’திராவிட மேம்பாட்டு வியூகம்’ தமிழ் நாட்டை முன்னிலைக்கு கொண்டு வந்துள்ளது – பிடிஆர்

‘திராவிட மேம்பாட்டு வியூகம்’ தமிழ் நாட்டை முன்னிலைக்கு கொண்டு வந்துள்ளது என்கிறார் தமிழ்நாட்டு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

‘திராவிட மேம்பாட்டு வியூகம்’ தமிழ் நாட்டை முன்னிலைக்குக் கொண்டு வந்துள்ளது என்கிறார் தமிழ்நாட்டு அமைச்சர் முனைவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.

இந்தியாவில் குஜராத் மாநிலத்தைவிடத் தமிழ்நாடு பல வகைகளில் முன்னணி வகிப்பதாகவும், அன்மையக் கருத்துக்கணிப்பில்  இந்தியாவில் திராவிட மாடல் திட்டங்கள், பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில்,, தமிழ்நாட்டை முன்னிலைக்குக் கொண்டு வந்துள்ளதாகவும் முனைவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

நேற்று (11.2.2023), மலாயாப் பல்கலைக்கழகத்தின் ஆசிய-ஐரோப்பிய மையத்தில்,  சுமார் 200 சிறப்பு வருகையாளர்களின் மத்தியில், தியாகராஜன் ஒரு மணி நேரம் உரையாற்றினார். நிகழ்வைப் மலாயாப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் இராஜா இராசையா வழி நடத்தினார்.

தமிழ் நாட்டில் சமீபத்தில் முறைப்படுத்தப்பட்ட பொருளாதார வளர்ச்சி, திராவிட இயக்கத்தின் தொடக்க காலத் தந்தைகளின் சிந்தனையில் தோன்றிய வேர்களைக் கொண்டுள்ளது என்றும், அது திராவிடப் பண்பாட்டு அடையாளத்தை  மையமாகக் கொண்டு மக்களை ஜனரஞ்சகமாக இயக்கப்படும் ஒரு வளர்ச்சி மூலோபாயத்திற்கான கட்டாய நிகழ்வை வழங்குகிறது என்றும் கூறினார்.

அதாவது, திராவிட சிந்தனை வெகுசன மக்களின் சிந்தனையாக உருவாக்கம் கண்டுள்ளது என்கிறார்.

மேலும் விளக்கையில்,  திராவிடம் என்ற கருத்து, தமிழ்நாட்டில் மேற்குடியினர் எதிர்ப்பு இயக்கமாக வேரூன்றி இருந்தது; அதன் நோக்கம் தமிழ்ச் சமூகத்திலும் ஆட்சியிலும் மேற்குடியினரின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாகும்.

அடிப்படையில் இதன் ஆரம்பக்கால கோரிக்கைகள் சமூக சமத்துவம், அதிக அதிகாரம் மற்றும் சுய நிர்ணயம் ஆகும். இந்த இயக்கத்தை ஆதரித்த அரசியல் கட்சியான நீதிக்கட்சி 1921 இல் சென்னை மாகாணத்தில் ஆட்சிக்கு வந்தது. இதன் வழிமுறைதான் திராவிடத்தின் அரசியல் ஆரம்பம் என்றார்.

“திராவிட கொள்கைகளில் சம உரிமைகள், சம வாய்ப்புகள், சமூக சமத்துவம் மற்றும் இயக்கம் ஆகியன பயனுள்ள சமூக அரசியல் நிறுவனங்களை உருவாக்குவதை மையமாகக் கொண்டவை.”

வெறும் வருமான வளர்ச்சி, மற்றும் அமெரிக்கா போல் ஒருமித்த அணுகுமுறையால் பிரதிபலிக்கும் வறுமைக் குறைப்பு ஆகியவற்றுக்கு மாறாக, வருமான சமத்துவமின்மையைக் குறைப்பதில் திராவிட மாடல் கவனம் செலுத்துகிறது. இது சாதி மற்றும் பாலின வேறுபாட்டுகளையும் களைய முற்படுகிறது.

சமூகத்தின் பாதிப்புக்குள்ளாகும் உறுப்பினர்களுக்கு நவீன பொருளாதாரத்தில் சம வாய்ப்புகளை வழங்குவதன் மூலம், தமிழ்நாடு ஒரு மாறும் வளர்ச்சி செயல்முறையை நிறுவியுள்ளது என்றார்.

முனைவர் பழனிவேல் தியாகராஜனின் இரண்டு பட்ஜெட்களும் திராவிட மாடலின் முக்கிய தூண்களை வலுப்படுத்துகின்றன. இவரின் வளர்ச்சி முயற்சியானது, நிதியமைச்சர் ஒருவர் மக்கள் நலனில் சமரசம் செய்யாமல், வட்டி செலுத்துவதற்காகக் கடன் வாங்குவதால் அதிகரிக்கும் கடன்கள், வளர்ந்து வரும் வருவாய், நிதிப் பற்றாக்குறை ஆகியவற்றை அலசித் தீர்வு காண்கிறது எனலாம்.

அமெரிக்கா ஒருமித்த அணுகுமுறையைப் பின்பற்றும் நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நெருக்கடியான நிதி மாடல்கள் போலல்லாமல், இந்த அணுகுமுறை சமூக நீதி மற்றும் கலாச்சார அடையாளத்துடன் நிதி ஒழுக்கத்தை சமநிலைப்படுத்துகிறது என்கிறார்.

“இடது சாரி, வலது சாரி நாடுகளுக்கு இடையிலான போட்டியாக உலகம் சுழன்று கொண்டிருக்கிறது. அனைவரும் சமம் என்பதே திராவிட மாடல். சாதி, மதம், இனம், பால் வேறுபாடின்றி அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிடம். திராவிட மாடலினால் பல்வேறு ரீதியாக முன்னேற்றம் அடைந்துள்ளோம் என்பதற்கான தரவுகள் உள்ளன,” என்றார்.

உதாரணமாக, பெண்கள் கல்வி, படிப்பறிவு கொண்ட சமூகம், குழந்தைகளுக்கான சத்துணவு, வேலைவாய்ப்பு, அதோடு எவ்வகையில் அரசு வருமானத்தை உற்பத்தித் திறன் அடிப்படையில் கூடியுள்ளது போன்றவையும் அடங்கும்.

நிகழ்வின் முடிவில் கலந்து கொண்டவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தனது ஒப்பீட்டுக் கணிப்பில், தமிழ்நாட்டின் தரவுகள் இந்தியாவில் பிற மாநிலங்களைவிட முன்னிலையில் இருப்பதற்குக் காரணம் திராவிடக் கொள்கைகள்தான் என்றாலும், அதன் தொடர்ச்சியும் வளர்ச்சியும் மேலும் மக்களுக்குப் பயனளிக்க சீரமைக்கபடவேண்டிய பணிகளும் அதிகம் உள்ளன என்றார்.

(update edited:19.04)