முகிடினை சிக்க வைக்க வான் சைஃபுலுக்கு லஞ்சமா? எம்ஏசிசி மறுக்கிறது

முன்னாள் பிரதமர் முகைடின் யாசினை ஊழல் வழக்கில் சிக்க வைக்க  பெர்சத்து தகவல் தலைவர் வான் சைபுல் வான் ஜானுக்கு  MACC ரிம10 மில்லியன் வழங்கியதாக வெளியான தகவலை MACC  மறுத்துள்ளது.

MACC தலைமை ஆணையர் அசாம் பாக்கி, டிக்டாக்கில் பதிவேற்றப்பட்ட 44 விநாடிகள் கொண்ட வீடியோ கிளிப்பில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்ததற்காக வான் சைபுலின் ஃப்ரீலான்ஸ் ஆராய்ச்சியாளர் என்று கூறிக் கொண்ட ஒரு நபரைக் கடுமையாகச் சாடினார்.

“இது ஒரு பொறுப்பற்ற நபர், அவருக்கு எதிராக எம்ஏசிசி சட்ட நடவடிக்கை எடுக்கும்”.

“இது அவதூறு, இது எம்ஏசிசி மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் நபர்,” என்று அசாம் (மேலே) ஃப்ரீ மலேசியா டுடேவிடம் கூறினார், அந்த நபருக்கு எதிராக ஆணையம் விரைவில் அறிக்கை தாக்கல் செய்யும் என்றார்.

முன்னதாக, ஜன விபாவா திட்டம் தொடர்பாக வான் சைபுல் மீது இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன – முதலாவது குறிப்பிடப்படாத தொகையை லஞ்சம் கோரியதற்காகவும், இரண்டாவது ஜூலை 8, 2022 முதல் செப்டம்பர் 30, 2022 வரை ரிம6.96 மில்லியன் லஞ்சம் பெற்றதற்காகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இந்தக் குற்றச்சாட்டுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்கு மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று பெர்சத்து தலைவர் கூறினார்.