சைபர்ஜெயா ஏரி கொலை வழக்கில் 3 இந்தியர்கள் கைது

கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 11) சைபர்ஜெயாவில் உள்ள ஹாஜி ஃபிசாபிலில்லாஹ்(Haji Fisabilillah) மசூதிக்குப் பின்னால் உள்ள ஏரியில் மிதந்த ஒரு நபரின் மரணத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று இந்தியர்களைப் போலீசார் கைது செய்தனர்.

23 முதல் 52 வயதுக்குட்பட்ட மூவரும் சிலாங்கூர், பூச்சோங்கில் நடந்த தனித்தனி சோதனைகளில் கைது செய்யப்பட்டதாகச் செபாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி வான் கமருல் அஸ்ரான் வான் யூசோப்(Wan Kamarul Azran Wan Yusof) இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

நேற்று (பிப்ரவரி 12) இரவு 8 மணியளவில் பூச்சோங்கில் உள்ள கம்போங் ஸ்ரீ அமானில் நடத்தப்பட்ட முதல் சோதனையில், 23 மற்றும் 41 வயதுடைய இரண்டு பேரைப் போலீசார் கைது செய்து மூன்று மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.

52 வயதான மூன்றாவது சந்தேகநபர் இன்று அதிகாலை 2.30 மணியளவில் தாமான் புச்சோங் ப்ரிமாவில் கைது செய்யப்பட்டார், மேலும் இரத்தக் கறையுடன் கூடிய கால்சட்டையையும் போலீசார் கைப்பற்றினர்.

அதற்கு முன்னதாக, இன்று அதிகாலை 12.05 மணியளவில், புத்ராஜெயா-சைபர்ஜெயா ரிங் ரோடு பாலத்தின் கீழ் ஒரு மாட்டு கொட்டகையிலிருந்து ஒரு அரிவாளை போலீசார் மீட்டனர்.

இந்தக் கொலைக்கான காரணம் முக்கோண காதல் என்று நம்பப்படுவதாகவும், தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் வான் கமருல் அஸ்ரான் கூறினார்.

சந்தேகநபர்கள் மூவரும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (19) வரை ஏழு நாட்கள் விசாரணைக்காக தடுத்து  வைக்கப்பட்டுள்ளனர்.