்று இங்கா தெரிவித்தார்.

தமது குற்றச்சாட்டு குறித்து இப்போது அஹமட் சொபியான் எம்எசிசியிடம் புகார் ஒன்றை செய்துள்ளார்.

TAGS: