மாநிலத் தேர்தல்கள்: BN வேட்பாளர்கள் தொடர்ந்து BN சின்னத்தைப் பயன்படுத்துவார்கள்- ஜாஹிட்

வரவிருக்கும் மாநிலத் தேர்தலில் போட்டியிட தனது கூட்டணி அதன் சொந்த சின்னத்தைப் பயன்படுத்தும் என்று BN தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி(Ahmad Zahid Hamidi) கூறினார்.

“தற்போதுள்ள அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒத்துழைப்பை நாங்கள் நிறுவுவோம், ஆனால் ஆறு மாநிலங்களுக்கான தேர்தலில் BN வேட்பாளர்கள் தொடர்ந்து BN சின்னத்தைப் பயன்படுத்துவார்கள்,” என்று இன்று ஒராங் அஸ்லி மேம்பாட்டுத் துறைக்கு (Jakoa) வருகை தந்தபின்னர் செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறியதாகப் பெர்னாமா தெரிவித்துள்ளது.

ஆறு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட தேர்தல்களுக்கான தயாரிப்பு ஒற்றுமை அரசாங்கத்தின் செயலகக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் ஜாஹிட் (மேலே) கூறினார்.

“ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள கட்சிகளிடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன, ஆனால் எதுவும் முடிவு செய்யப்படவில்லை,” என்று அம்னோ தலைவர் மேலும் கூறினார்.

நெகிரி செம்பிலான், பினாங்கு, சிலாங்கூர், திரங்கானு, கிளந்தான் மற்றும் கெடா ஆகிய ஆறு மாநிலங்கள் இந்த ஆண்டுத் தேர்தல்களை நடத்துகின்றன.

இது தொடர்பான விஷயத்தில், சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி நேற்று முகநூலில், கோலாலம்பூரில் பிற்பகல் தேநீர் அமர்வின்போது ஒரு உடன்பாடு எட்டப்பட்டதாகக் கூறினார், இது நேற்று தொடங்கி இரண்டு நாட்கள் கூடிய 261 வது ஆட்சியாளர்களின் மாநாட்டுடன் இணைந்தது.

சுல்தான்கள், யாங் டி-பெர்துவான் பெசார் மற்றும் ஆளுநரின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பு இந்தப் புரிந்துணர்வு அந்தந்த கட்சி மட்டத்தில் விவாதிக்கப்படும் என்று அமிருடின் கூறினார்.

அதே செய்தியில், நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் அமினுடின் ஹருன், பினாங்கு முதலமைச்சர் சோ கோன் இயோ, கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர், தெரெங்கானு அஹ்மத் சம்சூரி மொக்தார் மற்றும் கிளந்தான் மந்திரி பெசார் அகமது யாகோப் ஆகியோருடன் அவர் இருக்கும் புகைப்படத்தையும் அமிருடின் பகிர்ந்துள்ளார்.

இதற்கிடையில், கூட்டத்தின் புகைப்படத்தையும் தனது முகநூல் பதிவில் பதிவேற்றிய சனுசி, மாநில சட்டமன்றங்களை கலைக்க மிகவும் பொருத்தமான தேதி ஜூன் மூன்றாவது அல்லது நான்காவது வாரம் என்று தான் நம்புவதாகக் கூறினார்.

சோ தனது முகநூல் பதிவில், “மாநிலத் தேர்தல் தேதியைப் பொறுத்தவரை, ஒரு முடிவை எடுப்பது தேர்தல் ஆணையத்தின் அரசியலமைப்பு பொறுப்பாகும்,” என்று கூறினார்.