குழந்தைகள், இளம் பருவத்தினருக்கு மனநல கோளாறுகள் ஏற்படும் அபாயம் – சாலிஹா

குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் மனநலக் கோளாறுகளின் அபாயத்தில் உள்ள குழுக்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர், ஆனால் இந்தப் பிரச்சினை அதற்குரிய கவனத்தைப் பெறவில்லை என்று சுகாதார அமைச்சர் சாலிஹா முஸ்தபா(Zaliha Mustafa) கூறுகிறார்.

உடல் மாற்றம், அறிவாற்றல் முதிர்ச்சி மற்றும் உணர்ச்சி மேலாண்மை ஆகியவற்றின் செயல்பாட்டில் குழந்தை பருவத்திலிருந்து முதிர்வயதுக்கு மாறுவது மிகவும் முக்கியமான கட்டமாகும், மேலும் அவர்கள் சமூக சூழலுக்கு ஏற்பத் தகவமைக்கத் தவறும்போது  புறக்கணிக்கப்படும் போக்கைக் கொண்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

“மருத்துவ அவதானிப்புகளின் அடிப்படையில், கிளினிக்குகளுக்கு வரும் பெரும்பாலான டீன் ஏஜ் நோயாளிகள் தாங்கள் அனுபவிக்கும் உணர்ச்சி மன அழுத்தத்தை விடுவிப்பதற்காகத் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்ளத் தொடங்கியுள்ளனர்”.

அவர்கள் பிரச்சினைகளில் சிக்கியுள்ளனர், அவற்றைத் தீர்க்கப் போதுமான அறிவு இல்லை. இது அவர்கள் வெட்கப்படுவதற்கும்,  சிரமத்திற்கு ஆளாவதற்கும், திறமையற்றவர்களாகவும் மாற்றுகிறது என்று ஜொகூர் பாருவில் உள்ள பெர்மாய் மருத்துவமனையில் நேற்று குழந்தை மற்றும் வளர் இளம் பருவ மனநலப் பிரிவின் தொடக்க விழாவில் சாலிஹா (மேலே) கூறினார்.

மனநலப் பிரச்சினைகள் பெரியவர்களுக்கு மட்டுமே ஏற்படக்கூடும் என்ற கருத்தும் குழந்தைகளின் மனநலம் தொடர்பான பிரச்சினைகளைப் புறக்கணிக்கக் காரணமாகிறது என்று அவர் கூறினார்.

“கோவிட் -19 தொற்றுநோய்க்கு முன்பு, உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரில் 10 முதல் 20% பேர் மனநல கோளாறுகளை அனுபவித்ததாக உலக சுகாதார அமைப்பு (WHO) மதிப்பிட்டுள்ளது, அதே நேரத்தில் 50% பேர் 14 வயதிற்குள் கடுமையான மனநல பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர்,” என்று ஜாலிஹா கூறினார்.

ஆராய்ச்சியின் அடிப்படையில், அதிர்ச்சி ஒரு நபரின் மரபணுக்களைப் பாதிக்கும் மற்றும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அனுப்பப்படலாம் என்று அவர் கூறினார்.

“எனவே, குழந்தைகளை அதிர்ச்சிக்குள்ளாக்கக்கூடிய காரணிகளுக்கு அதிக உணர்திறன் இருக்குமாறு அனைவருக்கும், குறிப்பாகப் பெற்றோரிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்”.

“குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரின் உணர்ச்சி வளர்ச்சிக்கு இணக்கமான மற்றும் ஆரோக்கியமான சூழலை வழங்க அனைத்து தரப்பினரும் உதவ வேண்டும், அதாவது குழந்தை வளர்ப்பு அறிவை அதிகரிப்பது,” என்று அவர் மேலும் கூறினார்.

குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு ஒரு துயரம் ஏற்பட்டால் அவர்களுக்கு உதவ, உளவியல் முதலுதவி பற்றிய அறிவுடன் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளுமாறு சுகாதாரப் பணியாளர்களை அவர் வலியுறுத்தினார்.

பெர்மாய் மருத்துவமனையின்(Permai Hospital) ஐரிஸ் காம்ப்ளக்ஸில்(Iris Complex) உள்ள குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கான மனநல வார்டு கடந்த மாதம் தனது செயல்பாட்டைத் தொடங்கியது என்று சாலிஹா கூறினார்.