திரித்துக்கூறி விட்டார்கள் என்கிறார் ராமசாமி, மறுபடியும்

துணை முதலமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் கூறியிருப்பது குறித்து கொஞ்சமும் கலக்கம் உறாத பி.ராமசாமி,  செய்தித்தாள் ஒன்று தாம் சொன்னத்தைத் திரித்துக் கூறியதுதான் இப்போதைய சர்ச்சைக்குக் காரணம் என்று பழியைச் செய்தித்தாள்மீது போட்டிருக்கிறார்.

டிசம்பர் 23-இல் த ஸ்டார் செய்தித்தாளில் “நெருக்கடிநிலையில் டிஏபி” என்ற தலைப்பில் வெளிவந்த செய்தியை டிஏபி துணைத் தலைமைச் செயலாளருமான ராமசாமி மறுத்தார்.

“டிசம்பர் 23 காலையிலேயே சம்பந்தப்பட்ட செய்தியாளரை அழைத்து அச்செய்தியைச் சுட்டிக்காட்டி வருத்தம் தெரிவித்தேன்”, என்று கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டமொன்றில் அவர் சொன்னார்.

“அதன் இணையத்தளத்தில் அன்றே திருத்தம் போட்டு விடுவதாக அச்செய்தியாளர் உறுதிகூறினார்.

“ஆனால் டிசம்பர் 24-இல் வெளிவந்த அறிக்கை ‘டிஏபி ராமசாமி பல்லவியை மாற்றிக்கொண்டார்’ என்று கூறியது.” 

டிசம்பர் 23 செய்தி அறிக்கையில், அடிநிலை உறுப்பினர்களின் கோரிக்கைகளைக் கவனிப்பதில்லை என்பதால் தம்மைக் கவிழ்க்க சதி நடப்பதாக ராமசாமி கூறியதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

“என்னைக் கவிழ்க்க பெருந் திட்டம் தீட்டுகிறார்கள்”, என்று ராமசாமி கூறியதாகக் கூறப்பட்டிருந்தது.

இதனால் ஆத்திரமடைந்த டிஏபி தேசியத் தலைவர் கர்பால், கட்சி தொடர்பாகவும் தலைவர்களைத் தாக்கியும் எவரும் அறிக்கை வெளியிடக்கூடாது என்ற மத்திய செயல் குழுவின் (சிஇசி) உத்தரவை ராமசாமி மீறிவிட்டார் என்றும் அதனால் அவர் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

“டிஏபி தலைவர்கள் ஊழல்மிக்கவர்கள்  என்றும் என்னைக் கவிழ்க்க பினாங்கில் சதி நடப்பதாகவும் நான் சொன்னதாகக் கூறப்படுவதை ஆணித்தரமாக மறுக்கிறேன்”, என்று ராமசாமி கூறினார்.

டிசம்பர் 21-இல், மாநில விவகாரங்கள் பற்றி விவாதிக்க, த ஸ்டார் செய்தியாளர் உள்பட, பல செய்தியாளர்களைச் சந்தித்ததாகவும் ஆனால், அச்செய்தித்தாள் தாம் சொன்னதைத் திரித்துக்கூறிவிட்டதாகவும் அவர் விளக்கினார்.

அச்செய்தியில் இடம்பெற்றிருக்கும் தகவல்கள் “அடிப்படை அற்றவை”, “அற்பமானவை” என்றும் அதில் தமக்கு “அநீதி” இழைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.

“கட்சியின் உள்விவகாரங்கள் பற்றி செய்தித்தாள்களுடன் ஒருகாலும்  பேச மாட்டேன்”, என்றாரவர்.

நிலைமையை விளக்கி சிஇசி-க்குக் கடிதம் எழுதினாரா என்று வினவியதற்கு ஊடகங்கள்வழி தம்மைத் தற்காத்துக்கொள்வதையே விரும்புவதாக ராமசாமி பதிலிறுத்தார்.

“விளக்கமளிக்கத்தான் இந்தச் செய்தியாளர் கூட்டம்”, என்றாரவர்.

ராமசாமியுடன் சார்ல்ஸ் சந்தியாகு (கிள்ளான்), எம்.மனோகரன் (தெலுக் இந்தான்) ஆகிய டிஏபி நாடாளுமன்ற உறுப்பினர்களும் செனட்டர் எஸ்.ராமகிருஷ்ணனும் சுங்கை சட்டமன்ற உறுப்பினர் ஏ.சிவநேசனும் இருந்தனர்.

ராமசாமிக்கும் கர்பாலுக்கும் “வார்லார்ட்-கோட்பாதர்” சச்சரவால் மூண்ட பதற்றம் தணிந்து வரும் வேளையில் இந்தக் கிறிஸ்மஸ்கால வாக்குவாதம் டிஏபி-க்குள் நிலவும் உள்சண்டையை மீண்டும் வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறது.

கர்பாலுடன் பிரச்னை ஏதுமில்லை

கர்பாலுடன் பேசுவதுண்டா என்று வினவியதற்கு,“பேசாமல் என்ன? அவர் (கர்பால்) தேசியத் தலைவர் ஆயிற்றே. அவருடன் எனக்குப் பிரச்னை எதுவுமில்லை…அவ்வப்போது  கர்பாலை அழைத்து ஆலோசனை கேட்பதுண்டு”, என்று ராமசாமி கூறினார்.

மாநில துணை முதலமைச்சர் பதவியைத் துறப்பாரா என்று வினவியதற்கு மறுமொழி கூறாக ராமசாமி, அடுத்த கட்ட நடவடிக்கையை கட்சிதான் தீர்மானிக்க வேண்டும் என்றார்.

அண்மைய வாரங்களில் ராமசாமி, செய்தித்தாள்கள் தாம் சொன்னதைத் திரித்துக்கூறுவதாகக்  குறிப்பிடுவது இது இரண்டாம் முறையாகும்.

இதற்குமுன் ராமசாமி, தமிழ் நாளேடான மக்கள் ஓசை தாம் சொன்னதைத் திரித்துக்கூறி விட்டதாகவும் அதன் விளைவாக “காட்ப்பாதர்-வார்லார்ட்’ சர்ச்சை மூண்டது  என்றும் குறைகூறினார்.

அச்செய்தித்தாள் பின்னர், அதை ஒப்புக்கொண்டு அதற்கு ஒரு விளக்கத்தையும் வெளியிட்டிருந்தது.

TAGS: